Published:Updated:

`முதலமைச்சர் புதுக்கட்சி ஏன்?’ - வடக்கு இலங்கை பரபரப்பு!

`முதலமைச்சர் புதுக்கட்சி ஏன்?’ - வடக்கு இலங்கை பரபரப்பு!
`முதலமைச்சர் புதுக்கட்சி ஏன்?’ - வடக்கு இலங்கை பரபரப்பு!

லங்கையின் ஈழத்தமிழர் பகுதியான வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேசுவரன், யாழ்ப்பாணத்தில் இன்று புதிய கட்சியைத் தொடங்கினார். `தமிழ் மக்கள் கூட்டணி’ (TMK) எனப் புதிய கட்சிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

முன்னதாக, வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சரும் திருகோணமலை மாவட்ட விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் எழிலனின் மனைவியுமான அனந்தி சசிதரன், கடந்த ஞாயிறன்று திடீரென ‘ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்’ எனும் புதிய கட்சியைத் தொடங்கினார். வடக்கு மாகாண சபையின் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதையொட்டி, நடப்பு மாகாண சபையின் நிறைவுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் விக்கினேசுவரன், இலங்கை அரசின் மீது கடும் அதிருப்தியை வெளியிட்டார். இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இருந்தாலும், போரால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில், முதலமைச்சர் நிதியம் ஒன்றை அமைக்க கூட்டமைப்பால் வலியுறுத்தமுடியவில்லை என்பதை அவர் முக்கியமாகக் குறிப்பிட்டார். 

உத்தேச முதலமைச்சர் நிதியத்தின் மூலம் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் முதலீடுகளை வடக்கு மாகாண மேம்பாட்டுக்கு ஈர்க்க முடியும்; ஒரே சமயத்தில் நாட்டிலுள்ள ஈழத்தமிழரின் நிலைமையையும் புலத்தில் உள்ளவர்களின் முதலீட்டையும் மேம்படுத்த முடியும் என்பது விக்கினேசுவரனின் திட்டம். ஆனால், இந்தத் திட்டத்துக்கு கொழும்பு அனுமதியளிக்காமல் கிடப்பிலேயே போட்டுவைத்திருக்கிறது என்பதை அவர் மிகவும் கவலையுடன் குறிப்பிட்டார்.  

``வட மாகாணசபையில் நாம் ஆட்சிசெய்த கடந்த 5 ஆண்டுகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையானது எம்மை அழைத்து, எமது செயற்திட்டங்கள் என்னென்ன, எத்தகைய பிரச்னைகளை நாம் எதிர்கொள்கின்றோம், அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம், நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இவற்றுக்காக ஏதேனும் செய்ய முடியுமா என்றெல்லாம் கேட்க எத்தனிக்கவில்லை. இது மனவருத்தத்தைத் தருகின்றது” என்று விக்கினேசுவரன் கூறினார். 

``எந்த ஒரு புதிய அரசும் தனது ஆட்சியின் முதல் இரு ஆண்டுகளுக்குள்ளாகவே தேசநலன் சார்ந்த முக்கிய திட்டங்களை நடைமுறைப்படுத்த எத்தனிக்கும். ஏனெனில், மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லையெனில் அவ்வரசு மீதான மக்களின் வெறுப்பு இத்தகைய முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்படுவதைப் பாதித்துவிடும். இன்றைய மத்திய அரசாங்கமானது, இனப்பிரச்னைக்குத் தீர்வு என்று கூறிக் காலம் தாழ்த்திக்கொண்டு வந்துள்ள அரசியலமைப்பு மாற்றம், உருப்படியான எந்த முன்னேற்றமும் இன்றி அரசாங்கத்தின் ஆட்சி ஒன்றரை ஆண்டுகளில் காலாவதியாகவுள்ள நிலையில், ஆமை வேகத்தில் நகர்ந்துவருகிறது. இந்த அரசியலமைப்பு திருத்த நடவடிக்கையானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்புக்கட்சிகளின் ஆலோசனை இன்றி அதன் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் பங்கேற்பும் இல்லாமலும் வட மாகாண சபையின் பிரதிநிதித்துவம் இன்றியும், இரு தனி நபர்களின் விருப்புவெறுப்பையே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிபலிப்பாக ஜனநாயகவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

அரசியலமைப்பு மாற்றத்தை இனப்பிரச்னைக்கான தீர்வாக ஏற்றுக்கொண்டு அதில் கலந்துகொண்டதன் மூலம் 70 வருடகால தமிழ்த் தேசிய அரசியல் மற்றும் ஆயுத ரீதியான போராட்டங்கள் மூலம் கட்டி எழுப்பப்பட்ட சிங்கள - தமிழ் தரப்புகளின் பேச்சுவார்த்தை மூலமாகப் பேரம் பேசும் நிலைமை இன்று இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி ஆகிய நிலைப்பாடுகளைக் கைவிட்டு, எமது மக்களின் எந்த அங்கீகாரமும் இன்றி, இலங்கை முழுவதும் ஒற்றையாட்சி முறை என்பதை எமது தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். பௌத்தத்துக்கு முதலிடம் என்பதையும் இந்த அரசியலமைப்பு உத்தேசத் திருத்தத்தில் ஏற்றுக்கொண்டதன் மூலம் கட்டமைப்பு ரீதியானதும், கலாசார ரீதியானதுமான தொடர் இன அழிப்புக்கான வழியை ஏற்படுத்தியுள்ளனர்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோரைக் குறிப்பிடாமல் கடும் அதிருப்தியை தெரிவித்தார். 

அதையடுத்து, இன்று கூட்டமைப்பில் இயங்கும் சில கட்சிகளும் பல தமிழர் அமைப்புகளும் இணைந்துள்ள `தமிழ் மக்கள் பேரவை’யின் சார்பில் இன்று யாழ்ப்பாணத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தன் அடுத்தகட்ட அரசியல் திட்டம் பற்றி முதலமைச்சர் விக்கினேசுவரன் அறிவிப்பார் என்றும் பரவலாக எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படியே அக்கூட்டத்தில், விக்கினேசுவரன் தன் புதிய கட்சி அறிவிப்பை வெளியிட்டார். 

அப்போது பேசுகையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தம் கொள்கைகளுக்கு விசுவாசமாக இதுவரை நடந்திருந்தார்களேயானால் நான் ஓய்வுபெறப் போயிருப்பேன். கூட்டமைப்பை எந்தவிதத்திலும் கூறுபோட நான் விரும்பவில்லை. என் குறிக்கோள் சரி என்றால் மக்கள் என் பக்கம் சார்வார்கள்; இல்லையேல் ஒதுக்கிவிடுவார்கள்” என்ற அவர், விவாதிக்கவும் ஆய்வுக்கு உட்படுத்தவும் அதன்படி செயற்படவுமென பத்து முன்மொழிவுகளையும் கூட்டத்தில் வைத்தார். 

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண அமைச்சர் அனந்தி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் அமைச்சரும் சுற்றுச்சூழலியலாளருமான ஐங்கரநேசன் ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டனர். 

புதிய கட்சியைத் தொடங்கியுள்ள வடக்கிலங்கை முதலமைச்சர் விக்கினேசுவரனுக்கு இன்று 80-வது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.