Published:Updated:

‘மத்திய அமைச்சர்களின் ஊழல் புகார்களை அளிக்க வேண்டும்’ - பிரதமர் அலுவலகத்துக்கு சிஐசி உத்தரவு!

‘மத்திய அமைச்சர்களின் ஊழல் புகார்களை அளிக்க வேண்டும்’ - பிரதமர் அலுவலகத்துக்கு சிஐசி உத்தரவு!
‘மத்திய அமைச்சர்களின் ஊழல் புகார்களை அளிக்க வேண்டும்’ - பிரதமர் அலுவலகத்துக்கு சிஐசி உத்தரவு!

'இதுவரை மத்திய அமைச்சர்களுக்கு எதிராக வந்த ஊழல் புகார்களைச் சமர்ப்பிக்க வேண்டும்' என மத்திய தகவல் ஆணையம் பிரதமர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. 

‘மத்திய அமைச்சர்களின் ஊழல் புகார்களை அளிக்க வேண்டும்’ - பிரதமர் அலுவலகத்துக்கு சிஐசி உத்தரவு!

'2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மத்திய அமைச்சர்களுக்கு எதிராக பிரதமர் அலுவலகத்துக்கு வந்த ஊழல் புகார்கள் மற்றும் அவற்றின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் வேண்டும்' என சஞ்சீவ் சதுர்வேதி என்ற வனத் துறை அதிகாரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். இதனுடன் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தின் மதிப்பு, அவற்றை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அப்படி மீட்ட பணத்தின் மதிப்பு, அவை பொதுமக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதா போன்ற கூடுதல் விவரங்களையும் கேட்டிருந்தார். இதனுடன் 'மேக் இன் இந்தியா திட்டம்', 'தூய்மை இந்தியா திட்டம்' போன்றவை அந்தந்த துறைகளுக்கு சரியாக ஒதுக்கப்பட்டதா என்ற கேள்வியையும் ஆர்.டி.ஐ மூலம் சஞ்சீவ் கேட்டிருந்தார். 

ஆனால், இந்தத் தகவல்களைத் தர மறுத்த பிரதமர் அலுவலகம், இவை அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட வேண்டிய தகவல் என்ற வரையறைக்குள் இடம் பெறவில்லை எனப் பதிலளித்தது. 

இருப்பினும் சஞ்சீவ், அடுத்ததாக மத்திய தகவல் ஆணையத்தில் முறையிட்டார். இந்த மனு, மத்திய தகவல் ஆணையர் ராதாகிருஷ்ண மாத்தூர் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இதில், 'பிரதமர் அலுவலகம் சார்பாகவும் சஞ்சீவ் சார்பாகவும் தங்களின் கருத்துகள் முன் வைக்கப்பட்டன. சஞ்சீவ் கேள்விக்கு பிரதமர் அலுவலகம் வழங்கிய விளக்கம் போதுமானதாகவும் சரியானதாகவும் இல்லை' என ராதாகிருஷ்ண மாத்தூர் கூறினார். தொடர்ந்து, 'மத்திய அமைச்சர்களுக்கு எதிராக வந்த ஊழல் புகார்கள் மற்றும் சஞ்சீவ் தொடர்ந்த மனுவில் உள்ள அனைத்துக் கேள்விகளுக்குமான விவரங்களைப் பிரதமர் அலுவலகம் விரைவில் சமர்ப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.