வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (23/10/2018)

கடைசி தொடர்பு:20:30 (23/10/2018)

``மீ டூ ஆயுதத்தைக் கொண்டு பெண்கள் தாங்களே குத்திக்கொள்ளக் கூடாது” - நாஞ்சில் சம்பத் அட்வைஸ்!

``தமிழக முதல்வர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகுறித்து  சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதும் அவர், முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்திருக்க வேண்டும். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு  தங்களுக்கு  சாதகமாக வரும்  என டி.டி.வி. தினகரன் நம்புகிறார். அவருடைய நம்பிக்கை நிறைவேற  என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மீ டூ, பெண்களுக்குக் கிடைத்த ஆயுதம். அதை எடுத்து அவர்களே குத்திக்கொள்ளக் கூடாது” என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

நாஞ்சில் சம்பத்

தஞ்சாவூரில், தனியார் கல்லூரி ஒன்றில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.  அதில்  சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு, தங்களுக்கு சாதகமாக வரும் என்று டி.டி.வி.தினகரன் நம்புகிறார். அவருடைய நம்பிக்கை நிறைவேற  என்னுடைய வாழ்த்துகள். 18 எம்.எல்.ஏ-க்களை தற்காத்துக்கொள்ள வேண்டிய பெரும் கடமையும் தினகரனுக்கு  இருக்கிறது. ஏனென்றால்,  7 பேர் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று வெளிப்படையாகவே துணை முதல்வர் பொறுப்பற்ற முறையில் பேசியது பதிவாகியிருக்கிறது. ஆகவே, கோடிக்கணக்கான ரூபாய்களை வைத்துக்கொண்டு பேரம் பேசக்கூடிய  செயல்களைச் செய்வதற்கு அவர்கள் கூச்சப்பட மாட்டார்கள் என்கிற காரணத்தால், தன்பக்கம் இருப்பவர்களைத் தக்க வைத்துக்கொள்வதற்கு பாதுகாப்பான இடத்தில் வைத்து பரிபாலிப்பது ஒன்றும் தவறு இல்லை,

இந்த முயற்சியில் டி.டி.வி. தினகரன் வெற்றிபெறுவார். தமிழக முதல்வர் மீது சிபிஐ விசாரணை  வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட அடுத்த நிமிடமே  அவர், முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்திருக்க வேண்டும். சபரிமலை போராட்டம் திணிக்கப்பட்ட போராட்டம். இதை வைத்துக்கொண்டு கரைசேர முடியாத சில கட்சிகள் மலிவான அரசியலை நடத்துவதுதான் கேரள அரசியலில் நடக்கிற தப்பாட்டம். இந்த தப்பாட்டத்துக்கு ஆயுள் இருக்காது. மீ டூ விவகாரம், பெண்களுக்குக் கிடைத்திருக்கிற பாதுகாப்பான ஆயுதம். அந்த ஆயுதத்தை எடுத்து அவர்களே குத்திக்கொள்ளக் கூடாது” என்றும் தெரிவித்தார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க