Published:Updated:

நேரு முதல் மோடி வரை.... ரூ. 271 கோடியில் தயாராகும் பிரதமர்கள் அருங்காட்சியகம்!

நேரு முதல் மோடி வரை.... ரூ. 271 கோடியில் தயாராகும் பிரதமர்கள் அருங்காட்சியகம்!
நேரு முதல் மோடி வரை.... ரூ. 271 கோடியில் தயாராகும் பிரதமர்கள் அருங்காட்சியகம்!

முன்னாள் பிரதமர்களின் வாழ்க்கை, அவர்கள் செய்த வளர்ச்சிப் பணி ஆகியவற்றை எடுத்துரைக்கும் விதமாக டெல்லியில் பிரதமர்கள் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. 

நம் நாடு சுதந்திரம் பெற்ற பிறகு இதுவரை பல பிரதமர்கள் இந்தியாவை ஆட்சி செய்துள்ளனர். அவர்களில் சிலர் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளனர். மறைந்த தலைவர்களைப் பற்றி இந்தக் கால தலைமுறையினர் அறிந்துகொள்ளும் விதமாக டெல்லியில் பிரதமர்கள் அருங்காட்சியகத்தை அமைக்க மத்திய அரசு முடிவுசெய்தது. 

அதன்படி டெல்லியில் உள்ள தீன் மூர்த்தி எஸ்டேட் பகுதியில் 10,975 சதுர மீட்டர்கள் பரப்பளவில் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கு ரூ.271 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. நேற்று, மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா இக்கட்டடத்துக்காக அடிக்கல்நாட்டினார். அடுத்த வருடத்துக்குள் இந்த அருங்காட்சியகத்தின் பணிகள் நிறைவடைந்து பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அருங்காட்சியகம் இரண்டு மாடிகளாக கட்டப்படவுள்ளது. முன்னாள் பிரதமர் நேரு முதல் தற்போது ஆட்சியில் உள்ள நரேந்திர மோடி வரை அனைத்து பிரதமர்களின் வாழ்க்கை, இந்தியாவுக்காக அவர்கள் செய்த வளர்ச்சிப் பணி போன்றவை இடம் பெறவுள்ளன.

இது பற்றி பேசிய அமைச்சர் சர்மா, ``பிரதமர்கள் பற்றி வரலாற்றில் என்ன இருக்கிறதோ அவை அனைத்தும் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெறவுள்ளது. பிரதமர்கள் தனிப்பட்டவர்கள் அல்ல, அவர்கள் தங்களுக்கு தாங்களே கட்டளையிட்டு செயல்படக்கூடியவர்கள். நம் நாட்டில் இதுவரை ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்த்ரி, இந்திரா காந்தி ஆகிய மூன்று பிரதமர்களுக்கு மட்டுமே நினைவிடம் உள்ளது. ஆனால், தற்போது கட்டப்படவுள்ள இந்த அருங்காட்சியகத்தில் நேரு முதல் மோடி வரை அனைவரது வாழ்க்கையும் பணிகளும் இடம்பெறும். வருங்காலத்தில் வரும் பிரதமர்களும் இந்த அருங்காட்சியகத்தில் இடம் பெறுவர்” எனத் தெரிவித்துள்ளார்.