‘தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தல் கிடப்பில் போடப்பட்டுள்ளது’ - மாநில அரசைச் சாடும் கே.பாலகிருஷ்ணன் | 'Cancel tax hike and conduct local body elections’- CPI K.Balakrishnan

வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (24/10/2018)

கடைசி தொடர்பு:07:51 (24/10/2018)

‘தோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தல் கிடப்பில் போடப்பட்டுள்ளது’ - மாநில அரசைச் சாடும் கே.பாலகிருஷ்ணன்

உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தி, வரும் 29-ம் தேதி  தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல்

கடலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருப்பாதிரிப்புலியூரில்  பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘நடைபெறவேண்டிய உள்ளாட்சித் தேர்தலை அ.தி.மு.க அரசு கடந்த 2 ஆண்டுகளாக நடத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது. தோல்வி பயத்தால் நீதிமன்றத்தைக் காரணம் காட்டித் தேர்தலை ஒத்திவைக்கிறது. தற்போது, நகராட்சிப் பகுதிகளில் மிகக் கடுமையான வரி உயர்வை ஏற்படுத்தி, மக்களை வாட்டி வதைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி இல்லாமல் வரி உயர்த்தியது கண்டிக்கத்தக்கது.

 வரி உயர்வை ரத்துசெய்ய வலியுறுத்தியும் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தியும், வரும் 29-ம் தேதி  தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.சென்னைக்கு அருகில் ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் ஆலைகள் அமைத்துள்ளன. இந்த ஆலைகளுக்கு மத்திய-மாநில அரசுகள் ஏராளமாகச் சலுகைகளை வழங்கியுள்ளன. ஆனால், அவர்கள் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையைக்கூட தொழிலாளர்களுக்கு வழங்க மறுக்கின்றனர்.

யமஹா, எம்எஸ்என் நிறுவனங்களில் ஏற்பட்டிருக்கிற பிரச்னையில் தமிழக அரசு வழங்கியுள்ள ஆலோசனைகளைக்கூட நிறுவனங்கள் ஏற்க மறுத்துள்ளன. தற்போது, பேரணியாகச் சென்ற தொழிலாளர்கள்கூட கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். எனவே, தொழிலாளர் உரிமையைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்வளத் துறை அமைச்சர் மீதான பாலியல் புகார் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகாரின் மீது அரசு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். புகார் உண்மையெனில், அவர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.