Published:Updated:

18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் இன்று காலை தீர்ப்பு! - பரபரப்பான கட்டத்தில் தமிழக அரசியல்

18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் இன்று காலை தீர்ப்பு! - பரபரப்பான கட்டத்தில் தமிழக அரசியல்
18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் இன்று காலை தீர்ப்பு! - பரபரப்பான கட்டத்தில் தமிழக அரசியல்

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் புகார் அளித்த விவகாரத்தில், டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து 18- எம்.எல்.ஏ-க்களும் நீதிமன்றத்தை அணுகினர். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் ஆகியோர் இருவேறு தீர்ப்புகளை வழங்கினர். இதையடுத்து, இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. முதலில் நீதிபதி விமலா நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் உச்சநீதிமன்றம், சத்ய நாராயணனை நியமித்தது.

சத்யநாரயணன், ஜூலை மாதத்தில் விசாரணையைத் தொடங்கினார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த பின்னர், தீர்ப்புத் தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தார். இந்த நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. 

டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் குற்றாலத்தில் முகாமிட்டுள்ளனர். தீர்ப்பு எந்தப் பக்கமும் வரலாம் என்பதால், குதிரைபேர அரசியலை தடுப்பதற்காக தினகரன் அரசியலில் இப்படி ஒரு மூவ் செய்துள்ளார். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லுமா... செல்லாதா... என்ற கேள்விக்கு விடையாகத்தான் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவர உள்ளது. `தகுதிநீக்கம் செல்லும்' என்று தீர்ப்பு வெளியானால், தற்போதைய அ.தி.மு.க ஆட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. `தகுதிநீக்கம் செல்லாது' என்று தீர்ப்பு வருமேயானால், அ.தி.மு.க-வின் தற்போதைய மெஜாரிட்டி பலம் குறைந்து ஆட்சிக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும். முதல்வரை மாற்ற வேண்டும் என்பதுதான் தினகரன் தரப்பு கோரிக்கை. தீர்ப்பு தினகரன் அணிக்கு சாதகமாக வந்தால், சட்டமன்றத்தில் முதல்வர் பெரும்பான்மையை நீருபிக்க வேண்டும். இந்தத் தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.