` நம்பிக்கைக்கு உரியவரைத் தேடுவதைவிட...!' - பொருளாளர் பதவியில் பிரேமலதா அமர்த்தப்பட்ட பின்னணி | The reason behind the election of Premalatha as the treasurer of DMDK

வெளியிடப்பட்ட நேரம்: 10:46 (20/10/2018)

கடைசி தொடர்பு:12:40 (20/10/2018)

` நம்பிக்கைக்கு உரியவரைத் தேடுவதைவிட...!' - பொருளாளர் பதவியில் பிரேமலதா அமர்த்தப்பட்ட பின்னணி

விஜயகாந்த் குடும்பத்துக்கு என `டி.எம்.டி.கே ட்ரஸ்ட்' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று செயல்பட்டு வருகிறது. டி.எம்.டி.கே என்று பெயர் வைத்திருந்தாலும், கட்சிக்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை.

` நம்பிக்கைக்கு உரியவரைத் தேடுவதைவிட...!' - பொருளாளர் பதவியில் பிரேமலதா அமர்த்தப்பட்ட பின்னணி

தே.மு.தி.க-வின் புதிய பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த். `மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குச் செல்ல இருக்கிறார் விஜயகாந்த். தேர்தல் தேதியும் நெருங்குவதால் கட்சிக்குள் அதிகாரபூர்வமாக என்ட்ரி ஆகியிருக்கிறார் பிரேமலதா' என்கின்றனர் தே.மு.தி.க நிர்வாகிகள்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், `கட்சியின் அவைத் தலைவராக டாக்டர். இளங்கோவன், பொருளாளராக பிரேமலதா, கொள்கை பரப்புச் செயலாளராக அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதாக' அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த். இந்த அறிவிப்பு குறித்து பேட்டியளித்த பிரேமலதா, ``கட்சியின் பொருளாளராக என்னை நியமிப்பார் என நான் எதிர்பார்க்கவில்லை. உண்மையான உழைப்புக்குக் கட்சியில் மரியாதை உண்டு. விஜயகாந்திடம் இருந்து பாராட்டு பெறுவது எளிதான காரியம் அல்ல" என நெகிழ்ந்தார். 

``இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே கட்சிப் பதவிக்கு வந்திருக்க வேண்டியவர் பிரேமலதா. அந்த நேரத்தில் உட்கட்சியில் ஏகப்பட்ட குழப்பங்கள் நடந்ததால் அவரால் பொறுப்புக்கு வர முடியவில்லை. இப்போது பதவி கொடுக்கப்பட்டதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன" என விவரித்த தே.மு.தி.க முன்னணி நிர்வாகி ஒருவர், ``அமெரிக்க சிகிச்சை முடிந்து விஜயகாந்த் திரும்பிய நாளில் இருந்தே, பொருளாளர் பதவி கொடுக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது. இப்போது மீண்டும் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருக்கிறார் விஜயகாந்த். அவரால் முன்பு போல மீடியாக்களுக்குப் பேட்டி கொடுக்க முடிவதில்லை. சிகிச்சை முடிந்து வந்தாலும் ஓராண்டு காலம் அவர் ஓய்வில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். இந்த நேரத்தில் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்ப்பதற்காகவே பதவிக்கு வந்திருக்கிறார் பிரேமலதா" என்றவர், 

பிரேமலதா

``தே.மு.தி.கவுக்கு என பல கோடி ரூபாய்க்கும் மேல் சொத்துகள் இருக்கின்றன. அண்மையில் நிலமாகவும் சில சொத்துகளை வாங்கியுள்ளனர். கட்சியின் சொத்து தொடர்பான விஷயங்களில் பொதுச் செயலாளரும் பொருளாளரும்தான் கையெழுத்து போட வேண்டும். விஜயகாந்த் சிகிச்சைக்காகச் சென்றுவிட்டால், நிதி தொடர்பான விஷயங்களில் பொருளாளர்தான் கையெழுத்து போட வேண்டும். `நம்பிக்கைக்கு உரியவர் என்று ஒருவரைத் தேடுவதைவிட, நாமளே அதைக் கையில் எடுத்துக் கொள்வோம்' என்ற முடிவுக்கு வந்தார் பிரேமலதா. இதில், குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் ஒன்றும் இருக்கிறது. விஜயகாந்த் குடும்பத்துக்கு என `டி.எம்.டி.கே ட்ரஸ்ட்' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்று செயல்பட்டு வருகிறது. டி.எம்.டி.கே என்று பெயர் வைத்திருந்தாலும், கட்சிக்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. இந்த அறக்கட்டளையில் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் ஆகிய மூவர் மட்டும்தான் உள்ளனர். தனிப்பட்ட முறையில்தான் இந்த ட்ரஸ்ட்டை நடத்தி வருகின்றனர். 

கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகமானது, கட்சியின் சொத்துப் பட்டியலில் இல்லை. ஆண்டாள் அழகர் என்ற கம்பெனியின் சொத்தாக அது இருக்கிறது. இது என்றைக்குமே கட்சியின் சொத்தாக வருவதற்கு வாய்ப்பில்லை. இந்த அலுவலகத்தில் விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ், பிரேமலதாவின் தாயார், மகன்கள் ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கின்றனர். கட்சியின் பெயரில் உள்ள சொத்துகள் தனியாகவும் ட்ரஸ்ட் பெயரில் உள்ள சொத்துகள் தனியாகவும் இருக்கின்றன. அண்மையில் தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவையும் பிரேமலதா கணக்கில் எடுத்திருக்கிறார். `அரசியல் கட்சிகளுக்கு நிதியாக என்ன தொகை வருகிறதோ, அதைக் கணக்கு காட்ட வேண்டும். 2,000 ரூபாய்க்கு மேல் யார் பணம் கொடுத்தாலும் அதைக் காசோலையாகப் பெற வேண்டும்; அவர்களைப் பற்றிய முழு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளது. இதைச் சரியாகச் செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தே.மு.தி.க. இதையெல்லாம் கணக்கில் வைத்துத்தான் பொருளாளர் பதவிக்குக் கொண்டு வரப்பட்டார் பிரேமலதா" என்றார் விரிவாக. 

சுதீஷ்``பிரேமலதாவுக்கு அடுத்தபடியாக, கட்சியின் மாநில இளைஞர் அணிச் செயலாளராக மகன் விஜய பிரபாகரனை நியமிக்க உள்ளனர். அதற்கு முன்னோட்டமாக காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் அனகை முருகேசனை அழைத்து நிகழ்ச்சி ஒன்றை நடத்த வைத்தார் பிரேமலதா. `பள்ளி விழா என்று அழைத்தார்கள்; இப்படியொரு நிகழ்ச்சி நடக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை' என அந்த நிகழ்ச்சியில் நெகிழ்ந்தார் விஜய பிரபாகரன். உண்மையில், இந்த நிகழ்ச்சி தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் அனகை முருகேசனிடம் பேசிய பிரேமலதா, `தலைவர் வந்தால் எப்படிச் செய்வீர்களோ, அப்படி இந்த நிகழ்ச்சியை நடத்துங்கள்' எனக் கூறிவிட்டார். கட்சிப் பதவிக்கு அவரைக் கொண்டு வருவதற்கான முன்னோட்டமாகவே இந்த நிகழ்ச்சி பார்க்கப்பட்டது. 

தற்போது கட்சியின் மாநில துணைச் செயலாளராக இருக்கிறார் சுதீஷ். அவருடன் பார்த்தசாரதி, சந்திரா, அக்பர் என மூன்று பேர் இந்தப் பதவியில் இருக்கின்றனர். சுதீஷை முன்வரிசைக்குக் கொண்டு வரும் முடிவில் பிரேமலதா இல்லை. இதற்குக் காரணம், விஜயகாந்த் மகனின் திருமண ஏற்பாடுகள் தொடர்பாக குடும்ப உறவுகளுக்குள் சில மனவருத்தங்கள் ஏற்பட்டதுதான். தவிர, தொலைக்காட்சி விவாதங்களில் கட்சி சார்பாக யாரும் கலந்துகொள்வதில்லை. `கட்சி தொடர்பான விஷயங்களை மீடியாக்களில் பேசுவதற்காக, எதாவது ஒரு பதவி வேண்டும்' என்பதில் உறுதியாக இருந்தார் பிரேமலதா. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல, சொத்துகளையும் கட்சியையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்" என்கிறார் தே.மு.தி.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர். 

பொருளாளர் ராசி! 

தே.மு.தி.கவில் பொருளாளர் பதவிக்கும் ஒரு ராசி இருக்கிறது. முதன் முதலில் ரசிகர் மன்றத்தைத் தொடங்கியபோது, பொருளாளராக நியமிக்கப்பட்டவர் திருப்பதி. அவருக்கு அடுத்து, மன்றத்தின் பொதுச் செயலாளராக இருந்த ராமு வசந்தனின் அக்கா மகன் சரவணன், இந்தப் பதவிக்கு வந்தார். அவருக்குப் பின்னர், கோவையைச் சேர்ந்த விஜய் ஈஸ்வரனை நியமித்தனர். அதன்பிறகு, தன்னுடைய நண்பராக இருந்த சுந்தர்ராஜைக் கட்சியின் பொருளாளராக நியமித்தார் விஜயகாந்த். இவர்கள் யாருமே தற்போது கட்சியில் இல்லை. சுந்தர்ராஜுக்குப் பிறகு ஏ.ஆர்.இளங்கோவனுக்கு இந்தப் பதவி கொடுக்கப்பட்டது. அவரிடம் இருந்து டாக்டர்.இளங்கோவன் வசம் சென்றது. தற்போது இந்தப் பதவி பிரேமலதாவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.