”அமைச்சர்களின் ’டீ’ செலவு 3 கோடி ரூபாய்!” - பட்டியல் போடும் புதுச்சேரி பா.ஜ.க எம்.எல்.ஏ | ”Ministers' Tea cost Rs 3 crore” Puducherry BJP MLA

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (29/10/2018)

கடைசி தொடர்பு:19:45 (29/10/2018)

”அமைச்சர்களின் ’டீ’ செலவு 3 கோடி ரூபாய்!” - பட்டியல் போடும் புதுச்சேரி பா.ஜ.க எம்.எல்.ஏ

”புதுச்சேரி அமைச்சர்களின் ’டீ’ செலவு 3 கோடி ரூபாய்” என்று பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ சாமிநாதன் கூறியிருக்கிறார்.

புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவரும் நியமன எம்.எல்.ஏ-க்களில் ஒருவருமான சாமிநாதன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “பதவி ஏற்றது முதல் தற்போதுவரை நிதி நெருக்கடி என்று கூறிவருகிறது முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை. இரண்டரை ஆண்டுகளாக இதையே கூறி, ஏழை மக்களுக்கு வழங்கவேண்டிய இலவச அரிசியைக்கூட இவர்கள் வழங்கவில்லை. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 20 நாள்கள்தான் சட்டப்பேரவை நடந்திருக்கிறது. சட்டசபைக்கு எப்போது சென்றாலும் அமைச்சர்களின் அலுவலகங்கள் காலியாகவேதான் காட்சியளிக்கின்றன. நிலைமை இப்படி இருக்க, கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் டீ, காபி, சிற்றுண்டி மற்றும் டெலிபோன் ஆகியவற்றுக்காக 3 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் அமைச்சர்களின் சிக்கனமா? இதுவும் உண்மையான செலவுக்கான கணக்குகள்தானா என்று சந்தேகம் எழுகிறது. இதில் சபாநாயகர் சிக்கனம் என்ற பெயரில் சைக்கிளில்வேறு வருகிறார்.

பாஜக

எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் தலா 48,000 ரூபாய் சம்பளம் வழங்குகிறது. அதில் 20,000 ரூபாய் டீசலுக்காகக் கொடுக்கிறது. ஆனால் எம்.எல்.ஏ-க்களும், அமைச்சர்களும் டீசலுக்காகத் தனியாக பில் கொடுக்கின்றனர்.  தொழில் துறை அமைச்சர் பிப்டிக்கி-ல் (PIPDIC - Pondicherry Industrial Promotion Development and Investment Corporation)  பென்சில், பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருள்கள் வாங்கியதாக 2 லட்சத்து 50 ஆயிரம் செலவு செய்திருக்கிறார். வளமாக இருந்த புதுச்சேரியை வறுமையான புதுச்சேரியாக மாற்றிவிட்டனர். மாதச் சம்பளமே இல்லாமல் போராட்டம் நடத்திவரும் 20000 ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கத் தேவையான தொகை 2 கோடி ரூபாய்தான். ஆனால், அமைச்சர்கள் டீ செலவுக்கான 3 கோடி ரூபாயை விரையமாக்கியிருக்கின்றனர். நிதி நெருக்கடியைக் காரணமாகச் சொல்லி, பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டுவர அமைச்சரவையில் முடிவு எடுத்திருப்பதாகத் தெரிகிறது. லாட்டரியால் ஏழை எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அந்த முடிவை பா.ஜ.க சார்பில் கடுமையாக எதிர்க்கிறோம். முதல்வர், அமைச்சர்களின் செலவினங்கள் தொடர்பான ஆதாரங்களோடு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சகத்தில் விரைவில் புகார் அளிக்க இருக்கிறோம்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க