``உண்மை கண்டறியும் சோதனைக்குத் தயாரா?” நாராயணசாமிக்கு சவால் விடும் கிரண் பேடி | Kiran Bedi challenges to CM Narayanasamy

வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (29/10/2018)

கடைசி தொடர்பு:09:40 (29/10/2018)

``உண்மை கண்டறியும் சோதனைக்குத் தயாரா?” நாராயணசாமிக்கு சவால் விடும் கிரண் பேடி

``உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா?” என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு கவர்னர் கிரண் பேடி பகிரங்கமாக சவால் விட்டிருக்கிறார்.

கிரண் பேடி

``பொதுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை நிறுவனங்களுக்குச் சம்பளம் வழங்குவதற்கான கோப்பை கவர்னர் கிரண் பேடிக்கு அனுப்பி வைத்தோம். ஆனால், அதற்கு அவர் அனுமதிக்க மறுத்துவிட்டார். இதன்மூலம் சம்மந்தப்பட்ட தொழிலாளர்களை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளியிருப்பதோடு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசையும் செயல்பட விடாமல் தடுக்கிறார்” என்று முதல்வர் நாராயணசாமி முன்னதாக குற்றம் சுமத்தியிருந்தார். முதல்வரின் அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு வாட்ஸ்அப் மூலம் பதிலளித்த கவர்னர் கிரண் பேடி, ``முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து முழுமையான தகவல்களைத் தெரிவிக்காமல் தவறான தகவல்களையே மக்களிடம் கூறி வருகிறார். இந்த விவகாரத்தில் உள்ள உண்மைகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது எனது கடமையென்று கருதுகிறேன்.

நாராயணசாமி

 

ஏனென்றால் இது அவர்களுடைய பணம். முழுமையான தகவல்களைத் தெரிவிக்காமல் தனக்குச் சாதகமான ஒரு சில விஷயங்களை மட்டும் அவர்களிடம் தெரிவித்திருக்கிறார். பாப்ஸ்கோ ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதற்காக அவர்கள் அனுப்பிய அனுமதி கோப்புகளுக்கு கவர்னர் அலுவலகம் ஏன் அனுமதி தரவில்லை என்பதையும் தெரிவித்திருக்க வேண்டும். 7.5 கோடி ரூபாய்க்கு பட்ஜெட்டில் அனுமதி பெறப்படவில்லை. புதுச்சேரி சட்டப்பேரவையில் அனுமதி பெறப்படாத ஒரு தொகைக்கு கவர்னர் மாளிகை எப்படி அனுமதி கொடுக்க முடியும்? மேலும், இலவச அரிசி திட்டத்தின் நிதி முறையாக மடைமாற்றம் செய்யப்படவில்லை. குடிமைப் பொருள் வழங்கல் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் தனியாக பாப்ஸ்கோவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? 

பாப்ஸ்கோ நிறுவனம் வெளி மார்க்கெட்டில் கடன் வாங்குவதற்கு நிர்வாகக் குழு கூட்டத்தில் முன்னதாகத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. எதற்காக இவ்வளவு தொகை கடன் வாங்குகிறோம் என்பது தொடர்பான விவரங்கள் முறையாகத் தெரிவிக்கப்படவில்லை. புதுச்சேரி நிர்வாகத்தின் உண்மையான பிரச்னை, முதல்வர் நாராயணசாமி முழுமையான தகவல்களை தன்னுடைய மக்களுக்குத் தெரிவிக்காமல் குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் தெரிவிப்பதுதான். அதனால் பொய் மற்றும் முறைகேடுகளை கவர்னர் மாளிகை வெளிப்படுத்துகிறது. இந்த விஷயத்தில் யார் பொய் சொல்கிறார்கள் என்பதைக் கண்டறிய சோதனைக்கு உட்பட வேண்டும்.  உண்மை கண்டறியும் சோதனைக்கு நாம் இருவரும் (ஆளுநர்-முதல்வர்) தயாராக இருக்க வேண்டும். அதனுடைய முடிவுகளை மக்களிடம் வைக்க வேண்டும். அதற்கு நான் தயாராக இருக்கிறேன்.முதல்வர் தயாராக இருக்கிறாரா ?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். கிரண் பேடியின் இந்தப் பகிரங்க அழைப்பு புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க