மேலும் 3 எம்.எல்.ஏக்களுக்குச் சிக்கல்! - சபாநாயகருக்குப் பரிந்துரை செய்த அரசு கொறடா | The government Whip has recommended the Speaker to explain to three more MLAs

வெளியிடப்பட்ட நேரம்: 15:35 (27/10/2018)

கடைசி தொடர்பு:15:35 (27/10/2018)

மேலும் 3 எம்.எல்.ஏக்களுக்குச் சிக்கல்! - சபாநாயகருக்குப் பரிந்துரை செய்த அரசு கொறடா

டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துவரும் மேலும் 3 எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்க வேண்டும் என அரசு கொறடா, சபாநாயகருக்குப் பரிந்துரை செய்துள்ளார். 

அரசு கொறடா

அ.தி.மு.கவில் இருந்த 18 எம்.எல்.ஏக்கள் கடந்த வருடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பதவிநீக்கம் செய்யக்கோரி அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்தனர். இந்த 18 பேரும் அரசு கொறடாவின் உத்தரவை மீறிச் செயல்பட்டதால் இவர்களைத் தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர் தனபால். தகுதிநீக்கத்தை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன் முடிவில் தீர்ப்பு வழங்கிய இரு நீதிபதிகளும் இரு வேறு கருத்துகளைக் கூறியதால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. நேற்று முன் தினம் 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும் என மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு வழங்கினார். இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தினகரன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இந்த 18 பேர் இல்லாமல் பிரபு (கள்ளக்குறிச்சி), ரத்தினசபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்) ஆகிய 3 எம்.எல்.ஏக்களும் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர். இந்த மூவருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த மூவரும் விளக்கம் கேட்க வேண்டும் என அரசு கொறடா தாமரை ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலுக்குப் பரிந்துரை செய்துள்ளார். 

கொறடாவின் பரிந்துரையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால் இந்த மூவருக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்புவார். அவர்கள் ஒருவாரத்துக்குள் விளக்கம் அளிக்காத பட்சத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேரின் நிலையே இவர்களுக்கு வரும் என அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றன. மேலும் சமீபகாலமாக எம்.எல்.ஏ கருணாஸ் அரசுக்கு எதிராகக் கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில் அவரிடமும் விளக்கம் கேட்கப்படலாம் என்ற கருத்தும் உலாவந்து கொண்டிருக்கிறது.