வெளியிடப்பட்ட நேரம்: 23:02 (18/10/2018)

கடைசி தொடர்பு:23:02 (18/10/2018)

`நிதி கொடுக்க பணமில்லை; தலைவரைப் பார்க்கவே வந்தோம்!’ - நிர்வாகியிடம் கூறிய தி.மு.க மூத்த தொண்டர்கள்

தஞ்சாவூரில் நாளை நடைபெறும் 2 திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பதற்காக வந்த தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு, அக்கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்ததோடு, தங்களால் முடிந்த தேர்தல் நிதியை கவரில் வைத்துக் கொடுத்தனர்.

ஸ்டாலின்

ஒவ்வொருவரும் வரிசையாகக் கொடுத்த தேர்தல் நிதி கவரை 20 நிமிடங்களுக்கும் மேலாக நின்றுகொண்டே வாங்கிக்கொண்டார் ஸ்டாலின். மூத்த தொண்டர்கள் சிலரிடம் நிர்வாகி ஒருவர் நீங்க மேடைக்கு ஏறலயா எனக் கேட்க, `நாங்க எங்கள் தலைவரைப் பார்க்க வந்திருக்கிறோம் ஆனால், எங்ககிட்ட நிதி கொடுக்குறதுக்கு பணமில்லை' என்றனர்.

தி.மு.க தலைவராகப் பொறுப்பெற்ற பிறகு திருமணம், மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் தி.மு.க-வில் இணைவது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தஞ்சாவூர் வந்த ஸ்டாலினுக்கு தமிழ்ப்பல்கலைக்கழகம் அருகே கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்து வரவேற்றனர். நாதஸ்வர கச்சேரிகள் முழங்க, ஏராளமான பெண்கள் கூடி நின்று பூரண கும்ப மரியாதை செலுத்த சரியாக மதியம் 2.50 மணிக்கு வந்த ஸ்டாலின், அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான மேடையில் முக்கிய நிர்வாகிகளுடன் ஏறினார். பின்னர் ஏற்கெனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தபடி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் 100 ரூபாய் தொடங்கி 500 ரூபாய் வரை கவரில் வைத்து ஒவ்வொருவராக வரிசையாகச் சென்று கைகுலுக்கி ஸ்டாலினிடம் கொடுத்தனர். இதற்காக, தி.மு.க தேர்தல் நிதி என அச்சிடப்பட்டிருந்த கவரை நிர்வாகிகள் நிதி கொடுக்கத் தயாராக இருந்த தொண்டர்களிடம் கொடுத்தனர்.

ஸ்டாலின்

பட்டாசு சத்தங்கள் முழங்க 20 நிமிடங்களுக்கும் மேலாக நின்றுகொண்டே தேர்தல் நிதியைப் பெற்றுக்கொண்டார் ஸ்டாலின். அப்போது ஒருவர் கலைஞர் எழுதிய `நெஞ்சுக்கு நீதி' புத்தகத்தைக் கொடுக்க, சற்று நேரம் அந்தப் புத்தகத்தில் உள்ள கருணாநிதி படத்தை உற்றுப் பார்த்தார். தனியார் விடுதியிலிருந்து ஏராளமான கல்லூரி மாணவிகளை ஸ்டாலினுக்கு வரவேற்பு கொடுக்க அழைத்து வந்திருந்தனர் நிர்வாகிகள். அந்த மாணவிகளும் மேடை ஏறி ஸ்டாலினுக்கு மரியாதை செலுத்தினர். மாணவர் ஒருவர் நிதிக் கவரை கொடுத்துவிட்டு செல்போனை கையில் வைத்துக்கொண்டு தயங்கி நிற்க,`செல்ஃபிதானே எடுத்துக்கப்பா’ என புன்னகைத்தபடி போஸ் கொடுத்தார். சிலர் நூறு ரூபாய்தானே எனப் பலமுறை வந்து கொடுத்துவிட்டு ஸ்டாலினிடம் கைகுலுக்கி சந்தோஷபட்டுக்கொண்டனர்.

மேடை அருகே நின்றுகொண்டிருந்த மூத்த தொண்டர்கள் சிலரிடம், `நீங்க மேடையில் ஏறி நிதி கொடுக்கலையா’ என நிர்வாகி ஒருவர் கேட்க, `தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு எங்க ஊருக்கு ஸ்டாலின் இப்பதான் நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கிறார். எங்கள் தலைவரைப் பார்க்க வந்திருக்கிறோம். ஆனால், எங்ககிட்ட நிதி கொடுக்குறதுக்கு பணமில்லை’ என்ற அவர்களின் பேச்சைக் கேட்காமலேயே வேறு இடத்துக்குப் போனார் அந்த நிர்வாகி. பின்னர், சங்கம் ஹோட்டலுக்குச் சென்ற ஸ்டாலின், கொஞ்சம் நேரம் ஓய்வெடுத்தார். பிறகு பட்டுகோட்டை அ.தி.மு.க நிர்வாகியான மயில்வாகனன், அக்கட்சியிலிருந்து விலகி தன் ஆதரவாளர்களுடன் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார். இதையடுத்து, `நாளை வெவ்வேறு இடங்களில் 2 திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வைக்கிறார் ஸ்டாலின்' என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க