Published:Updated:

‘ அ.தி.மு.க ஆட்சியைக் கலைக்க வாய்ப்பே இல்லை’ - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்டவட்டம்

‘ அ.தி.மு.க ஆட்சியைக் கலைக்க வாய்ப்பே இல்லை’ - அமைச்சர்  ஓ.எஸ்.மணியன் திட்டவட்டம்
‘ அ.தி.மு.க ஆட்சியைக் கலைக்க வாய்ப்பே இல்லை’ - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்டவட்டம்

டிடிவி தினகரனுக்கு ஆதரவளித்த கருணாஸ் உள்ளிட்ட மூன்று எம்.எல்.ஏ-க்களின் விளக்கத்தை பொறுத்து தான் தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் கூறியுள்ளார்.

ஓக்கி புயலில் காணாமல் போன நாகை மீனவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டாவது கட்டமாக நிவாரண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.இதில் நாகை மாவட்டம் நம்பியார்நகர், திருமுல்லைவாசல் பூம்புகாரைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன்,"இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றிருப்பது குறித்து கருத்து கூறுவது என்பது சுதந்திரம் அல்ல. அடுத்த நாட்டு இறையாண்மையில் நாம் தலையிடுவதும் கருத்துச் சொல்வதும் உகந்தது அல்ல" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றிருக்கும் இந்நேரத்தில் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் நல்லது நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும்," டிடிவி தினகரனுக்கு ஆதரவளித்த கருணாஸ் உள்ளிட்ட மூன்று எம்எல்ஏக்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு எந்த மாதிரி பதில் அளிக்கிறார்களோ அதற்கேற்றார் போல் தமிழக முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்." என்று அமைச்சர் கூறினார். 

தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகரிடம் அ.தி.மு.க எம்எல்ஏக்கள் பெரும்பான்மையை தெரிவித்துள்ளதால் தற்போது ஆட்சியைக் கலைக்க வாய்ப்பில்லை என அமைச்சர் ஓ எஸ் மணியன் திட்டவட்டமாக கூறினார். பின்னர் உள்ளாட்சி தேர்தல் தடைப்பட்டதற்கு தி.மு.க.தான் காரணம் எனவும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குற்றம் சாட்டினார்.