வெளியிடப்பட்ட நேரம்: 11:55 (25/10/2018)

கடைசி தொடர்பு:11:55 (25/10/2018)

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும்... ஆரம்பம் முதல் என்ன நடந்தது?

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரையும் தகுதி நீக்கம் செய்யச் சொல்லி அரசு கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலுக்குக் கோரிக்கைவிடுத்தார்.

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும்... ஆரம்பம் முதல் என்ன நடந்தது?

``முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை" எனக் கூறி, அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்  தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 19 பேர் தமிழக முன்னாள் பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்துத் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். இதனால், ``அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கலாம்" என்று அரசு கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்குப் பரிந்துரை செய்திருந்தார். இதுதொடர்பாக நேரில் விளக்கமளிக்குமாறு எம்.எல்.ஏ-க்களுக்குச் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அளித்திருந்தார். அவர்களில் கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் தவிர, 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் 18-ம் தேதியுடன் ஒருவருடம் நிறைவுற்றது. இந்த நிலையில், இதுகுறித்த வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக எம்.சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டு, அவர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. தற்போது, மூன்றாவது நீதிபதியும், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பளித்தார். இதுகுறித்த டைம்லைன்...

18 எம்.எல்.ஏ-க்கள்

22-08-2017:
* ``முதலமைச்சர் எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை" எனக் கூறி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் ((தங்க தமிழ்ச்செல்வன் - ஆண்டிபட்டி தொகுதி, ஆர்.முருகன் - அரூர் தொகுதி, மாரியப்பன் கென்னடி - மானாமதுரை தொகுதி,  கதிர்காமு - பெரியகுளம் தொகுதி, ஜெயந்தி பத்மநாபன் - குடியாத்தம் தொகுதி, பழனியப்பன் - பாப்பிரெட்டி பட்டி தொகுதி, செந்தில் பாலாஜி - அரவக்குறிச்சி தொகுதி, எஸ். முத்தையா - பரமக்குடி தொகுதி, வெற்றிவேல் - பெரம்பூர் தொகுதி, என்.ஜி.பார்த்திபன் - சோளிங்கர் தொகுதி, கோதண்டபாணி - திருப்போரூர் தொகுதி, ஏழுமலை - பூந்தமல்லி தொகுதி, ரெங்கசாமி - தஞ்சாவூர் தொகுதி, தங்கதுரை - நிலக்கோட்டை தொகுதி, ஆர்.பாலசுப்பிரமணி - ஆம்பூர் தொகுதி, எஸ்.ஜி.சுப்ரமணியன் - சாத்தூர் தொகுதி, ஆர்.சுந்தரராஜ் - ஒட்டப்பிடாரம் தொகுதி, கே.உமா மகேஸ்வரி - விளாத்திகுளம் தொகுதி, ஜக்கையன் - கம்பம் தொகுதி)) அன்றைய தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு கொடுத்தனர்.

24-08-2017:

*  தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேரையும் தகுதி நீக்கம் செய்யச் சொல்லி அரசு கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலுக்குக் கோரிக்கைவிடுத்தார்.

28-08-2017: 
* ``அரசுக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தது தொடர்பாக 19 பேரும் ஒருவார காலத்துக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்" என அவர்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். 

05-09-2017:

* வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு இடைக்கால விளக்கமளித்தனர். ஆனால் சபாநாயகரோ, அவர்களுடைய விளக்கத்தில் திருப்தியில்லை எனக் கூறி நிராகரித்தார். அத்துடன் வெற்றிவேல் உள்ளிட்ட சில எம்.எல்.ஏ-க்களை 7-ம் தேதி நேரில் ஆஜராகும்படி சபாநாயகர் உத்தரவிட்டார்.

சபாநாயகர் தனபால்

07-09-2017:

* அரசு கொறடா சார்பில் ஆஜராகாததையடுத்து, சபாநாயகர் தனபால், விசாரணையை செப்டம்பர் 14-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

12-09-2017:

* ``தமிழக அரசு உடனடியாகப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்" எனக் கோரி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

* மனுவை விசாரித்த நீதிபதி எம்.துரைசாமி, செப்டம்பர் 20 வரை பெரும்பான்மையை நிரூபிக்கத் தடை விதித்தார்.

14-09-2017:

* அரசு கொறடா ராஜேந்திரன் அளித்த கோரிக்கையின் பேரில், 19 பேர் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் கோரிக்கை. 

16-09-2017:

* டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ஜக்கையன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தார். 

18-09-2017: 

* டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதில், ``கம்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜக்கையன், அரசுக்கு எதிராகக் கடிதம் அளித்தது தொடர்பாக, வருத்தம் தெரிவித்ததையடுத்து, அவர் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை" என விளக்கம் அளிக்கப்பட்டது.

* அன்று காலை 11 மணிக்கு சபாநாயகர் தனபால் உத்தரவிட்டதையடுத்து, இதுதொடர்பான உத்தரவு அன்று இரவு 8.30 மணியளவில் அரசிதழில் வெளியிடப்பட்டது.

* ``டி.டி.வி.தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் உத்தரவு பிறப்பித்திருப்பது சட்டவிரோதமான செயல்" என்று முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்தார்.

நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சுந்தர்

19-09-2017: 

* சபாநாயகர் உத்தரவிட்டதையடுத்து, அதை ரத்து செய்ய வேண்டும் என வெற்றிவேல், செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். 

20-09-2017: 

* தகுதிநீக்கம் செய்த உத்தரவை எதிர்த்த மனுமீது விசாரணையைத் தொடங்கினார், நீதிபதி துரைசாமி. மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தொகுதிகளில் தேர்தல் அறிவிப்பை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டது. 

04-10-2017: 

* இந்த நிலையில், 18 பேர் வழக்கை அக்டோபர் மாதம் முதல், நீதிபதி கே.ரவிசந்திரபாபு விசாரிக்கத் தொடங்கினார்.

* 18 எம்.எல்.ஏ-க்கள் சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியும், சபாநாயகர் தனபாலுக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரமும் வாதிட்டனர்.

02-11-2017: 

* வழக்கின் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கை, நீதிபதி கே.ரவிசந்திரபாபு மற்ற தலைமை நீதிபதி அமர்வுக்குப் பரிந்துரை செய்தார்.

06-11-2017: 

* தகுதிநீக்க வழக்கை விசாரிக்கக் கோரி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.

* ``நவம்பர் 16-ம் தேதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும், முதல் அமர்வே இந்த வழக்கை விசாரிக்கும்" என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

16-11-2017:

* தலைமை நீதிபதி தலைமையில், முதல் அமர்வில் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கப்பட்டது.

19-12-2017:

* கொறடா ராஜேந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி வாதிட்டார்.

தினகரன் ஆதரவாளர்கள்

09-01-2018:

* முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் வைத்தியநாதன், ``கட்சித் தாவல் தடைச் சட்டத்தைப் பொறுத்தவரை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.

18-01-2018:

* இந்த வழக்கு தொடர்பாக அனைத்துத் தரப்பு இறுதிவாதங்களும் நிறைவு செய்யப்பட்டு, எழுத்துபூர்வமான வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

23-01-2018:

* இந்த வழக்கு தொடர்பாக அனைத்துத் தரப்பினரும் எழுத்துபூர்வமான இறுதி வாதங்களைத் தாக்கல் செய்தனர். வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு உத்தரவு.

14-06-2018:

* 18 பேர் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு கூறினர். ``தகுதி நீக்கம் செய்து பிறப்பித்த சபாநாயகர் உத்தரவு செல்லும்" என்று நீதிபதி இந்திரா பானர்ஜியும், ``சபாநாயகர் உத்தரவு செல்லாது" என்று நீதிபதி எம்.சுந்தரும் கூறினர்.

* இந்த வழக்கின் தீர்ப்பு குறிப்பு பலரும் தங்களின் கருத்துகளைத் தெரிவித்தனர்.

16-06-2018:

* தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரில் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன், ``தான் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறப்போகிறேன்" என அறிவித்தார்.

18-06-2018:

* இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்ததால், வழக்கின் முடிவை எட்ட மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி விமலா விசாரிப்பார் என நீதிபதி குலுவாடி ரமேஷ் உத்தரவிட்டார்.

24-06-2018:

* உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை வேறு மாநிலத்துக்கோ அல்லது உச்ச நீதிமன்றத்துக்கோ மாற்ற வேண்டும் எனக் கோரி தங்க தமிழ்ச்செல்வன் தவிர மற்ற 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

26-06-2018:

* இதையடுத்து, தன் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் எனக் கோரி முதல்வர் எடப்பாடியும் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

தினகரன், எடப்பாடி பழனிசாமி

28-06-2018:

* இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், ``சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கை விசாரிப்பதற்காக மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி எஸ்.விமலாவுக்குப் பதிலாக நீதிபதி எம்.சத்தியநாராயணன் நியமனம் செய்யப்படுகிறார். அவர், வழக்கை விரைவாக விசாரித்து தீர்ப்பளிப்பார்" என உத்தரவிட்டது.

04-07-2018:

* 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு மூன்றாவது நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. ``இந்த வழக்கு குறித்த விசாரணை, ஜூலை 23-ம் தேதி முதல் 27-ம் தேதிவரை தொடர்ந்து 5 நாள்களுக்கு நடக்கும்" என்று தெரிவிக்கப்பட்டது.

23-07-2018:  

* 18 எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டன. இவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதாடினார். ``எம்.எல்.ஏ-க்கள் மீது சபாநாயகர் உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுத்துள்ளார்" என 18 எம்.எல்.ஏ-க்கள் சார்பில் வாதம் வைக்கப்பட்டது. 

24-07-2018:

* 18 எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமனும், மோகன் பராசரனும் வாதாடினார்கள். இந்த விசாரணையின்போது, ``முதல்வர் பழனிசாமிக்கு எதிராகச் செயல்பட்டாலும் அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டோம்... எதிர்க்கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டதாகக் கூறுவது தவறு" என்றும் வாதிட்டனர்.

25-07-2018:

* சபாநாயகர் தனபால் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதாடினார். அவர், ``முதல்வரை எதிர்ப்பது என்பது அரசை எதிர்ப்பது போன்றதுதான்... ஆளுநரைச் சந்தித்தது முதலமைச்சர் பழனிசாமி ஆட்சியைக் கலைக்கும் முயற்சிதான்" என்று வாதிட்டார். முதலமைச்சர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் வாதங்களை வைத்தார். இதையடுத்து, 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

31-08-2018:

* அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்புத் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

25-10-2018:

* மூன்றாவது நீதிபதி எம்.சத்தியநாராயணன், ``சபாநாயகர் அறிவித்த தகுதி நீக்க முடிவில் தவறு இல்லை; எனவே, 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்" என்று தீர்ப்பளித்தார். இதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுக்கு உடனடியாக ஆபத்து இல்லை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்