வெளியிடப்பட்ட நேரம்: 13:34 (23/10/2018)

கடைசி தொடர்பு:13:34 (23/10/2018)

`நான் சொல்வது வெறும் பேச்சுக்காக அல்ல; மற்றவர்களைப்போல் எனது அரசியல் இருக்காது!'- ரஜினிகாந்த்

``ஒரு புது அரசியலை அறிமுகப்படுத்தி அதன் மூலம் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் நாம் அரசியலுக்கு வந்துள்ளோம்'' என மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி அறிவுறுத்தியுள்ளார். 

ரஜினி

`பேட்ட' படத்தில் நடித்துவந்த ரஜினிகாந்த் தன் படவேலைகள் முடிவடைந்த நிலையில் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்ந்த வேலைகளில் கவனம் செலுத்தியுள்ளார். நேற்று ராகவேந்திரா மண்டபத்தில் தன் கட்சி நிர்வாகிகளுடன் இரண்டு மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் ரஜினி. இதைத் தொடர்ந்து தன் மன்ற நிர்வாகிகளுக்கு சில அறிவுரை வழங்கி அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். 

அதில், ``நமது மன்றத்தில் எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் என் அனுமதி இல்லாமல் நடந்ததாக சிலர் பொய்ப் பிரசாரம் செய்து வருவது என் கவனத்துக்கு வந்தது. அதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 

நம் மன்றத்தின் உறுப்பினர்கள் நியமனம், மாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்துமே என் பார்வைக்கு கொண்டு வரப்பட்டு என் ஒப்புதலுடன்தான் அறிவிக்கப்படுகின்றன. கடந்த வருடம் மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின்போது, ‘ நான் அரசியலுக்கு வந்தால் அதைவைத்து பதவி வாங்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு உள்ளவர்களை அருகில் கூட சேர்க்க மாட்டேன் என நான் தெரிவித்திருந்தேன். அது வெறும் வாய் வார்த்தையல்ல. தமிழகத்தில் ஒரு புது அரசியலை அறிமுகப்படுத்தி அதன் மூலம் ஒரு நல்ல அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகதான் நாம் அரசியலுக்கு வந்துள்ளோம். அப்படியல்லாமல் மற்றவர்களைப் போல் அரசியல் செய்ய நாம் ஏன் அரசியலுக்கு வரவேண்டும். நாம் எந்த எண்ணத்துடன் அரசியலுக்கு வந்துள்ளோம் என்பதை முதலில் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம். 

நான் அடிக்கடி மன்றத்தில் சொல்லும் விஷயத்தைத்தான் திரும்பவும் சொல்கிறோம். நீங்கள் முதலில் உங்களைக் குடும்பத்தை பார்த்துக்கொள்ளுங்கள் அதன் பிறகுதான் மற்றவையெல்லாம். மன்றத்துக்காக யாரையும் செலவு செய்ய வேண்டும் என்று நான் சொன்னது இல்லை. நான் மன்றத்தினருக்கு கொடுத்த வேலை பணம் செலவு செய்து முடிக்க வேண்டிய வேலையும் இல்லை. அதனால் யாராவது என்னிடம் வந்து நான் மன்றத்துக்காக பணம் செலவு செய்துள்ளேன் என்று சொன்னால் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. வெறும் ரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததைச் சாதிக்க முடியும் என யாராவது நினைத்தால் அவரது புத்தி பேதலித்துள்ளது என்றுதான் அர்த்தம். மக்களுடைய ஆதரவு இல்லாமல் அரசியலில் நாம் நினைத்ததைச் சாதிக்க முடியாது. 30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்ததால் அது மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கு அரசியலில் ஈடுபடுவதற்கான முழுத் தகுதி இல்லை. 

நம்முடன் சேர்ந்து செயல்படவிரும்பும் மக்களுக்கு பொறுப்புகளை வழங்கி நாம் அவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். கொடுத்த வேலையைத் தானும் செய்யாமல், துடிப்புடன் செயல்படுபவர்களையும் செய்ய விடாமல் தடுத்து மன்றத்தின் கொள்கைக்கு முரணாக செயல்பட்டவர்களைத்தான் நீக்கி இருக்கிறோம். நம் கொள்கைக்கு ஒத்துவராதவர்களை நம்முடன் வைத்திருப்பதில் அர்த்தம் இல்லை. ஊடகங்கள் மூலமாக நம்மைப் பற்றி அவதூறு பரப்பி வருபவர்கள் என் ரசிகராக இருக்க முடியாது. வீண் வதந்திகள் நம் நேரத்தை வீணாக்கக்கூடாது. மன்றத்துக்காக உண்மையாக உழைக்கும் அனைவரது செயல்பாடுகளையும் நான் நன்கு அறிவேன். அந்த உழைப்பு வீண் போகாது. அதற்கான பலனை இறைவன் நம் நாட்டு மக்களுக்குத் தருவான் என நான் முழுமையாக நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.