``அலோக் வர்மா மீதான நடவடிக்கைக்குக் காரணம் இதுதான்!” - விளக்கும் முதல்வர் நாராயணசாமி | Puducherry Chief Minister Narayanasamy has made a statement on the action of CBI Director Alok Verma

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (27/10/2018)

கடைசி தொடர்பு:14:50 (27/10/2018)

``அலோக் வர்மா மீதான நடவடிக்கைக்குக் காரணம் இதுதான்!” - விளக்கும் முதல்வர் நாராயணசாமி

சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான நடவடிக்கை குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்திருக்கிறார்.

நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ``மத்திய நரேந்திர மோடி அரசு குற்றவாளிகளுக்கும், ஊழல் செய்தவர்களுக்கும் ஆதரவாக இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் நேற்றைய தினம் நாங்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நம் புதுச்சேரியில் காவல்துறை தலைமை அதிகாரியாக இருந்திருக்கிறார் என்பதால் அவரது செயல்பாடு புதுச்சேரி மக்களுக்கு நன்று தெரியும். அவருடன் இணை இயக்குநராகப் பணியாற்றிய ராகேஷ் அஸ்தானா ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் மூலம் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நேரத்தில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கன முஸ்லிம் இன மக்கள் படுகொலை செய்யப்பட்ட 2002 கோத்ரா ரயில் எரிப்பு வழக்கை விசாரணை செய்து வந்தவர்தான் இந்த ராகேஷ் அஸ்தானா. ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டு இவர் மீது இருக்கிறது. சிபிஐயின் இணை இயக்குநராக அவரை நியமிக்கக் கூடாது என்று அலோக் வர்மா கூறியும் அவர் நியமிக்கப்பட்டார்.

சிபிஐ

ராகேஷ் அஸ்தானா மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்கும்போதுதான் அலோக் அவர்கள் பதவி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இது ஜனநாயக விரோதச் செயல். மத்திய நரேந்திர மோடி அரசு குற்றவாளிகளுக்கும், ஊழல் செய்தவர்களுக்கும் ஆதரவாக இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக எங்களது ஆர்ப்பாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

புதுச்சேரியைப் பொறுத்தவரை ஆளுநர் கிரண் பேடி தன்னிச்சையாக அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் நிர்வாகம் செய்ய உரிமை இருக்கிறது. இறுதி முடிவு எடுக்கும் உரிமை அமைச்சரவைக்குத்தான் இருக்கிறது. அதனால் ஆளுநர் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது என்று விதிகளை சுட்டிக்காட்டி பலமுறை ஆளுநருக்குக் கடிதம் எழுதிவிட்டேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மத்திய பாஜக அரசின் கட்டளைப்படி அதிகாரமில்லாத அவர் தனக்கு அதிகாரம் இருப்பதாக கோப்புகளில் குறிப்பிட்டு அதைத் திருப்பி அனுப்புகிறார்.

கிரண் பேடி

ஒரு சர்வாதிகாரி போல அவர் செயல்படுகிறார். அரசுக்குத் தொடர்ந்து இடையூறு செய்து வரும் துணைநிலை ஆளுநர் தொடர்பாக  பலமுறை உள்துறை அமைச்சகத்துக்கும் பிரதமருக்கும் புகார் அளித்தாலும் அரசியல் காரணங்களுக்காக பிரதமர் நரேந்திரமோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசு புதுச்சேரிக்கு 60% மானியம் வழங்குகிறது என உண்மைக்குப் புறம்பான தகவலை கிரண் பேடி தெரிவித்துள்ளார். அதனை அவரால் நிரூபிக்க முடியுமா ?” என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க