வெளியிடப்பட்ட நேரம்: 11:09 (25/10/2018)

கடைசி தொடர்பு:11:14 (25/10/2018)

`அரசியலில் பின்னடைவா; மேல்முறையீடு செய்வோம்!' - தீர்ப்புகுறித்து தினகரன் விளக்கம்

‘அரசியலில் பின்னடைவே கிடையாது. இது ஒரு அனுபவம்’ என 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் தொடர்பான தீர்ப்புக்குப் பிறகு டி.டி.வி.தினகரன் விளக்கம் அளித்துள்ளார். 

தினகரன்

18 எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்கம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் இன்று பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளார். மேலும், தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்றும், சபாநாயகர் முடிவில் தவறில்லை என்றும் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி தினகரன், “அரசியலில் பின்னடைவு எதுவும் கிடையாது. இது ஒரு அனுபவம் மட்டுமே. சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்தது செல்லாது என்ற தீர்ப்பை மட்டுமே எதிர்பார்த்தோம். ஆனால், இன்றைய தீர்ப்பு மாறி வந்துள்ளது. 18 எம்.எல்.ஏ-க்களுடன் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகுறித்து முடிவெடுப்போம்.

மேல்முறையீடு இல்லை என தங்க தமிழ்ச்செல்வன் மட்டுமே கூறினார். அது, 18 எம்.எல்.ஏ-க்களின் கருத்து இல்லை, தங்க தமிழ்ச்செல்வனின் தனிப்பட்ட கருத்து. எம்.எல்.ஏ-க்களுடன் மேல்முறையீடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். அவர்கள் அனைவரும் மேல்முறையீடு செய்வோம் என முடிவெடுத்தால், நிச்சயம் மேல்முறையீடு செய்வோம். இந்தத் தீர்ப்பு எங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை இன்னும் ஒற்றுமைப்படுத்தும். எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் புஷ்கர விழாவுக்காக மட்டுமே நெல்லை சென்றனர். வேறு எந்த நோக்கமும் இல்லை. இன்று மாலை நான் நெல்லைச் செல்ல இருக்கிறேன். தீர்ப்பு தொடர்பாக 18 எம்.எல்.ஏ-க்கள் என்ன சொல்கிறார்களோ அதுதான் அடுத்தக்கட்ட முடிவாக இருக்கும். தேவைப்பட்டால் மேல்முறையீடு செல்வோம்; இல்லையேல் தேர்தலை எதிர்கொள்வோம்.

துரோகி யார் என மக்களுக்குத் தெரியும். மக்கள் தீர்ப்புதான் மகேசன் தீர்ப்பு. இடைத்தேர்தல் நடந்தால், யார் துரோகி என்று  தெரிந்துவிடும். நாங்கள் அனைத்துக்கும் தயாராக உள்ளோம். முன்னதாகச் சொன்ன இரண்டு தொகுதிகளின் தேர்தலையே எங்கள் கட்சி ஆவலுடன் எதிர்பார்த்துவருகிறது. தற்போது 20 இடங்களில் தேர்தல் வைத்தாலும் சந்திக்கத் தயார். அதிலும் நாங்கள்தான் வெற்றிபெறுவோம். எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ளத் தயாராகத்தான் உள்ளோம். முன்னதாக இரண்டு நீதிபதிகள் அவர்களின் கருத்தைக் கூறினர். தற்போது மூன்றாவது நீதிபதியும் அப்படித்தான் கூறியிருக்கிறார். ஆனால், அது எங்களுக்கு எதிராக வந்துள்ளது. இதில் நீதியரசரைக் குறைகூறுவது சரியானதல்ல'' என்றார்.