Published:Updated:

சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்; பக்தர்கள் எதிர்ப்பு - காவல்துறை தாக்கியதால் பதற்றம்

சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்; பக்தர்கள் எதிர்ப்பு - காவல்துறை தாக்கியதால் பதற்றம்
சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்; பக்தர்கள் எதிர்ப்பு - காவல்துறை தாக்கியதால் பதற்றம்

அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குச் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வழக்கமான மாதாந்தர பூஜைக்காக நேற்று மாலை கோயில் நடை திறக்கப்பட்டதால், சபரிமலை செல்லும் பெண்களைத் தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டனர். இறுதியில் போராட்டக்காரர்களை, காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். 

சபரிமலையில் பெண் பத்திரிகையாளர்; பக்தர்கள் எதிர்ப்பு - காவல்துறை தாக்கியதால் பதற்றம்

பல்வேறுகட்டப் போராட்டங்களுக்கு மத்தியில் நேற்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. நேற்று சபரிமலைக்கு வந்த பெண்கள் சிலர், திரும்பிச் சென்றனர். கேரளாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், போராட்டக்காரர்களின் எதிர்ப்பை அடுத்து திரும்பிச் சென்றார். இன்று காலை 5 மணிக்கு மீண்டும் நடைதிறக்கப்பட்டது.  

இந்நிலையில் கேரளாவில் சபரிமலை பாதுகாப்புக்குழு மற்றும் பா.ஜ.க உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் வாகனங்கள் ஓடவில்லை. முழுஅடைப்பு போராட்டம் காரணமாகத் தமிழக அரசுப் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது. கன்னியாகுமரி - திருவனந்தபுரம் செல்லும் அரசுப் பேருந்துகள் களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. கடைகள் மூடப்பட்டுள்ளன. சபரிமலை, பம்பை, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மேல்சாந்தியாகப் பெங்களூருவை சேர்ந்த வி.என்.வாசுதேவன் நம்பூதரி தேர்வுசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் இன்று காலை, லக்னோவைச் சேர்ந்த சுஹாசினி ராஜ் என்ற பெண் பத்திரிகையாளர் ஒருவர் சபரிமலை செல்வதற்காக மலை ஏறி இருக்கிறார். ஆனால், பாதிவழியில் திரும்பியுள்ளார். மலைப்பாதை முழுவதும் பக்தர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்பாச்சி மேடு அருகே அவரை திரும்பிச் செல்ல பக்தர்கள் கோஷம் எழுப்பியதால் பதற்றம் ஏற்பட்டது. துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படை குவிக்கப்பட்டுள்ளது. கோஷங்கள் எழுப்பிய பக்தர்களை அவர்கள் தாக்கியதால், அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. தான் செய்தி சேகரிக்க மட்டுமே வந்ததாகவும் அவர் தெரிவித்தார். அவருக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இளம் பெண்கள் சபரிமலை கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும், நிலையில் நிலக்கல், பத்தினம்திட்டா பகுதிகளில் பதற்றமான சூழ்நிலையே நிலவிவருகிறது. மாநில முதல்வர் பினராயி விஜயன், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.