வெளியிடப்பட்ட நேரம்: 14:53 (20/10/2018)

கடைசி தொடர்பு:15:00 (20/10/2018)

`ராகுல்காந்தி, தினகரன், கமல்ஹாசன் ஆகிய மூவர் போதும்!'  - தேர்தல் வியூகத்தை வகுக்கும் ராமதாஸ்

பா.ம.கவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியும் ஸ்டாலினும் இருக்கின்றனர். எனவே, சமூகரீதியாக மக்களைத் திரட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.

`ராகுல்காந்தி, தினகரன், கமல்ஹாசன் ஆகிய மூவர் போதும்!'  - தேர்தல் வியூகத்தை வகுக்கும் ராமதாஸ்

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து பா.ம.க முகாமில் தீவிர விவாதம் கிளம்பியுள்ளது. `நமக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியும் ஸ்டாலினும் செயல்படுகிறார்கள். தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி உடைந்தாலே, 7 எம்.பி தொகுதிகளில் நாம் வெல்வோம்' எனப் பேசியிருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். 

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. தேர்தல், கூட்டணி என்ற வார்த்தைகள், அரசியல் அரங்கில் கிளம்பத் தொடங்கிவிட்டன. தமிழகத்தைப் பொறுத்தவரையில், தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அணிக்குள் மற்ற கட்சிகள் வருவதைப் பற்றிய விவாதம் இன்னும் தொடங்கவில்லை. `ஆளும் பா.ஜ.க அரசுடன் யார் கூட்டணி சேருவார்கள்?' என்பதும் உறுதிப்படுத்தப்படவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஐந்தரை சதவிகித வாக்குகளைப் பெற்று, திராவிடக் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது பா.ம.க. தொடக்கக் காலங்களில் பெற்ற அதே வாக்கு சதவிகிதத்தில் வந்து நின்றாலும், பா.ம.க எடுத்த வாக்குகள் மிக முக்கிமானவை. `மீண்டும் தனித்துப் போட்டி எனக் களமிறங்கினால் அதிகப்படியான எம்.பி தொகுதிகளில் வெல்ல முடியாது' என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறார் மருத்துவர் அன்புமணி. அவரது கருத்தில் ராமதாஸுக்கு உடன்பாடில்லை. `கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத சூழலில், நமக்கான வெற்றி வாய்ப்புகள் அதிகம்' என்ற மனநிலையில் இருக்கிறார். 

டி.டி.வி.தினகரன்

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ம.க முகாமில் தீவிர விவாதம் நடந்துள்ளது. அப்போது கட்சி நிர்வாகிகளிடம் பேசிய ராமதாஸ் தரப்பினர், ``ஸ்டாலினுடன் நாம் கூட்டணி சேருவதால் எந்தப் பயனும் வரப் போவதில்லை. தி.மு.கவினர் நமக்கு எதிராக நிச்சயம் சதி செய்வார்கள். சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், `விவாதத்துக்கு வரத் தயாரா?' என ஸ்டாலினுக்குச் சவால்விட்டோம். நம்மை எதிர்கொள்ள முடியாமல் அவர் திணறினார். அதை அப்போது ஒரு வியூகமாகத்தான் செய்தோம். அன்றைக்கு சி.எம் வேட்பாளராக அவர்கள் சொன்னது கருணாநிதியைத்தான். அவரை நாம் விமர்சனம் செய்திருந்தால், தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு நாம் போனதும் கருணாநிதியை முதலமைச்சர் என்று சொன்னதும் மக்கள் மத்தியில் எக்போஸ் ஆகியிருக்கும். ஸ்டாலினை விமர்சனம் செய்ததால்தான் நமக்குப் பலன் கிடைத்தது. இன்று 40 சதவிகித வன்னியர் வாக்குகளை நாம் எடுத்துவிட்டோம். கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத சூழலில், நாடாளுமன்றத் தேர்தலில் வன்னியர் வாக்குகளில் பெரும்பகுதி நம்பக்கம் வந்து சேரும். 

அதேபோல், கருணாநிதியை ஏற்றுக்கொண்ட வன்னிய சமூக மக்கள், ஸ்டாலினுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள். இப்படியொரு வாய்ப்பை எதிர்பார்த்துத்தான் நாம் இறங்கி அடித்தோம். மீண்டும் அந்த நிலைப்பாட்டிலேயே உறுதியாக இருப்போம். எடப்பாடி பழனிசாமி, `படையாட்சிக்கு மணிமண்டபம்' எனக் கூறிக்கொண்டு வருகிறார். இதை நாம் எதிர்பார்க்கவில்லை. பா.ம.கவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியும் ஸ்டாலினும் இருக்கின்றனர். எனவே, சமூகரீதியாக மக்களைத் திரட்டுவதைத் தவிர வேறு வழியில்லை. கூட்டணி இருந்தால்தான் எம்.பியாகவும் மத்திய அமைச்சராகவும் ஆக முடியும் என்றெல்லாம் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி உடைந்தாலே, ஆறு ஏழு எம்.பி சீட்டுகளை நம்மால் ஜெயிக்க முடியும். ராகுல்காந்தி, தினகரன், கமல்ஹாசன் ஆகிய மூவரும் நமது அணிக்குள் வந்தாலே போதும். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்குப் போனால் கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகளும் நமக்கு வந்து சேரும். தினகரன் வைத்திருக்கக் கூடிய பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளும் நமக்குக் கை கொடுக்கும்" எனப் பேசியுள்ளனர்.