வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (23/10/2018)

கடைசி தொடர்பு:15:05 (23/10/2018)

ஜெயக்குமாரைத் தொடர்ந்து அடுத்த ஆடியோ! - கொங்கு மண்டலத்துக்கு டார்கெட்

செல்போன் ஆடியோ


அமைச்சர் ஜெயக்குமார் குறித்து இரண்டு நாள்களுக்கு முன்பு வெளியான ஆடியோ ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அ.தி.மு.க-வை சேர்ந்த வி.ஐ.பி ஒருவரின் ஆடியோ விரைவில் வெளியாகப்போவதாகத் தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன. ஏற்கெனவே வெளியான ஆடியோவில் உள்ள குரல் என்னுடையதே அல்ல, திட்டமிட்ட சதி இது என அமைச்சர் ஜெயக்குமார் நேற்று விளக்கம் தெரிவித்தார். இந்நிலையில் இன்று தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அந்த ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது அல்ல என்று ஜெயக்குமார் சொல்லியுள்ளார். ஆனால், குழந்தை அவருடையது அல்ல என்று சொல்லியுள்ளாரா? அந்தப் பெண்ணுக்கு இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேட்டி அளித்தார். மேலும், இந்த ஆடியோவை தான் வெளியிடவில்லை என்றும் வெற்றிவேல் விளக்கம் கொடுத்துள்ளார். இந்நிலையில் புதிய தகவல் ஒன்று இப்போது தினகரன் வட்டாரத்தில் உலவிவருகிறது. 

பதினெட்டு எம்.எல்.ஏ-க்கள் தீர்ப்பு விரைவில் வர உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தினகரன் பக்கம் உள்ள எம்.எல்.ஏ-க்களை இழுக்கும் வாய்ப்புள்ளது எனத் தினகரன் கருதுகிறார். அதனால், அதற்கு முன்பே எடப்பாடிக்கு நெருக்கமானவர்களைக் காலி செய்துவிட வேண்டும் என்று தினகரன் தரப்பு முடிவு செய்துள்ளது. அந்த அஜெண்டாவில் முதல்படி ஜெயக்குமார் குறித்து வெளியான ஆடியோ என்கிறார்கள். அதைத் தாண்டி இன்னோர் ஆடியோ ஒன்றும் உள்ளது. அந்த ஆடியோ வெளியாகும்போது ஒட்டுமொத்த தமிழகமுமே பரபரப்பாகும். முதல்வருக்கு நெருக்கமான அந்த வி.ஐ.பி ஆளும்கட்சியில் முக்கிய அங்கமாக உள்ளார். அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை கவனிப்பதிலும் கைதேர்ந்த அந்த வி.ஐ.பி, தனது மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுடன் நீண்டகால உறவில் இருந்துவருகிறார். அவர்கள் இருவரும் மணிக்கணக்கில் பேசும் ஆடியோவை கைப்பற்றி உள்ளது ஒரு டீம். அந்த ஆடியோ இப்போது தினகரனுக்கு நெருக்கமானவர்கள் வசம் இருப்பதாக சொல்லப்படுகிறது. முதல்வருக்கு நெருக்கமான அந்த கொங்குமண்டல வி.ஐ.பி-யின் ஆடியோவை விரைவில் வெளியிட்டு ஆளும்கட்சி கூடாரத்தில் அடுத்த புயலைக் கிளப்பத் திட்டமிட்டுள்ளார்கள்.