சித்துவுக்கும் பி.ஜே.பி-க்கும் இடையே என்ன நடக்கிறது? | What is the issue between Navjot Singh Sidhu and BJP?

வெளியிடப்பட்ட நேரம்: 19:47 (16/10/2018)

கடைசி தொடர்பு:19:47 (16/10/2018)

சித்துவுக்கும் பி.ஜே.பி-க்கும் இடையே என்ன நடக்கிறது?

தமிழ் மொழி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து பேசியது தொடர்பான கட்டுரை...

சித்துவுக்கும் பி.ஜே.பி-க்கும் இடையே என்ன நடக்கிறது?

ருகாலத்தில், கிரிக்கெட்டில் 'சிக்ஸர்கள்' அடித்து, ரசிகர்களைக் குதூகலப்படுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து,  சமீபகாலமாக அரசியலில் சிக்ஸர் அடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்கவைக்கிறார். தற்போது, பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அமைச்சராக இருக்கும் சித்துவுக்கும், மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசுக்கும் ஏழாம்பொருத்தமாக இருக்கிறது.

பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரிக் -இ- இன்சாஃப் கட்சி, 116 இடங்களில் வெற்றிபெற்று, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பிரதமராகப் பொறுப்பேற்றார் இம்ரான் கான். அவரின் பதவியேற்பு விழாவில் நண்பர் என்ற முறையில் பங்கேற்ற சித்து, பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜாவேத் பாஜ்வாவை கட்டித்தழுவி, மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்ட செயல், இந்தியாவில் மிகப்பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. சித்துவின் இந்தச் செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. பி.ஜே.பி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் சித்துவின் இந்தச் செயலை விமர்சித்ததுடன், அவருடைய தலைக்கு வெகுமதி அறிவித்து பரபரப்பை மேலும் அதிகரித்தது. 

மோடியுடன் சித்து

இந்த நிலையில், சமீபத்தில் இமாசலப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சித்து, தமிழகத்தையும் பாகிஸ்தானையும் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். அப்போது அவர், தமிழ்நாட்டையும் தமிழ் மொழியையும் இழிவுப்படுத்திப் பேசியதாக சித்துவுக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. அவர், "நான் தமிழகம் சென்றால், அங்குள்ள மக்கள் பேசும் தமிழ் மொழியை என்னால் புரிந்துகொள்ள முடியாது. 'வணக்கம்' என்ற ஒருவார்த்தை மட்டுமே எனக்குப் புரியும். அந்த மாநில மக்களின் உணவுப் பழக்கமும் எனக்குப் பிடிக்காது. தென் இந்திய உணவுகளையும், தமிழக உணவுகளையும் தொடர்ந்து சாப்பிட முடியாது. தமிழ்க் கலாசாரம், பஞ்சாப் மாநில கலாசாரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஆனால், பாகிஸ்தானுக்கு நான் சென்றால், அங்கு மக்கள் பஞ்சாபி பேசுகிறார்கள். பஞ்சாபில் இருக்கும் கலாசாரமே பாகிஸ்தானில் இருக்கிறது. பாகிஸ்தானிலுள்ள மக்களுடன் சேர்ந்து வாழ்வதில் எந்தவிதமான கஷ்டமும் இல்லை. கலாசாரமும் ஒரேமாதிரியாக இருக்கிறது. இது, மிகவும் வியப்பான விஷயம்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுபோன்று பேசியதற்காக, தற்போது சித்துவுக்கு எதிராக மீண்டும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இதுபற்றி, பி.ஜே.பி செய்தித் தொடர்பாளர் சம்பத் பத்ரா, "பாகிஸ்தான் மீது மிகவும் பற்றுள்ளவராக சித்து இருப்பதால், பஞ்சாப் அமைச்சரவையில் இருந்து விலகி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமைச்சரவையில் சேர்ந்துக்கொள்ளலாம். அதுதான் அவருக்கு எங்களுடைய கனிவான அறிவுரை" என்று கடுமையாகச் சாடியிருந்தார். 

தமிழிசை செளந்தரராஜன்

தமிழக பி.ஜே.பி தலைவர் தமிழிசை செளந்தரராஜன், "தமிழகத்தில், தமிழை யாராவது இழிவாகப் பேசினால், உடனடியாக இங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் கொதித்தெழுவர். அதுபோன்று பேசியவர், தமிழ் எதிர்ப்பாளரா என்பதைவிடவும், பி.ஜே.பி ஆதரவாளரா என்பதை உன்னிப்பாகக் கவனிப்பார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து, 'தமிழகத்தைவிட, பாகிஸ்தானுக்குப் போவது சிறந்தது; தமிழக உணவுப் பழக்கத்தைவிட, பாகிஸ்தான் உணவு சிறந்தது' எனப் பேசியுள்ளார். அவரின் இந்தப் பேச்சுக்கு தமிழகத்தில் இருந்து, ஓர் எதிர்க்குரல்கூட எழும்பவில்லை. இதே கருத்தை, பி.ஜே.பி தலைவர் யாராவது பேசியிருந்தால், கண்டன அறிக்கைகள் குவிந்திருக்கும். இன்று, எங்கோ எல்லாரும் ஒளிந்துகொண்டுள்ளனர். சித்துவின் கருத்துகுறித்து காங்கிரஸ் என்ன சொல்கிறது? அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என்ன சொல்கின்றனர்?" என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர், இந்தப் பிரச்னைக்காக தமிழக அரசியல் கட்சிகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினார். 

ரவிக்குமார்இந்த விவகாரம்குறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். "சித்து பேசிய கருத்து ஒரு பெரிய பிரச்னையே அல்ல. தமிழிசை செளந்தரராஜன்தான் இதைப் பெரிதுபடுத்துகிறார். குறிப்பாக, ஒரு நாட்டில் ஒரே மொழியில் பேசிப் பழகியவர்களுக்கு, அந்த மொழி சார்ந்த, பண்பாடு சார்ந்த மக்களுடன் இணக்கமும் ஓர் ஈர்ப்பும் ஏற்படுவது இயற்கைதான். அதைத்தான் சித்து வெளிப்படுத்தியுள்ளார். தனக்குப் பிடித்த விஷயங்களை ஒளிவுமறைவின்றி தெரிவித்திருக்கிறார். உதாரணமாக, நமக்கே 'இந்த உணவு பிடிக்கும்; இந்த மொழி பிடிக்காது' என்று சொல்வோம். அதைத்தான் அவர் உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கிறார். இதை வைத்து, நாம் தமிழ்நாட்டை சித்து குறைத்து மதிப்பிட்டுவிட்டார் என்று சொல்லக்கூடாது. அதற்காக, பாகிஸ்தானுடனும் அவரை ஒப்பிடக் கூடாது. அவர், இதற்கு முன்பு நல்ல கிரிக்கெட் வீரராக இருந்திருக்கிறார். இந்திய அணிக்கு அவருடைய பங்களிப்பு அளப்பரியது. எனவே, பாகிஸ்தானுடன் அவரைத் தொடர்புபடுத்திப் பேசுவது நியாயமானது அல்ல. காங்கிரஸில் அவர் இருப்பதால்தான் சித்துவுக்கு நெருக்கடி கூடுகிறது" என்றனர். 

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், "பஞ்சாப் மாநில மக்கள் தமிழகத்துடன் இணக்கமாக இருக்கிறார்கள். அதுபோல, நம் தமிழக மக்களும் பஞ்சாபி மொழிபேசும் மக்களோடு நட்பு பாராட்டி வருகிறார்கள். அவர்களது உணவு இங்கே பிரபலமாக இருக்கிறது என்பதற்கு, நெடுஞ்சாலை ஓரங்களில் காணப்படும் 'பஞ்சாபி            தாபா'-க்களே சான்று. அந்தப் பெயரில் ஆங்காங்கே ஹோட்டல்கள் நடத்தி அவர்களின் கலாசாரத்தை நம்மிடையே பகிர்ந்துகொள்கின்றனர்.  பஞ்சாபி மக்களின் கவாலி நடனம், தமிழ் சினிமாவில் பிரபலமான ஒன்று. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், தன்னுடைய திரைப்படங்களில் கவாலி நடனமாடிப் பாடி நடித்திருக்கிறார். இப்படி, தமிழர்களும் பஞ்சாப் மக்களும் பரஸ்பரத்துடன் ஒருவருக்கொருவர் எந்தவித வேறுபாடும் இல்லாமல் மகிழ்ச்சியுடனேயே வாழ்ந்துவருகிறார்கள். இவற்றை, சித்து அறியாமல் பேசியிருக்கிறார். அவர் சொன்னதைப் பொதுவான கருத்தாகவே கருத வேண்டும். அதை, பி.ஜே.பி அரசியலாக்க நினைக்கிறது. அவர்களுக்கு, தமிழ்மீது உண்மையிலேயே பிரியம் இல்லை. தமிழ் மரபை அழிப்பதற்குத்தான் அவர்கள் முயல்கிறார்கள். அதனால்தான், இங்கே கொண்டுவந்து புஷ்கரம் என்ற அந்நிய வழக்கத்தைத் திணிக்கிறார்கள்" என்றார்.

ஹர்பன்ஸ் சிங்'சித்து மீது வழக்குத் தொடுப்போம்!'

சிரோமணி அகாலி தளம் கட்சியின் தமிழ்நாடு பிரிவுத் தலைவர் ஹர்பன்ஸ் சிங், "தமிழ்நாடு எங்களை வாழவைத்த பூமி. இந்த மாநிலத்தைக் குறைத்து மதிப்பீடுசெய்து யார் பேசினாலும், நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்போம். சென்னை மாநகரில் 500-க்கும் மேற்பட்ட சீக்கிய குடும்பங்கள் வசிக்கிறோம். தியாகராயா நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள குருத்வராவில் ஞாயிறுதோறும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை சிறப்பு வழிபாடு நடைபெற்றுவருகிறது. பைசாகி, குருநானக் பிறந்த தினம், தீபாவளிப் பண்டிகை உள்ளிட்ட பண்டிகைகளையும் நாங்கள் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இங்குள்ள மக்களுடன் சேர்ந்து கொண்டாடுகிறோம். மேலும், கல்வி, மருத்துவ உதவிகளையும் செய்துவருகிறோம். எங்களை தமிழக மக்கள் அவர்களின் சொந்தச் சகோதரர்கள் போலவே நடத்துகிறார்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டு மண்ணின் வரலாறு, பண்பாடு, கலாசாரம் போன்ற எதைப்பற்றியும் தெரியாமல் சித்து பேசியுள்ளார். அவரின் இந்தச் சர்ச்சைக்குரிய பேச்சைக் கண்டித்து, அவருக்கு எதிராக வழக்குத் தொடர்வோம்’’ என்றார்.

சித்துவுக்கு எதிராகவும் சிக்ஸர்கள் அடிக்கத் தொடங்கிவிட்டன, எதிர்க்கட்சிகள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்