வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (25/10/2018)

கடைசி தொடர்பு:15:15 (25/10/2018)

`தீர்ப்புகுறித்து கவலை இல்லை; தேர்தலை சந்திக்கத் தயார்’ - ஸ்டாலின் அதிரடி!

'18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் தொடர்பாக வந்துள்ள தீர்ப்புகுறித்து எங்களுக்குக் கவலையில்லை' என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஸ்டாலின்

அடுத்த வருடம் நாடளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,   “இன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில், தி.மு.க மகளிர் அணியில் இருந்து சிறப்பாகப் பணியாற்றிய நூர் ஜஹான் பேகமுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது, ஒருவேளை நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் இணைந்து வந்தால், அதை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனையும் நடைபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளருடன் இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும், தி.மு.க-வைப் பொறுத்தவரை ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அதுதான் எங்களின் கொள்கை. 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பான தீர்ப்பை இன்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்புகுறித்து தி.மு.க-வுக்கு கவலையில்லை. இதனால் அ.தி.மு.க-வில் உள்ள எந்த அணிக்குச் சாதகம், பாதகம் போன்றவைதான், அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். அதைப் பற்றி எங்களுக்கு அக்கரை இல்லை. ஏற்கெனவே, இரண்டு தொகுதிகளில் தேர்தல் நடைபெறாமல் உள்ளது. அந்தத் தேர்தலை எதிர் நோக்கித்தான் தி.மு.க காத்திருக்கிறது. ஆனால் தற்போது, மொத்தம் 20 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தல்களில் தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழக மக்கள் உள்ளனர். விரைவில் இந்த இடைத்தேர்தலை நடத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.