Published:Updated:

கதிகலக்கும் கம்பம்!

கம்பு... கத்தி... கல்...

பிரீமியம் ஸ்டோரி
கதிகலக்கும் கம்பம்!
##~##

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் உணர்ச்சிப் போராட்டமாக மாறி, திகுதிகுவென எரிய ஆரம்பித்து 10 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள், இளைஞர்கள், பெண்கள் என பலதரப்பட்ட மக்களும் சமூக நலச் சங்கங்களும், 'முல்லைப் பெரியாறை மீட்போம்’ என்று லாரி, வேன், டிராக்டர், பைக் என பல்வேறு வாகனங்களிலும் கிளம்பிச் சென்று  கேரள எல்லைகளில் போராட்டம் நடத்துவதால், 'இவர்கள் ஓயவே மாட்டார்களா..?’ என்று போலீஸ் வட்டாரம் திகிலில் உறைந்து கிடக்கிறது. இவர்கள் அத்தனைபேர் கைகளிலும் கத்தி, கம்பு, கல்... என்று ஏதாவது ஒரு ஆயுதம் இருப்பது திகிலை அதிகமாக்கிக் காட்டுகிறது.

 தொடரும் மறியல்கள்...

எல்லைப் பகுதிகளான கம்பம் மெட்டு, குமுளி, போடி மெட்டு போன்ற வழித்தடங்களில் கூட்டம் கூட்டமாகச் செல்பவர்களை போலீஸ் தடுத்து அனுப்புகிறது. மீறி, 'தடை தாண்டி செல்லலாம், வாருங்கள்’ என்று ஆவேசமாக மக்கள் கிளம்பும்போது, போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்கிறது. இதனால் கடுப்பாகும் கிராமத்து இளைஞர்கள் தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை பகுதிகளில் உள்ள ஒற்றையடி மலைப் பாதைகளில் ஏறி, கேரள எல்லையோரப் பகுதிகளுக்குச் சென்று, உருவப் பொம்மைகளை எரித்துவிட்டுத் திரும்புகிறார்கள். தமிழகத்தைப் போன்றே சப்பாத்து, நெடுங்கண்டம் போன்ற கேரளப் பகுதிகளில் அவர்களும் ஆர்ப் பாட்டத்தில் தினமும் ஈடுபடுகிறார்கள். கேரள அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கும் தமிழர்களை வம்படியாக இழுத்துவந்து, அவர்களை வைத்தே தமிழர்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பச் சொல்கிறார்களாம்.

சின்ன வாத்தியார், பெரிய வாத்தியார்

சின்னமனூர், கோட்டூர், சீலையம்பட்டி, குச்சனூர்பாளையம் என்று சுமார் 30 கி.மீ. தூரத்தில் இருந்து நடந்தே கூடலூருக்கு வந்து, பத்தாயிரம் இருபதாயிரம் என்று மக்கள் கூட்டமாகப் பெருகி குமுளியை நோக்கி முன்னேறுகிறார்கள். அவர்கள் செல்லும் பாதையில் கூடலூரிலும், லோயர் கேம்பில் உள்ள குலுவனூத்து பாலத்திலும் போலீஸார் தடுப்புகளைப் போட்டாலும், அதையும் தாண்டி மக்கள் சென்று விடுகிறார்கள்.

கதிகலக்கும் கம்பம்!

மக்களை மறித்த ஐ.ஜி. ராஜேஸ்தாஸ், ''நான் உங்கள் நண்பன். உங்கள் தண்ணீரை யாரும் ஒரு சொட்டுக்கூட எடுத்துகிட்டுப் போக முடியாது. நீங்கள் எல்லோரும் ரொம்ப நல்லவங்க. உங்களை எல்லை வரை நான் அனுப்பிடுவேன். ஆனா, உங்களுக்குள்ளே இருக்கும், ரெண்டு மூணு பேர் கெட்டவங்க. அவங்க பண்ற தப்பால, நீங்க எல்லோரும் பாதிக்கப்படுவீங்க' என்று உருக்கமாக வேண்டுகோள் வைக்கிறார். ஆரம்பத்தில் அவர் பேசியதை அமைதியாக கேட்பவர்கள், 'வழிய விடுப்பா... போகணும்’ என்று திமிறிக்கொண்டு செல்ல முற்படுகிறார்கள். இறுதியில், தள்ளுமுள்ளு, தடியடி ஆகி கூட்டம் கலைகிறது. கூட்டம் வேறு ஒரு இடத்துக்குச் சென்றதும், ஐ.ஜி. இதையே பேசுவதால், 'வந்துட்டாருய்யா பெரிய வாத்தியாரு’ என்றும், அடுத்து மைக் பிடிக்கும் போலீஸாரை 'சின்ன வாத்தியார்’ என்றும் மக்கள் கிண்டல் அடிக் கிறார்கள்.

தொடரும் தாக்குதல்கள்!

கேரளாவில் தமிழர்கள் மீதும், அவர்களது எஸ்டேட்கள் மீதும் தொடர் தாக்குதல்கள் நடந்து கொண்டே இருக்கிறது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒன்றரை லட்சம் ஹெக்டேர் ஏலக்காய் தோட் டங்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஹெக்டேர் தமிழர்களுடையது. அங்கு குடும்பத்துடன் வாழும் தமிழர்களின் நிலைதான், இப்போது பரிதாபம். கேரளாவுக்கு தினமும் வேலைக்குச் செல்வோர்கள், பிரச்னை ஆரம்பித்த முதல் நாளே தாக்குதல்களுக்கு ஆளாகித் திரும்பி விட்டனர். ஆனால், எஸ்டேட்டில் வாழும் தமிழர்கள் தினமும் தாக்குதல்களுக்கு ஆளாகிறார்கள்.

பண்ணைபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் கம்பம் அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார். அவரைச் சந்தித்தபோது, ''கேரளக்காரர்களுக்கு சொந்தமான 'காமாட்சி விலாஸ்’ என்ற எஸ்டேட்டில் சூப்பர்வைசராக வேலை பார்த்தேன். கடைவீதிக்கு பலசரக்கு வாங்க போனப்ப... கம்பு, கத்தியுடன் வந்த 30 பேர் கும்பல், 'ஏண்டா பாண்டிக்காரா... இவ்விடத்தில் என்ன ஜோலி?’ன்னு கேட்டு அடிக்க ஆரம்பிச்சாங்க. என்னால் நடக்கக்கூட முடியலை. அப்புறம்  ஊருல இருக்கும் சொந்தக்காரங்க கிளம்பி வந்து, மூங்கில் கம்புல டோலி செஞ்சு கரடு முரடான மலைப்பாதையில 10 கி.மீ மேல தூக்கிக்கிட்டு வந்துதான் என்னைக் காப்பாத்தினாங்க'' என்றபோது அவரது கண்களில் இருந்து நீர் வழிந்தது.

கதிகலக்கும் கம்பம்!

விரட்டி அடிக்கப்பட்ட தமிழர்கள்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்கக் கோரும் கேரளாவின்  மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததோடு கடும் கண்டனம் தெரிவித்தது. கடந்த 13ம்தேதி இந்தச் செய்தி பரவியதைக் கேட்டு கடுப்பாகி போன கேரளாக்காரர்கள், எஸ்டேட்களில் எஞ்சி யிருந்த கூலித் தொழிலாளர்களை, 'ஓடுங்கடா உங்க நாட்டுக்கு’ என்று அடித்து விரட்டத் தொடங்கினர். இதனால், அன்றும் அதற்கு மறு நாளும் கேரளாவில் இருந்து சாக்குலூத்துமெட்டு வழியாகவும் ராமக்கல் மெட்டு வழியாகவும் கூலித் தொழிலாளர்கள் தப்பி வந்தபடியே இருந்தார்கள். அப்படித் தப்பிவந்த பொன்னுத்தாய், ''கடந்த ஒரு வாரமா பிரச்னை இருந்ததால, எங்களால எஸ்டேட்டை விட்டு வெளியே வர முடியல. எப்பவும் எஸ்டேட் கேட்டுக்குள்ள வராத கேரளக் காரர்கள், அன்னைக்கு உள்ளே நுழைஞ்சு எங்களை அடிச்சு விரட்டிட்டு ஏலக்காய் செடிகளை எல்லாம் வெட்டிப் போடுறாங்க. நாங்க தப்பி வரும்போது, கும்பல் கும்பலா போலீஸ் முன்னாடியே எங்களை அடிக்கிறாங்க. உயிருக்குப் பயந்துகிட்டு கையில கிடைச்சதை மட்டும் எடுத்துக்கிட்டு ஓடி வந்தோம். அவங்க அடிச்சதுல பாதி காயம்னா... பாறையில முள்ளுல கல்லுல விழுந்து வந்தது மீதிக் காயம். நாங்க கிளம்பிய நேரத்தில், மேல இருந்து கேரளக் காரங்க வெடியை கொளுத்திப் போடுறாங்க. அதனால, யானைகள் கீழே இறங்குது. பாதைகளில் யானைகளை விரட்டி விடுறாங்க. உயிரை எப்படி எல்லாம் காப்பாத்திட்டு வர வேண்டியதா இருக்கு.  தமிழர்களைத் தவிர கேரளாவில் உள்ள ஏலக்காய் எஸ்டேட்களில் கடினமாக உழைக்க வேறு யாரும் இல்லை. நாங்க இல்லை என்றால், கேரளா எஸ்டேட்களில் கூலி வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் அல்லாடி, எல்லாம் வீணாகி விடும்'' என்று அழுதபடி சொன்னார்.

கதிகலக்கும் கம்பம்!

பன்றிப் பண்ணை பரபரப்பு

எல்லை விவகாரம் இப்படியிருக்க, தமிழகத்தில் கேரளத்துக்காரர்களின் சொத்துக்கள் நிலையும் பரிதாபம்தான். 'முல்லைப் பெரியாறு ஆற்றுப்படுகை யில், கம்பம் பள்ளத்தாக்குகளில் விவசாய நிலங்கள், பண்ணைகள் என்று ஏராளமான சொத்துக்கள் கேரளக்காரர்களுக்கு உண்டு. அனுமந்தம்பட்டிக்கு அருகில் உள்ள காக்கில்சிக்கையன்பட்டியில், கேரளத்து முக்கியப் புள்ளி ஒருவருக்குச் சொந்த மான பன்றிப் பண்ணை ஒன்று உள்ளது. போராட் டக்காரர்கள் பார்வையில் படாமலே ஒரு வாரத்தை கடந்தது பன்றிப் பண்ணை. கடந்த 13-ம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட பன்றிகளை வேனில் ஏற்றிக் கொண்டு மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல திட்டமிட்டபோது, வெளியில் தகவல் பரவியது.  வேன் சென்ற பாதையில் சின்னமனூரில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் தேனிக்கு திருப்பி அனுப்பப்பட்ட  பன்றிகள், இரவோடு இரவாக  கேரளா பயணம் ஆனது. மறியல் போராட்டத்தில் தடியடி நடக்க... பெண்கள் மீதும் அடி விழுந்தது. கொதித்தெழுந்த மக்கள், போலீஸ் வண்டிகள் மீது கல் வீசினார்கள். திருச்சி டி.ஐ.ஜி. அமல்ராஜின் கார் கண்ணாடி மீது கல் விழுந்ததாகச் சொல்லி, போலீஸார் தடியடியைத் தீவிரப்படுத்த...  கருங்கட்டான் குளத்தைச் சேர்ந்த முருகன் என்ற 16 வயது சிறுவனுக்கு பலத்த அடி. அந்தச் சிறுவனுக்கு ஏதாவது நடந் தால் பிரச்னை தீவிரமடையும் என்ற பதற்றத் தில் போலீஸார் உள்ளனர்.

கதிகலக்கும் கம்பம்!
கதிகலக்கும் கம்பம்!

மலைப்புதர்களில் ஒளிந்து... உயிர் தப்பி...

கதிகலக்கும் கம்பம்!

கடந்த 13-ம் தேதி. 'பீர்மேடு, தேவிகுளம் போன்ற பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க வேண்டும்’ என்று மூணாறு வாழ் தமிழர்கள் பேரணி நடத்தவே, மலையாளிகள் கடுப்பானார்கள். அதனால் அவர்கள், எஸ்டேட்களில் வேலை பார்க்கும் தமிழர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள். குடும்பமாக வசித்தவர்கள், உயிருக்குப் பயந்து அதிகாலை மூன்று மணி அளவில்கூட, மலைப்புதர்களில் ஒளிந்து... குதிரைபாஞ்சான் மெட்டு, ராமக்கல் மெட்டு போன்ற செங்குத்தான பாதைகளில் கோம்பை, தேவாரம் பகுதிகளுக்கு இறங்கி வந்தனர். அவர்களில் ஒருவரான அன்பழகன், ''நாங்க மொத்தம் 66 பேர். 13 குடும்பங்களைச் சேர்ந்தவங்க. உடும்பன் சோலை எஸ்டேட்டில் வேலைப் பார்த்து வந்தோம். கலவரம் நடந்ததும், நாங்கள் ஓடி ஒளிந்து கொண்டோம். பிரச்னை முடிஞ்சதும், ஊருக்கு போகலாம் என்று இருந்தோம். எஸ்டேட்டுக்குள் நுழைந்த மலையாளிகள், எங்களை அடித்து, பொம்பளப்புள்ளை களை சொல்ல முடி யாத அளவுக்கு கேவலப்படுத்தி, நாசம் பண்ணிப்புட்டாங்க. இவங்களுக்குப் பயந்து கிட்டு விடியற்காலை 3 மணிக்கு கிளம்பினோம். ஆனா, தீ மூட்டி குளிர் காய்ஞ்சுகிட்டு இருந்த கும்பல், அந்த நேரத்திலும் எங்களை விரட்டி அடிச்சாங்க. பாதை தெரியாம உயிருக்குப் பயந்து ஓடி... காரித்தோடு, யாரைத்தோடு, ஆட்டுப்பாறை மலைப்பாதை வழியா 15 கிலோ மீட்டருக்கு நடந்தே கீழே தேவாரத்தை அடைஞ்சோம். தமிழ் மக்கள் எங்களுக்குப் பள்ளிக் கூடத்தில் தங்க இடம் கொடுத்து, சோறு போட்டாங்க'' என்றார் நன்றியுடன்.

கோம்பையைச் சேர்ந்த காசம்மாள், ''மாட்டுத்தவளம் என்ற இடத்தில் ஒரு எஸ்டேட்டில் வேலை பார்த்தோம். கலவரக் கும்பல் எங்களை அடித்துச் சேலையை இழுத்து மானபங்கப் படுத்திட்டாங்க. மூணு வயதுக் குழந்தைன்னும் பார்க்காம, பாறையில் தள்ளி விட்டாங்க. தடுக்கப்போன அம்மாவையும் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு அசிங்கம் செஞ்சிட்டாங்க'' என்றார் அழுதபடி.

''அங்க இருந்தாத்தானே அடிக்கிறாங்கன்னு தப்பிச்சு கீழே இறங்குனா, மேலே இருந்து கல்லை விட்டு எரியுறாங்க. அங்கிருக்கிற தமிழ்நாடு மின்சார வாரியத்துக்குச் சொந்தமான காற்றாலைகளை அடித்து நொறுக்கி, வயரை எல்லாம் அறுத்து எரிஞ்சுட்டாங்க. இம்புட்டு நடந்தும் கேரள மலையில் உள்ள கேரள போலீஸ் வேடிக்கைதான் பார்க்குறாங்க. 'அப்படித்தான் அடிப்பாங்க. சீக்கிரம் ஓடித் தொலைங்க’ன்னு அவங்களும் சேர்ந்து விரட்டுறாங்க.  இங்கே வரும்போது மறித்து விவரம் கேட்கும் தமிழக போலீஸும், 'நடந்தது நடந்துடுச்சு. பத்திரிகைகாரங்ககிட்ட சொல்லிடாதீங்க’ என்று எங்களிடம் சொல்லி அனுப்புகிறார்கள்'' என்று வேதனைப்பட்டார்.

வேதனையும் கண்ணீரும் ஓய்வதாகத் தெரியவில்லை!

- சண்.சரவணக்குமார்

படங்கள்:என்.விவேக்,வீ.சிவக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு