வெளியிடப்பட்ட நேரம்: 16:12 (25/10/2018)

கடைசி தொடர்பு:16:12 (25/10/2018)

`இனி நீங்கள் பேன்ட் அணியக் கூடாது!’ - ஸ்டாலினிடம் சீறிய ஜெ.அன்பழகன்

"உங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. நீங்கள் முதலமைச்சராக வர வேண்டும். அதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்" என்றார் ஜெ.அன்பழகன்.

`இனி நீங்கள் பேன்ட் அணியக் கூடாது!’ - ஸ்டாலினிடம் சீறிய ஜெ.அன்பழகன்

தி.மு.க-வின் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடந்தது. `தொகுதி மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் ஏதாவது சரிசெய்யப்படாமல் இருந்தால், தலைமையின் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள். அதைத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடுவதற்கு வசதியாக இருக்கும்' என நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். 

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்த கூட்டத்தில் 64 மாவட்டங்களின் செயலாளர்கள், 80 தொகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், "ஒவ்வொரு தொகுதியிலும் சிறப்பாக வேலை செய்யுங்கள். அடிமட்டத் தொண்டர்கள் வரையில் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுங்கள். மக்களுக்கு ஏதாவது நிறை குறைகள் இருந்தால் அதையும் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். ஏற்கெனவே, அங்கு பதவியில் இருக்கும் எம்.பி-க்களின் செயல்பாடுகள் எப்படி என்பதையும் ஆராயுங்கள். 

ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டம்

பிற அரசியல் கட்சிகள் அந்தத் தொகுதிகளில் என்ன செய்கின்றன என்பதையும் கவனியுங்கள். இதைப் பற்றி தலைமைக்குத் தெரியப்படுத்துங்கள். நல்லபடியாக வேலை செய்கிறவர்களை ஊக்கப்படுத்துங்கள். தொகுதிகளில் சரியாக வேலை செய்யாத நிர்வாகிகளைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குங்கள். மாவட்டச் செயலாளர்களுடன் இணைந்து செயல்படுங்கள். கிளைக் கழகம், ஊராட்சிகளில் பொறுப்பாளர்கள் இல்லாவிட்டால், அதை விரைவில் நிரப்புவோம். இன்றே தேர்தல் பணிகளைக் கவனிக்கத் தொடங்குங்கள்" என உற்சாகப்படுத்தினார். 

ஜெ.அன்பழகன்இந்தக் கூட்டத்தில் இரண்டு வார்த்தைகள் மட்டும் பேசிவிட்டு அமர்ந்துவிட்டார் பொருளாளர் துரைமுருகன். சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனின் பேச்சுதான் அறிவாலயத்தில் ஹாட்-டாபிக்காக வலம் வருகிறது. கூட்டத்தில் அவர் பேசும்போது, "நீங்கள் தலைவராகிவிட்டீர்கள். எனவே, இனி வரும் நாள்களில் பேன்ட் அணியக் கூடாது" என ஸ்டாலினைப் பார்த்துக் கூறினார். இதற்குப் பதில் கொடுத்த மாவட்டச் செயலாளர் ஒருவர், "தமிழ்நாடு முழுக்க சட்டமன்றத் தேர்தல் சுற்றுப்பயணம் வந்தபோது, விதம்விதமான ஆடைகளில் வலம் வந்தார் தளபதி. அவருக்கு அதுதான் அழகாக இருந்தது. அதை அனைவருமே ரசித்தார்கள். அவர் பின்னால் இளைஞர்களும் வந்தார்கள். பேன்ட், சட்டை போட்டால்தான் இளைஞர்கள் ரசிப்பார்கள். அவர்களுடைய ஓட்டுகள்தான் இப்போது நமக்குத்தேவை. வேட்டி கட்டிக்கொண்டு வர வேண்டும் என்பது சரியான கருத்து அல்ல" எனக் கூற, கூட்டத்தில் கரவொலி எழுந்தது. 

தொடர்ந்து பேசிய ஜெ.அன்பழகன், "நாடாளுமன்றத் தொகுதிகளுக்குப் பொறுப்பாளர்களை நியமித்திருக்க வேண்டியதில்லை. அவர்கள் என்ன செய்துவிடப்போகிறார்கள். நாங்கள் (மாவட்டச் செயலாளர்கள்) ஏற்கெனவே தொகுதிகளில் வேலை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம். வேலை சரியாக நடக்கிறதா என ஆட்களை வைத்துக் கண்காணியுங்கள். அதை எங்களுக்குத் தெரியாமலேயே நடத்துங்கள். இதை நான் அறிவுரையாகச் சொல்லவில்லை. உங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. நீங்கள் முதலமைச்சராக வர வேண்டும். அதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்" எனக் கூற, இதற்கு ஸ்டாலின் எந்தப் பதிலையும் சொல்லவில்லை.