வெளியிடப்பட்ட நேரம்: 16:19 (26/10/2018)

கடைசி தொடர்பு:16:19 (26/10/2018)

`12 தொகுதிகளில் தி.மு.க-வுக்கு டெபாசிட் போகும்!’ - அமைச்சர்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி

தஞ்சை, பூந்தமல்லி, திருப்போரூர், பெரம்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உட்பட 8 தொகுதிகள்தான் நமக்குக் கொஞ்சம் சிரமமாக இருக்கும் என்றார் எடப்பாடி பழனிசாமி

`12 தொகுதிகளில் தி.மு.க-வுக்கு டெபாசிட் போகும்!’ - அமைச்சர்களிடம் விவரித்த எடப்பாடி பழனிசாமி

குதிநீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறார் டி.டி.வி.தினகரன். `18 தொகுதிகளுக்குத் தேர்தல் வந்தாலும் எட்டு தொகுதிகள்தான் நமக்கு சிரமமாக இருக்கும்' என அமைச்சர்களிடம் விவாதித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

மதுரையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் 18 முன்னாள் எம்.எல்.ஏ-க்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார் டி.டி.வி.தினகரன். கூட்டத்தின் முடிவில், `தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 30 முதல் 90 நாள்களுக்குள் முறையிடுவது' என முடிவு செய்யப்பட்டது. மேலும், தீர்ப்பால் பாதிக்கப்பட்ட 18 பேரும் சிறையில் சசிகலாவைச் சந்திப்பது எனவும் 22 தொகுதிகளிலும் உண்ணாவிரதம் இருப்பது எனவும் முடிவாகியுள்ளது. தீர்ப்பை எதிர்த்து, தினகரன் தரப்பினர் மேல்முறையீட்டுக்குச் செல்ல வாய்ப்பிருப்பதை அறிந்த ஆளும்கட்சியும், சபாநாயகர் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளது. `மேல்முறையீட்டுக்குச் சென்றாலும் உடனடியாகத் தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பில்லை. 18 தொகுதிகளில் தேர்தல் நடத்துவது எனத் தீர்மானித்தாலும் நாடாளுமன்றத் தேர்தலோடு நடத்தப்படவே வாய்ப்பு அதிகம். எனவே, தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி அரசுக்கான வாய்ப்பு நீட்டிக்கப்பட்டிருக்கிறது' எனக் கருத்து தெரிவித்துள்ளனர் அரசியல் விமர்சகர்கள். 

அதேநேரம், 'இந்தத் தீர்ப்பு ஆளும்கட்சி வட்டாரத்துக்கும் சேர்ந்தே அபாய மணியை ஒலிக்கவிட்டுள்ளது’ என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர். அவர் நம்மிடம் பேசும்போது, ``நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வந்துவிடும். இந்த இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு நாளையும் மிகக் கவனமாகவே கடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்றவர், ``அ.தி.மு.க அரசுக்கு ஆதரவாக 116 எம்.எல்.ஏ-க்களும் தி.மு.க கூட்டணிக்கு 97 எம்.எல்.ஏ-க்களும் உள்ளனர். இவர்களைத் தவிர, அறந்தாங்கி, விருத்தாசலம், கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளின் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேரும் தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர். கருணாஸ், அன்சாரி நிலைப்பாடுகளும் ஆளும்கட்சிக்கு சாதகமாக இல்லை. தனியரசு மட்டும், எடப்பாடி பழனிசாமி பக்கம் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த ஆறு பேரைக் கணக்கிட்டால், 110 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். 

தலைமைச் செயலகம்

உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால், ஒரு சிலர் அணி மாறினாலே இந்த ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும். இன்னும் ஆறு மாதங்களுக்குள் 20 தொகுதிகளுக்குத் தேர்தல் வந்தாலும் வெற்றி பெறுவதற்காகக் கடுமையாகப் போராட வேண்டிய சூழல் உருவாகும். எனவே, தற்போதுள்ள சூழ்நிலையை அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பயன்படுத்திக்கொள்ளவே விரும்புகின்றனர். 110 பேரும் அமைச்சர்களாகத்தான் தங்களை நினைத்துக்கொள்கின்றனர். இவர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய சூழலை, இந்தத் தீர்ப்பு வழங்கிவிட்டது. இனி வரும் நாள்களில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் தேவைகளை நிறைவேற்றுவதே சவாலான பணியாக இருக்கும். இதற்கிடையில், நம்பிக்கையில்லா தீர்மானத்தைத் தி.மு.க கொண்டு வந்துவிட்டால், ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு டிமாண்ட் அதிகமாகிவிடும். அனைத்து சூழல்களையும் கண்காணித்தபடியே ஆட்சியை நகர்த்திக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி" என்றார் விரிவாக. 

ஆனால், இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், ``கருணாநிதி, ஜெயலலிதாபோல ஆவதற்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தினகரனை அவர் எந்தக் காலத்திலும் கட்சிக்குள் எப்போதும் சேர்க்கப் போவதில்லை. இந்தத் தீர்ப்பால், மக்கள் மனதில் தினகரன் தரப்பினர் மீது ஓர் அனுதாபம் ஏற்பட்டுள்ளதையும் ஆளும்கட்சி உணர்ந்திருக்கிறது. இந்தத் தொகுதிகளில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும், ஆளும்கட்சிக்கு எந்தவிதச் சிக்கலும் இருக்கப் போவதில்லை.

இதுகுறித்து எங்களிடம் பேசிய முதல்வர், `18 தொகுதிகளிலும் போட்டியிடுவதில் நமக்கு எந்தச் சிரமமும் இல்லை. தேர்தல் வந்தால் 12 தொகுதிகளில் ஆர்.கே.நகர் போல தி.மு.க-வுக்கு டெபாசிட் பறிபோகும். இந்தத் தொகுதிகளில் எப்படி வெற்றி பெறுவது என்பது எனக்குத் தெரியும். ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றுவிட்டதால், இந்த 18 தொகுதிகளிலும் அவருக்கு செல்வாக்கு இருக்கும் என நினைக்க வேண்டியதில்லை. தினகரன் நிறுத்தப்போகும் வேட்பாளர்களுக்கு வெற்றி கிடைக்கப்போவதில்லை. தஞ்சை, பூந்தமல்லி, திருப்போரூர், பெரம்பூர், பாப்பிரெட்டிப்பட்டி உட்பட 8 தொகுதிகள்தான் நமக்குக் கொஞ்சம் சிரமமாக இருக்கும். மற்ற தொகுதிகளில் நாம் எளிதாக வெற்றி பெறுவோம். தினகரனுக்கும் சசிகலாவுக்கும் இனி அரசியல் எதிர்காலம் கிடையாது' என்றார். அவரது கருத்தை அமைச்சர்கள் சிலரும் ஏற்றுக்கொண்டனர்" என்றார் விரிவாக.