வெளியிடப்பட்ட நேரம்: 16:54 (23/10/2018)

கடைசி தொடர்பு:16:54 (23/10/2018)

`சசிகலாவுக்கு இது தெரியுமா?’ - நடராசனின் பிறந்தநாளில் உறவினர்கள் வேதனை!

சசிகலாவின் கணவர் ம.நடராசனின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, நடராசனின் உறவினர்கள் அவர் சமாதியில் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர். ஆனால், நடராசன் பிறந்தநாளை தினகரன் கண்டுகொள்ளவில்லை. மேலும், அ.ம.மு.க நிர்வாகிகள் யாரும் மரியாதைசெலுத்த வரவில்லை. இது, சிறையில் இருக்கும் சசிகலாவுக்குத் தெரியுமா என்று உறவினர்கள் புலம்பிவருகிறார்கள்.

நடராசன் சமாதி

தஞ்சாவூரிலிருந்து விளார் செல்லும் சாலையில், முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு எதிரே அமைந்துள்ளது சசிகலாவின் கணவர் நடராசனின் சமாதி. இன்று, நடராசனுக்கு 76-வது பிறந்தநாள். அவர் இறந்த பிறகு, வரும் முதல் பிறந்தநாள் என்பதால், அ.ம.மு.க சார்பில் விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என நினைத்துள்ளனர் நடராசனின் சகோதரர்கள். ஆனால் இதை, தினகரன் தரப்பு கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்காக, நடராசனின் ஆதரவாளர்கள் தஞ்சாவூரில் போஸ்டர் அடித்து ஒட்டினர். மேலும், அவர் சமாதியை மலர்களால் அலங்கரித்தனர். காலையிலேயே அவரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரும் மாலை அணிவித்து மரியாதைசெலுத்தினர். அ.ம.மு.க முக்கிய நிர்வாகிகள் வந்து மரியாதைசெலுத்துவார்கள் எனக் காத்திருந்தனர். ஆனால், யாரும் வரவில்லை. இதனால், நடராசனின் பிறந்தநாள் குறித்து தினகரன் கொஞ்சம்கூட கண்டுகொள்ளவில்லை என்றும் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்குத் தெரிந்துதான் இப்படி நடக்கிறதா எனவும் புலம்பிவருகின்றனர்.

இதுகுறித்து சிலரிடம் பேசினோம். ``சசிகலா மீது நடராசன் உயிரையே வைத்திருந்தார். நடராசன் உடல் நலம் பாதிக்கப்பட்டதற்கு சசிகலா சிறை சென்றதும் முக்கியக் காரணம். அவர், கடந்த ஏப்ரல் மாதம் இறந்தபோது, பரோலில் வெளியே வந்த சசிகலா, உங்களை இப்படி விட்டுவிட்டேனே எனக் கூறி கதறிஅழுததோடு, நடராசனால் கட்டப்பட்ட வீட்டிலேயே அவர் ஆசைப்பட்டபடியே தங்கினார். இருவரும் பிரிந்து வாழ்ந்தாலும், ஒருவர் மீது ஒருவர் உயிரையே வைத்திருந்தனர். அதன்பிறகு, சசிகலாவின் ஏற்பாட்டிலேயே தினகரன் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ள படத்திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது. இந்த நிலையில், இன்று நடராசனின் 76-வது பிறந்தநாள். அவர், அரசியலில் பல வித்தைகளைப் படைத்தவர். மறைமுகமாக அ.தி.மு.க-வின் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகித்தவர். அதோடு, இப்போது அ.ம.மு.க-வின் துணை பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய தினகரன், அவரின் பிறந்தநாளை அ.ம.மு.க சார்பிலும் கொண்டாடவில்லை. மேலும், நிர்வாகிகள் யாரும் வந்து மரியாதைசெலுத்தவில்லை என்பது வேதனையான ஒன்று. சசிகலாவுக்கு இதுகுறித்து தெரிந்திருந்தால் இப்படி நடந்திருக்காது. சசிகலாவை சிறையில் சந்தித்த தினகரன், நடராசனின் பிறந்தநாள் குறித்து தெரிவித்திருக்க வேண்டும். தினகரன் வரவில்லை என்றாலும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை வரவழைத்து மரியாதைசெலுத்தச் செய்திருக்க வேண்டும்'' என்றனர் வேதனையுடன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க