அழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை! -டி.கே.எஸ்.இளங்கோவன் பதவியைப் பறித்த ஸ்டாலின் | The reason behind DMK relieves TKS Elangovan as party's spokesperson

வெளியிடப்பட்ட நேரம்: 10:55 (16/10/2018)

கடைசி தொடர்பு:11:11 (16/10/2018)

அழகிரி விவகாரம் முதல் சோனியா வருகை வரை! -டி.கே.எஸ்.இளங்கோவன் பதவியைப் பறித்த ஸ்டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அண்ணாதுரை சிலை அருகே, கருணாநிதிக்கு ஆளுயர சிலை வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சிலை அமைய இருக்கும் இடம், சிலையின் வடிவமைப்பு ஆகியவற்றைப் பார்வையிட்டு, கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி வந்தார் ஸ்டாலின்.

இளங்கோவன்

இந்த நிலையில், டி.கே.எஸ்.இளங்கோவன் பதவி பறிக்கப்பட்டிருப்பதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள். `` தி.மு.க தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, கட்சியின் முதன்மைப் பொறுப்பில் இருந்த இளங்கோவனின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. வருகின்ற நவம்பர் 15-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் உருவச் சிலையை சோனியா காந்தி திறந்துவைக்கிறார் என்ற தகவலை இளங்கோவன் வெளியில் சொன்னதுதான் காரணம்" என விவரித்த தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், இளங்கோவன் கடந்து வந்த பாதையைப் பற்றி நம்மிடம் விளக்கினார். 

`` அ.தி.மு.கவில்தான் முதலில் இருந்தார் டி.கே.எஸ்.இளங்கோவன். தி.மு.கவில் இருந்து பிரிந்து ம.தி.மு.க உருவானபோது வைகோ பக்கம் இணைந்தார். பிறகு, அங்கிருந்து தி.மு.கவுக்கு வந்தார். அவர் கட்சிக்குள் வந்த காலத்தில் துரைமுருகன், கனிமொழி போன்றவர்கள் அவருக்கு மிகவும் உதவியாக இருந்தனர். அவர்களது உதவியால்தான் 2003-ம் ஆண்டு தி.மு.க-வின் செய்தித் தொடர்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 2012-ம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமாக இருந்த காலத்தில் உணவு பாதுகாப்பு மசோதா தொடர்பாக தி.மு.க தலைமை சொல்லாத ஒரு விஷயத்தை, இவர் ஊடகங்களில் கூறவே அது பெரும் சர்ச்சையானது. இதில் கடுப்பான கருணாநிதி, அறிவாலயத்துக்கும் வீட்டுக்கும் சில நாள்கள் வர வேண்டாம் எனக் கூறிவிட்டார். பிறகு மன்னிப்பு கடிதம் கொடுத்து, சில நாள்களுக்குப் பிறகே அவர் கட்சியில் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்” என விவரித்தவர், 

``தலைமையின் அனுமதி இல்லாமல் பல விஷயங்களை ஊடகங்களில் தெரிவித்ததால் கருணாநிதியின் கோபத்துக்கு பலமுறை ஆளாகியிருக்கிறார் இளங்கோவன். கனிமொழியின் ஆதரவால்தான் இத்தனை நாள்களும் கட்சி நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வந்தார். கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாமல் போன பிறகும் கட்சி தொடர்பான விஷயங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்து வந்தார். இதை அறிந்து ஸ்டாலினும் பலமுறை அவரை எச்சரித்தார். இதன் உச்சகட்டமாக, எஃப்.எம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இளங்கோவன் அழகிரி தொடர்பாகவும் அவர்களின் குடும்பம் சார்ந்த சில விஷயங்களையும் பேசியிருக்கிறார். இதை ஸ்டாலின் ரசிக்கவில்லை. 

இதுதொடர்பாக, மதுரையில் நடந்த கருணாநிதி அஞ்சலி கூட்டத்தின்போது இளங்கோவனை அழைத்து கடுமையாகச் சாடினார். அதன் பிறகாவது இளங்கோவன் அமைதி காத்திருக்கலாம். நேற்று ‘நவம்பர் 15-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறக்கப்படவுள்ளது. இதில் கலந்துகொள்ள பல வடமாநிலத் தலைவர்களை அழைக்கும் பணி நடைபெறுகிறது' எனப் பேசியிருக்கிறார். சிலை திறப்பது தொடர்பாகக் கட்சி தலைமையே இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை அதற்குள் இவர் அறிவித்தது ஸ்டாலினையும் கழக மூத்த நிர்வாகிகளையும் பெரும் கோபத்தில் ஆழ்த்தியது. இளங்கோவன் அறிவித்த செய்தி நேற்று மாலை 7 மணிக்கு ஸ்டாலின் காதுகளுக்குச் செல்லவே, ` முந்திக் கொண்டு அறிவிப்பை வெளியிட இவர் யார்?' எனக் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இதன்பிறகு, அறிவாலயத்துக்கு போன் செய்து இளங்கோவனை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கும்படி கூறிவிட்டார்” என்றார் நிதானமாக. 


[X] Close

[X] Close