வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (23/10/2018)

கடைசி தொடர்பு:15:46 (23/10/2018)

‘ குழந்தை தன்னுடையது இல்லை எனக் கூறவில்லையே..?' - ஜெயக்குமாரை சீண்டும் வெற்றிவேல்

`இன்னும் சில நாள்களில், பாதிக்கப்பட்ட பெண்ணே வெளியில் வந்து பேசும் சூழலும் உருவாகலாம்' என்கிறார், தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல். 

வெற்றிவேல்

தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மீது சொல்லப்படும் பாலியல் குற்றச்சாட்டால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரத்தைத் தொடங்கிவைத்தவர், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல். அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினோம். அப்போது, `` அமைச்சர் ஜெயகுமாருக்கு அந்தக் கட்சியில் முழு ஆதரவு உள்ளது. இது ,கட்சிக்கு மிகப்பெரும் களங்கத்தை உண்டாக்கியுள்ளது. ஜெயலலிதா இருக்கும்போது, அவர் பெண்கள் விஷயத்தில் மிகவும் கண்டிப்பாக இருந்தார். அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகுதான், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதேபோன்ற விவகாரத்தில் மேலும் இரண்டு, மூன்றுபேர் சிக்கியுள்ளனர். அவை அனைத்தும் வெளியில் வந்தால், அவர்களுக்குத்தான் அசிங்கம். இதை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு, அனைவரும் தங்களின் தவற்றைத் திருத்திக்கொள்ள வேண்டும்.

அந்த ஆடியோவை நான் வெளியிடவில்லை. ஜெயகுமார் எத்தனை பேரிடம் பிரச்னையில் ஈடுபட்டாரோ தெரியவில்லை அவர்களில் யாரேனும் இதைச் செய்திருக்கலாம். ஆனால், என்னிடம் இந்த ஆடியோ இல்லை. வேறு ஆடியோதான் உள்ளது. அதை தேவைப்படும் போது வெளியிடுவேன். அந்த ஆடியோவுக்கான ஆதாரங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன. ஆதாரங்கள் இல்லாமல் நாங்கள் எதையும் பேச மாட்டோம். பாதிக்கப்பட்ட பெண் என்னை அணுகி முறையிட்டது தொடர்பான விஷயங்களையும் தேவைப்படும்போது வெளியிடுவேன். ஆனால், தற்போது வெளிவந்துள்ள ஆடியோவுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அதை யார் வெளியிட்டார்கள் என எனக்குத் தெரியாது. 

'அந்த ஆடியோவில் உள்ள குரல் தன்னுடையது இல்லை என அமைச்சர் கூறினாரே தவிர, அந்தக் குழந்தை தன்னுடையது இல்லை என அவர் கூறவில்லையே. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில், நாங்கள் அனைவரும் மிகுந்த கவலையில் இருந்தோம். ஆனால், இவர் திண்டுக்கல்லில் அந்தப் பெண்ணுடன் இருந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கோ அல்லது அந்தக் குழந்தைக்கோ ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், கண்டிப்பாக போராட்டத்தில் ஈடுபடுவோம். 1982-ம் ஆண்டு, ஜெயலலிதா தன்னைக் கட்சியில் அறிமுகப்படுத்தியதாக ஜெயகுமார் கூறினார். ஆனால், ஜெயலலிதாவே 1982-ம் ஆண்டுதான் எம்.ஜி.ஆரால் அறிமுகப்படுத்தப்பட்டார். அவர், மிகுந்த பயத்தில் என்ன சொல்ல வேண்டும் என்பதே தெரியாமல் பேசிவருகிறார். இதுபோன்ற விவகாரத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைப் பற்றி நாங்கள் நீதிமன்றத்தில் முறையிட முடியாது. பாதிக்கப்பட்டவர்கள்தான் முறையிட வேண்டும். முதல்வருக்கு இது ஓர் எச்சரிக்கை. அவர் இதிலிருந்து தப்பித்துக்கொள்வது நல்லது. எங்களை அவர்கள் தகுதிநீக்கம் செய்துவிட்டார். தற்போது நாங்கள் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை. அமைச்சர் விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு, அந்தப் பெண்ணுக்கு முறையான நீதி கிடைக்க உதவ வேண்டும். மேலும், அமைச்சரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும். 

தங்களுக்கு ஏற்பட்ட பிரச்னையில் இருந்து நிவாரணம் கிடைப்பதற்காக, அந்தப் பெண்ணும் அவரது தாயாரும் அமைச்சரைச் சென்று சந்தித்துள்ளனர். இரண்டு நாளில் போன் செய்வதாகக் கூறி அனுப்பிவைத்துள்ளார் அமைச்சர். பிறகு, நான்கு நாள்கள் கழித்து அந்தப் பெண்ணுக்கு போன் செய்த அமைச்சர், நேரில் வரச்சொல்லியிருக்கிறார். ` அம்மா வீட்டில் இல்லை; பிறகு வருகிறேன்' என அந்தப் பெண் கூற, ` நீங்கள் வந்த வேலை முடிந்துவிட்டது. அதை மட்டும் பார்த்துவிட்டுச் செல்லுங்கள்' எனக் கூறியுள்ளார். தனியாக வந்த பெண்ணுக்கு ஜூஸில் ஏதோ கலந்துகொடுத்து ஏமாற்றியுள்ளார் அமைச்சர். பிறகு, இந்த விவகாரம் பெண்ணின் தாய்க்குத் தெரியவர, அவர் அதைப் பெரும் பிரச்னையாக்க முயன்றுள்ளார். அதைத் தடுத்த அமைச்சர், பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்துகொள்வதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், நீண்ட நாள்களாக அமைச்சர் இதுபற்றி கண்டுகொள்ளவில்லை. இறுதியில் அந்தப் பெண் கர்ப்பமாகியுள்ளார். அவர், அந்தப் பெண்ணை மனைவியாக்கிக் கொண்டால் மட்டுமே இந்தப் பிரச்னைகளில் இருந்து தப்ப முடியும். குழந்தைக்கும் அவர்தான் பாதுகாப்பு தரவேண்டும். இன்னும் சில நாள்களில் பாதிக்கப்பட்ட பெண்ணே வெளியில் வந்து பேசும் சூழலும் உருவாகலாம்” என்றார் விரிவாக.