`கிரண் பேடி மீது சி.பி.ஐ விசாரணை வேண்டும்!’ - கொதிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் | "CBI must investigate Kiran Bedi" Congress MLAs request

வெளியிடப்பட்ட நேரம்: 09:19 (23/10/2018)

கடைசி தொடர்பு:09:28 (23/10/2018)

`கிரண் பேடி மீது சி.பி.ஐ விசாரணை வேண்டும்!’ - கொதிக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்

``கவர்னர் கிரண் பேடி மீது சி.பி.ஐ விசாரணை வேண்டும்” என்று புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தெரிவித்திருக்கின்றனர்.

கவர்னர்

``விதிகளை மீறி சி.எஸ்.ஆர் நிதியை வசூல் செய்ததோடு அதில் பெரிய அளவில் முறைகேடு செய்திருக்கிறார்” என்று முதல்வர் நாராயணசாமி, கவர்னர் கிரண் பேடி மீது  குற்றம் சுமத்தியிருந்தார்.

கவர்னர் கிரண் பேடி அந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் லட்சுமி நாராயணன் மற்றும் அனந்தராமன் இருவரும், ``விதிகளை மீறி கவர்னர் கிரண் பேடி சி.எஸ்.ஆர் நிதியை வாங்கியிருக்கிறார் என்று நாங்கள் குற்றம் சாட்டியபோது, அப்படி எந்த நிதியையும் வாங்கவில்லை என்று கூறினார் கவர்னர். ஆனால், நிதி வழங்கியவர்களை அழைத்து அவர்களை மிரட்டி பேட்டி எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுகிறார். இதன்மூலம் தான் செய்த குற்றத்துக்கான ஆதாரங்களை அழிக்க முயல்கிறார். அரசு இடங்களில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள யார் அனுமதி கொடுத்தது. அதற்கான திட்டங்களை தயார் செய்தது யார். செய்த பணிக்கு பணம் எவ்வாறு கொடுக்கப்பட்டது போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் இல்லை. சி.எஸ்.ஆர் நிதிகளை வசூலிப்பதற்காக தனிக் குழு ஒன்று இருக்கும்போது அதற்காக கவர்னர் மாளிகையில் உதவி மையம் (Help Desk) அமைத்தது ஏன் ? என்ற கேள்விக்கும் பதில் இல்லை. 

 

அரசின் கொள்கைகளை எதிர்ப்பவர்களிடம் சி.எஸ்.ஆர் நிதியை வசூலிக்கக் கூடாது என்பது விதி. ஆனால், புதுச்சேரி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் வசூலித்திருக்கிறார் கவர்னர் கிரண் பேடி. மாணவர் சேர்க்கையில் இந்த மருத்துவக் கல்லூரிகள் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கின்றன என்று இவர்தான் சி.பி.ஐ விசாரணைக்கு பரிந்துரைத்தார். அதனடிப்படையில்தான் சி.பி.ஐ ஊழல் வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், அவர்களிடமே நிதி வசூலித்திருப்பது எப்படி சரியாக இருக்க முடியும். சி.பி.ஐ-க்கு பரிந்துரைத்த வழக்கை கவர்னர் வாபஸ் பெறப் போகிறாரா. அந்த வழக்கில் இருந்து கல்லூரிகளை விடுவிப்பதற்காகத்தான் பணம் வசூலிக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது. நூறு நாள் கள ஆய்வு செய்தது குறித்து புத்தகம் ஒன்றை கவர்னர் வெளியிட்டுள்ளார். அரவிந்தர் ஆசிரம அச்சகத்தில்  அச்சடிக்கப்பட்ட அந்த புத்தகத்துக்கான பணத்தை செய்தி விளம்பரத்துறை வழங்கவில்லை எனும்போது அதை யார் கொடுத்தது என்று தெரியவில்லை. இப்படி கவர்னர் மாளிகையில் பல்வேறு ஊழல்களும், முறைகேடுகளும் நடந்துள்ளது. எனவே சி.எஸ்.ஆர் நிதிச் செலவு குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த அரசு பரிந்துரை செய்ய வேண்டும்” என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க