Published:Updated:

`ஜமால் படுகொலை எதிரொலி! - சவுதியை ஆட்டம் காண வைக்கும் ஜெர்மன் அதிபர் #Jamalkhashoggi

`ஜமால் படுகொலை எதிரொலி! - சவுதியை ஆட்டம் காண வைக்கும் ஜெர்மன் அதிபர் #Jamalkhashoggi
`ஜமால் படுகொலை எதிரொலி! - சவுதியை ஆட்டம் காண வைக்கும் ஜெர்மன் அதிபர் #Jamalkhashoggi

`ஜமால் படுகொலை எதிரொலி! - சவுதியை ஆட்டம் காண வைக்கும் ஜெர்மன் அதிபர் #Jamalkhashoggi

பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஜமால் கஷோகிஜி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சவுதிக்கு எல்லாத் திசைகளில் இருந்தும் நெருக்கடி அதிகரித்துவிட்டது. 


 

சவுதி பத்திரிகையாளரான ஜமால் சவுதி அரசக் குடும்பத்துக்குள் இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிரானவர்களுடன் நெருக்கமாக இருந்தார். இதனால், இளவரசர் தரப்பில் இருந்து அவருக்கு மிரட்டல் வந்தது. சவுதி அரசக் குடும்பத்தினருக்குள் நடக்கும் அரசியலில் இவர் பலிகடா ஆகிவிட்டார். இதையடுத்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசு குறித்து தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்தார். கடந்த அக்டோபர் 2-ம் தேதி தன் துருக்கி காதலியை இரண்டாம் திருமணம் செய்வதற்கான ஆவணங்களைப் பெறுவதற்காக துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்துக்குச் சென்றார். அங்கேயே படுகொலை செய்யப்பட்டார். 

சற்றும் மனம் தளராத துருக்கி.. 

ஜமால் கொல்லப்பட்டதன் பின்னணியைத் துருக்கி துப்பு துலக்கியது. விரல்கள் துண்டிக்கப்பட்டு, தலை வெட்டப்பட்டு கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு ஜமால் கொல்லப்பட்டிருப்பதாக திடுக் தகவல்களை வெளியிட்டது. சவுதியைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் சிலரால் ஜமால் கொல்லப்பட்டதாகவும் அவர்களின் பட்டியலையும் துருக்கி வெளியிட்டது. 

`துருக்கி தூதரகத்தினுள் வந்த ஜமால் வெளியே சென்றுவிட்டார். அவர் எங்கே போனார் என்று தெரியவில்லை’ என்று சவுதி தூதரக அதிகாரிகள் கூறிவந்தனர். ஜமாலின் உடையை ஒருவருக்கு அணிவித்து, அந்த நபர் தூதரக அலுவலகத்தை விட்டு வெளியே வருவது போன்று சவுதி அதிகாரிகள் செட் அப் செய்திருந்த விவகாரத்தையும் துருக்கி கண்டுபிடித்துவிட்டது. இதனிடையே அமெரிக்காவும் சவுதிக்குப் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது. எனவே, ஒருகட்டத்தில் சவுதி ஜமால் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்டது.

`சம்பவம் நடந்த அன்று  துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தினுள் சவுதி தூதரக அதிகாரிகளுக்கும் ஜமாலுக்கும் இடையே சின்ன வாக்குவாதம் நடந்தது. அதில் ஜமால் கொல்லப்பட்டுவிட்டார்’ என்று சவுதி மிக சாதாரணமாக ஒரு கதை சொன்னது. `சவுதி சொல்கிற கதையை நம்ப முடியாது. இது துருக்கி மண்ணில் நடந்த படுகொலை. குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்’ எனத் துருக்கி பாராளுமன்றத்தில் அந்நாட்டுப் பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகன் சவால்விட்டார்.


 

ஐ.நா தலையீடு.. 

கொலை நடந்து ஏறக்குறைய ஒரு மாதம் ஆகிவிட்டது. ஜமால் கொலையில் சம்பந்தப்பட்ட உயர்மட்ட அதிகாரிகள் உட்பட 15 பேரை பணியில் இருந்து சவுதி நீக்கியது. விசாரணை நடந்து வருவதாகக் கூறியது. ஆனால், இன்றுவரை ஜமாலின் உடல் எங்கே என்னும் தகவலை கூறவேயில்லை. துருக்கியும் ஜமாலின் உடலைக் கண்டுபிடிக்கும் முயற்சியைக் கைவிடவில்லை. இதனிடையே ஜமாலின் விரல்களைச் சவுதி அதிகாரிகள் இளவரசருக்குப் பரிசளித்ததாகவும் ஒரு செய்தி பரவியது. இதனால் ஜமாலின் உடல் சவுதிக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் என்னும் கோணத்தில் துருக்கி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஜமாலின் உடல் குறித்து வாய் திறக்காமல் இருக்கும் சவுதிக்கு ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துவிட்டன. இது போதாதென்று ஐ.நா- வின் மனித உரிமைகள் தலைவர் மைக்கேல் பசேல்ட் ஜமால் கொலையை சர்வதேச நிபுணர்களைக் கொண்டு உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். 


 

பொதுவாகச் சவுதியில் தவறு இழைத்த பிரஜைகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்பது உலகம் அறிந்த உண்மை. ஆனால் ஜமால் கொலையில் சம்பந்தப்பட்ட உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்ட அந்த 15 பேருக்கு சவுதி என்ன தண்டனை கொடுத்தது என்பதே ஜமாலின் பத்திரிகை நண்பர்களின் கேள்வியாக உள்ளது. 


 

ஜெர்மனி வைத்துள்ள செக்..

ஜமால் படுகொலைக்கு ஐரோப்பிய நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் சவுதிக்கு புதிய செக் ஒன்றை வைத்துள்ளார். `ஜமால் கொலை குறித்து சவுதி கொடுத்த விளக்கத்தில் தெளிவில்லை. ஜமால் படுகொலைக்கு நியாயம் கிடைக்கும்வரை ஜெர்மனி சவுதிக்கு ஆயுதம் விற்பனை செய்யாது’ என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்.  

சவுதியைப் பொறுத்தவரை பெரும்பாலான ராணுவ உபகரணங்களை அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் இருந்துதான் வாங்குகிறது. யு.கே ( U.K)  பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சவுதி உடனான ஆயுத ஒப்பந்தங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தங்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர். 


 

ஒருவேளை ஜெர்மனியைப் போன்று யு.கே, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் அறிவித்தால் சவுதி என்னும் வளைகுடா ராஜ்ஜியம் ஆட்டம் கண்டுவிடும். ஆனால், அப்படி நடக்க வாய்ப்பில்லை என்கின்றனர் உலக அரசியல் விமர்சகர்கள். 

அமெரிக்காவின் பங்கு.. 

`அமெரிக்காவின் பிரபல பத்திரிகையில் பணிபுரிந்த ஒருவர் சவுதி அதிகாரிகளால் துருக்கியில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், அமெரிக்காவோ ஓரிரு முறை கண்டனங்கள் தெரிவித்ததோடு கடந்து செல்கிறது. அமெரிக்கா ஒருவேளைச் சவுதிக்கு அழுத்தம் கொடுத்திருந்தால் இந்நேரம் ஜமால் படுகொலையில் பல்வேறு உண்மைகள் வெளிவந்திருக்கும்’ என்று துருக்கி ஊடகம் ஒன்று அமெரிக்காவை விமர்சித்துள்ளது. `சவுதி இளவரசர் சல்மான் இந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்டிருப்பதால்தான் ஜமாலின் உடலை பற்றிக்கூட சவுதி வாய்திறக்காமல் கமுக்கமாக இருக்கிறதோ?’ என்னும் கேள்வியையும் துருக்கி எழுப்பியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு