வெளியிடப்பட்ட நேரம்: 16:37 (24/10/2018)

கடைசி தொடர்பு:18:42 (24/10/2018)

அடுத்து `ஜ ஆடியோ’ ரெடி...! - தினகரன் அணியின் நெக்ஸ்ட் வெடி

இந்த ஆடியோக்களைத் தினகரனிடம் கொடுத்த ஆதரவாளர்கள் சிலர், `எங்களை இப்படியெல்லாம் அழைக்கிறார்கள், உங்களைத்தான் நம்பியிருக்கிறோம்' எனக் கூறியுள்ளனர்.

அடுத்து `ஜ ஆடியோ’ ரெடி...! - தினகரன் அணியின் நெக்ஸ்ட் வெடி

குதிநீக்க வழக்கில் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வரலாம் என்பதால், குற்றாலத்தில் முகாமிட்டுள்ளனர் தினகரன் ஆதரவாளர்கள். `தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி கவலைப்படவில்லை. தினகரனிடம் உள்ள 18 பேரில் 10 பேர் நம் பக்கம் வந்துவிட்டனர்' என அமைச்சர்களிடம் பேசியிருக்கிறார் முதல்வர்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். 

சென்னை உயர் நீதிமன்றத்தில் 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்க வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. இந்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் தீர்ப்பில் முரண்பட்டதால், மூன்றாவது நீதிபதியான சத்தியநாராயணா இந்த வழக்கை விசாரித்து வந்தார். இதன் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்துவிட்டார். இந்நிலையில், கடந்த சில நாள்களாக தீர்ப்பு வெளியாவது குறித்துத் தகவல்கள் வருவதால், தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களை குற்றாலத்துக்கு அனுப்பிவிட்டார் தினகரன். அவர்களும் தாமிரபரணி புஷ்கரத்தில் நீராடுவது, வாக்கிங் போவது எனக் கூவத்தூர் பாணியில் செயல்பட்டு வருகின்றனர். தினகரன் தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து அ.தி.மு.க வட்டாரத்தில் எந்த அதிர்வலைகளும் தென்படவில்லை. 

ஓ.பன்னீர்செல்வம்``தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எந்தவிதக் கவலையும் இல்லை. இதுகுறித்து அமைச்சர்களிடம் பேசிய முதல்வர், 'தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களில் 10 பேர் நம்மிடம்தான் இருக்கிறார்கள். அவர்கள் குற்றாலம் போனால் என்ன? கூவத்தூர் போனால் என்ன? இந்த வழக்கில் நமக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வரும். ஒருவேளை மாறுபாடான தீர்ப்பு வந்தாலும் அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. தினகரன் பக்கம் இருக்கும் ஆறு எஸ்.சி எம்.எல்.ஏ-க்கள் உட்பட பத்து பேர் நம்மை ஆதரிப்பார்கள். எந்த ஊரில் அவர்கள் இருந்தாலும் நம் பக்கம் வருவார்கள்' என நம்பிக்கையோடு பேசினார்" என விவரித்த அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், 

``தினகரன் தரப்பினரை வளைக்கும் வேலையை ஜக்கையன் மூலமாகவும் செயல்படுத்தியிருக்கிறது முதல்வர் தரப்பு. அந்த எம்.எல்.ஏ-க்களிடம் போனைக் கொடுத்து, சி.எம்மிடம் நேரடியாகப் பேச வைத்திருக்கிறார் ஜக்கையன். தினகரனுடனான ரகசிய சந்திப்புக்குப் பிறகு, ஓ.பி.எஸ்ஸை கட்டம் கட்டிவிட்டுவிட்டனர். ஓ.பி.எஸ்ஸை, `தன்னுடைய வாழ்நாள் எதிரி' எனக் கூறிய ஜக்கையன், எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்துவிட்டார். எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதியாக இருந்தாலும் தங்க தமிழ்ச்செல்வன் பேச்சை மீறி ஜக்கையன் செயல்பட்டதில்லை. எதாவது கருத்தைக் கேட்டால்கூட, `தங்க தமிழ்ச்செல்வனிடம் முதலில் கேளுங்கள்' எனக் கூறிவிடுவார். அப்படிப்பட்ட ஜக்கையன், எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றதிலேயே பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன. தவிர, பொருளாதாரரீதியாக சில பிரச்னைகளில் சிக்கியிருந்தார் ஜக்கையன். அதையும் எடப்பாடி பழனிசாமி சரிசெய்துவிட்டார்" என்றார். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க நிர்வாகி ஒருவர், ``வழக்கின் தீர்ப்பு வருவதற்குள் தினகரன் பக்கம் இருந்து சில எம்.எல்.ஏ-க்களை வளைக்கும் முடிவில் இருந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த ஆப்ரேஷனில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண்டார் ஜக்கையன். இதன் தொடர்ச்சியாக, தினகரன் தரப்பினரிடம் அவர் விரிவாகப் பேசினார். இந்த ஆடியோக்களைத் தினகரனிடம் கொடுத்த ஆதரவாளர்கள் சிலர், `எங்களை இப்படியெல்லாம் அழைக்கிறார்கள், உங்களைத்தான் நம்பியிருக்கிறோம்' எனக் கூறியுள்ளனர். இந்த ஆடியோக்களை எல்லாம் தினகரன் தரப்பினர் தொகுத்து வைத்துள்ளனர். ஒரு ஆடியோவில் பேசும் ஜக்கையன், `தினகரனை நம்பி என்ன பிரயோஜனம்? எடப்பாடி பழனிசாமி நல்லபடியாக பார்த்துக்கொள்கிறார். நீங்களும் இந்தப் பக்கம் வந்துவிடுங்கள்' எனப் பேசுவதாக இருக்கிறது. தகுதிநீக்க வழக்கின் தீர்ப்புக்குப் பிறகு, ஆளும்கட்சி தரப்பில் நெருக்கடிகள் அதிகரிக்கும்போது இந்த ` ஜ' ஆடியோக்களை தினகரன் தரப்பு வெளியிடும்" என்கிறார்.