வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (25/10/2018)

கடைசி தொடர்பு:16:30 (25/10/2018)

``ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மீது, நடவடிக்கை இல்லையே... ஏன்?" - விளக்குகிறார் வைகைச்செல்வன்

சட்டசபையில் தற்போதைய எம்.எல்.ஏ-க்களின் மொத்த எண்ணிக்கை 214. எனவே, மெஜாரிட்டியை நிரூபிக்க அ.தி.மு.க அரசுக்கு 108 எம்.எல்.ஏ-க்கள் தேவை. ஆனால், தற்போது அ.தி.மு.க-வுக்கு 109 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதால், ஆட்சி கவிழும் சூழலும் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

``ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மீது,  நடவடிக்கை இல்லையே... ஏன்?

`18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும்' என்ற அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களத்தில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதில், முக்கியமானது ``அரசுக்கு எதிராக ஆளுநரைச் சந்தித்துக் கடிதம் கொடுத்தது தவறு எனக் கூறித்தான் 18 எம்.எல்.ஏ-க்களையும் சபாநாயகர், தகுதி நீக்கம் செய்துள்ளார். ஆனால், இதே ஆட்சிக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்போது வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மீது சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையே... ஏன்?'' என்ற கேள்வி.

உயர்நீதிமன்றம்

இதுகுறித்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வனிடம் பேசினோம்... ``தேர்ந்தெடுக்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட ஒரு சின்னத்திலிருந்து வெற்றி பெற்றவர்கள், அதன்பிறகு அந்தக் கட்சியையும், கட்சியினுடைய சட்டமன்றக் குழுத் தலைவரையும் பலவீனமாக்குகிற முயற்சியை எவர் செய்தாலும் அது தவறு என்பதை இன்றைய தீர்ப்பு வெளிப்படுத்தியிருக்கிறது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் மூலமாக வழங்கப்பட்ட மிகச் சரியான தீர்ப்பு இது. 

பேரவைத் தலைவரின் அதிகாரம் என்பது மிக உயர்ந்தபட்ச அதிகாரம் என்று இந்திய அரசியல் சாசனம் வலியுறுத்துகிறது. அதன் அடிப்படையில் சட்டப்பேரவைத் தலைவர் செய்தது சரிதான் என்பதை உணர்த்துகிற தீர்ப்பாக இந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது'' என்று தீர்ப்பை வரவேற்றுப் பேசிய வைகைச் செல்வனிடம், "ஆட்சிக்கு எதிராகச் சட்டமன்றத்தில் வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே...?" என்ற நமது சந்தேகத்தையும் கேட்டோம். இதற்குப் பதிலளித்துப் பேசியவர்,

இ.பி.எஸ். - ஓ.பி.எஸ் -  வைகைச்செல்வன்

``ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், இந்த ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வாக்களித்திருந்தாலும்கூட, அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றிபெற்றுத்தான் எடப்பாடியாரின் ஆட்சி தொடர்ந்துகொண்டிருக்கிறது. அடுத்தபடியாக, தாங்கள் செய்தது தவறுதான் என்பதை உணர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இந்த ஆட்சியோடு ஒன்றாக இணைந்தும்விட்டார்கள். `ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்யவேண்டும்' என்ற பிரச்னையும் அப்போது எழவில்லை. மிகக்குறுகிய காலகட்டத்திலேயே ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மீண்டும் இந்தத் தாய்க் கழகத்தோடு தங்களை இணைத்துக்கொண்டதினால், அந்தப் பிரச்னை குறித்து விவாதிக்கவே தேவையில்லை. ஆனால், டி.டி.வி தினகரன் தரப்பினரோ, தாய்க் கழகமான அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து, புதிதாக ஒரு கட்சியை ஆரம்பித்து, அந்தக் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துக்கொண்டு, ஆளுநரையும் சந்தித்து `சட்டமன்றக் குழுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்யவேண்டும்' என்று மனு அளித்தது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் வருகிறது. 

அதாவது, சட்டமன்றக் குழுத் தலைவரைத் தேர்ந்தெடுத்தவர்களே, மறுபடி மற்றொரு குழுவாகச் சேர்ந்துகொண்டு முந்தைய முடிவுக்கு மாறாகச் செயல்பட்டதினால், அது கட்சித் தாவல் தடைச் சட்ட வரம்புக்குள் வருவதாகச் சொல்லி, சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்திருக்கிறார் சட்டப்பேரவைத் தலைவர்'' என்றார் விளக்கமாக.

டி.டி.வி தினகரன்

`18 எம்.எல்.ஏ-க்கள் நீக்கம் செல்லும்' என்ற இன்றைய தீர்ப்பின் தொடர்ச்சியாக, `சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பை நடத்தக் கூடாது' என்ற தடையும் நீக்கப்பட்டிருக்கிறது. தமிழகச் சட்டமன்ற மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 234. இதில், திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களான கருணாநிதி மற்றும் ஏ.கே.போஸ் ஆகியோர் இறந்துவிட்டனர். தற்போது 18 எம்.எல்.ஏ-க்களும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே, சட்டசபையில் தற்போதைய எம்.எல்.ஏ-க்களின் மொத்த எண்ணிக்கை 214. எனவே, மெஜாரிட்டியை நிரூபிக்க அ.தி.மு.க அரசுக்கு 108 எம்.எல்.ஏ-க்கள் தேவை. ஆனால், தற்போது அ.தி.மு.க-வுக்கு 109 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதால், ஆட்சி கவிழும் சூழலும் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில், இன்றைய தீர்ப்பினால் கடும் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கும் டி.டி.வி தினகரன், ``மேல்முறையீடு சம்பந்தமாக எம்.எல்.ஏ-க்களோடு கலந்து ஆலோசிப்போம்'' என்கிறார். ஆனால், அவரது ஆதரவாளரான தங்கத் தமிழ்ச் செல்வன், ``இந்தத் தீர்ப்பை எப்படி எடுத்துக்கொள்வதென்றே தெரியவில்லை. நாங்கள் நியாயம் கேட்டு மக்கள் மன்றம் செல்வோம்'' என்று கூறுகிறார். இதற்கிடையில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த பாராளுமன்றத் துணை சபாநாயகர் தம்பிதுரை, ``ஜெயலலிதா ஏற்படுத்திய இந்த ஆட்சியை, யாரும் கவிழ்க்க நினைக்கக் கூடாது. யாராக இருந்தாலும் பேசித் தீர்க்க வேண்டும்'' என்று எதிர்த் தரப்பினருக்கு சூசகமாக அழைப்பு விடுத்திருக்கிறார். தி.மு.க-வைச் சேர்ந்த ஆ.ராசா, ``இவ்வழக்கில், மேல்முறையீடு செய்யவேண்டும்'' என்று தனது கருத்தைக் கூறியிருக்கிறார். 

18 எம்.எல்.ஏ-க்கள் -  வைகைச்செல்வன்

மேல்முறையீடு குறித்துப் பேசும் டி.டி.வி தினகரன் தரப்பினர், ``ஏற்கெனவே கர்நாடக அரசியலில் கடந்த 2010 ம் ஆண்டு எடியூரப்பா தலைமையிலான ஆட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய 16 எம்.எல்.ஏ-க்கள் இதேபோல் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்தத் தகுதி நீக்கம், உயர்நீதிமன்றத்திலும் உறுதிசெய்யப்பட்டது. ஆனால், மேல்முறையீட்டின் வழியாக இதே வழக்கு உச்சநீதிமன்றம் சென்றபோது, `எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லாது' என்று தீர்ப்பு கிடைத்தது. 

18 எம்.எல்.ஏ வழக்கும் தற்போது வரை கர்நாடக வழக்கு போலவே சென்றுகொண்டிருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களுடன் கலந்து ஆலோசித்து விரைவில் மேல்முறையீடு செய்து வெற்றி பெறுவோம்'' என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
பொறுத்திருந்து பார்ப்போம்...!


டிரெண்டிங் @ விகடன்