Published:Updated:

இந்துக்களை புண்படுத்தியதாக வழக்கு: கருணாநிதிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

இந்துக்களை புண்படுத்தியதாக வழக்கு: கருணாநிதிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
இந்துக்களை புண்படுத்தியதாக வழக்கு: கருணாநிதிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
இந்துக்களை புண்படுத்தியதாக வழக்கு: கருணாநிதிக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: இந்துக்களை புண்படுத்தும் வகையில் பேசியதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் பதி்ல் அளிக்கும்படி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க தலைவர் கருணாநிதி, கடந்த 2002ஆம் ஆண்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது இந்து என்றால் திருடன் என்று பொருள் எனக் குறிப்பிட்டார். அவருடைய இந்தப் பேச்சுக்கு அப்போதே கடும்  எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த கௌதமன் என்பவர், மாம்பலம் போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால், அந்தப் புகாரைப் பெற்றுக் கொள்ள போலீஸார் மறுத்துவிட்டனர். இதையடுத்து, கௌதமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், தன்னுடைய புகாரைப் பதிவு செய்து, இந்துக்களின் உணர்வுகள் புண்படும்படி பேசிய கருணாநிதி மீது உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கௌதமனின் புகாரைப் பெற்றுக் கொண்டு வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த 2006ஆம் ஆண்டு, மாம்பலம் போலீஸார் கருணாநிதி மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், இந்த வழக்கில் வேறு எந்த மேல் நடவடிக்கையையும் போலீஸார் மேற்கொள்ளவில்லை. போலீஸாரின் இந்த மெத்தனப்போக்கை கண்டித்து மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி கௌதமன் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இது  தொடர்பாக பதில் அளிக்கும்படி தி.மு.க தலைவர் கருணாநிதி, சென்னை காவல்துறை ஆணையர், மாம்பலம் காவல்துறை ஆய்வாளர் ஆகியோர் 4 நாளில் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

ஜோ.ஸ்டாலின்