வெளியிடப்பட்ட நேரம்: 12:03 (01/11/2018)

கடைசி தொடர்பு:12:03 (01/11/2018)

``அப்போ வாங்குனீங்கள்ல?" - `திண்டுக்கல்' சீனிவாசன் vs `நத்தம்' விஸ்வநாதன்

ஒருகட்டத்தில், திண்டுக்கல் சீனிவாசனை ஜெயலலிதா ஒதுக்கிவைத்த நிலையில், அவர் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தார். 

``அப்போ வாங்குனீங்கள்ல?

றைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., தி.மு.க-விலிருந்து பிரிந்துசென்று அ.தி.மு.க. என்ற கட்சியை ஆரம்பித்தார். அந்தக் கட்சி முதன்முதலில் தேர்தலைச் சந்தித்த இடம் திண்டுக்கல். இன்றளவுகூட எம்.ஜி.ஆரின் விசுவாசிகளால் அ.தி.மு.க மிகவும் பலமாக இருக்கிறது. இந்த நிலையில் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து அரசியலில் இருப்பவர் அமைச்சர் `திண்டுக்கல்' சீனிவாசன். இவர், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இவர் மூலமாகத்தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் அடையாளம் காட்டப்பட்டவர் `நத்தம்' விஸ்வநாதன். ஒருகட்டத்தில், திண்டுக்கல் சீனிவாசனை ஜெயலலிதா ஒதுக்கிவைத்த நிலையில், அவர் கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தார். 

நத்தம் விஸ்வநாதன்

அந்தக் காலகட்டத்தில் நத்தம் விஸ்வநாதன் ஜெயலலிதாவின் குட்புக்கில் இருந்தார். அதனால் மாவட்டத்தில் நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர்கள் பெருகினார்கள். இந்நிலையில் நத்தம் விஸ்வநாதன், ஓ.பி.எஸ் உள்ளிட்ட ஐவர் அணி மீது அதிருப்தியடைந்தார் ஜெயலலிதா. அத்துடன் விஸ்வநாதன் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை ரெய்டும் நடைபெற்றது. இதனால் ஜெயலலிதாவின் குட்புக்கிலிருந்து தூக்கியெறியப்பட்டார் விஸ்வநாதன்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மீண்டும் அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார் திண்டுக்கல் சீனிவாசன். இதனால் அவருக்கு எம்.எல்.ஏ சீட் கிடைத்ததுடன், அமைச்சரும் ஆகிவிட்டார். நத்தம் விஸ்வநாதன் தோல்வியடைந்ததால் கட்சியிலிருந்து முற்றிலும் ஓரங்கட்டப்பட்டார். இந்தச் சூழ்நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.-வில் ஏற்பட்ட பிளவால், தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்ஸுடன் (துணை முதல்வர்) கைகோத்தார், விஸ்வநாதன்.

 இதையடுத்து, அரசியலில் தனது செல்வாக்கைக் காட்ட... ஓ.பி.எஸ்ஸை அழைத்துவந்து பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தினார் விஸ்வநாதன். அந்தக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசனை வசைமாரி பொழிந்தார்கள். இந்த நிலையில், அடுத்துவந்த சில மாதங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக இணைய.. பிளவுபட்டுக் கிடந்த அ.தி.மு.க-வும் (சசிகலா, அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் குடும்பத்தினர் மற்றும் அவரது ஆதரவாளர்களைத் தவிர) ஒன்றாக இணைந்தது. அப்போது, ஓ.பி.எஸ் அணியில் இருந்த மாஃபா பாண்டியராஜனும், ஓ.பி.எஸ்ஸுக்கு மட்டுமே அமைச்சர் பதவி கிடைத்தது. விஸ்வநாதனுக்கு அமைப்புச் செயலாளர் பதவி மட்டுமே கிடைத்தது.

திண்டுக்கல் சீனிவாசன்

இந்த நிலையில், ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். அணிகள் இணைந்தபோதும் திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை, நத்தம் விஸ்வநாதன் ஆதரவாளர்கள் தனியாகவும், திண்டுக்கல் சீனிவாசன் அணியினர் தனியாகவும் செயல்பட்டு வருகிறார்கள். 

இதுகுறித்து அந்தப் பகுதி அ.தி.மு.க-வினரிடம் விசாரித்தோம். ``பொதுக்கூட்டங்களுக்குப் பெரும்பாலும் நத்தம் விஸ்வநாதனை அமைச்சர் தரப்பு அழைப்பதில்லை. விளம்பரங்களில் விஸ்வநாதன் படத்தையும் பயன்படுத்துவதில்லை. இதனால் விஸ்வநாதன் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அமைச்சர் சீனிவாசன் மற்றும் மாவட்டச் செயலாளர் மருதராஜ் ஆகிய இருவரும் கட்சிக்காரர்களுக்கான வருவாய் வாய்ப்பைத் தடுக்கிறார்கள். அமைச்சரின் இரண்டு மகன்கள் மற்றும் தம்பி மகன் ஆகியோருக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் பதவி கொடுத்திருக்கிறார்கள். மாவட்டச் செயலாளர் மற்றும் அவரது மகனுக்குக் கூட்டுறவுச் சங்கங்களில் பதவி வாங்கியிருக்கிறார்கள். இதனால் தொண்டர்களுக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பையும் பறித்துள்ளனர். ஒப்பந்த வேலைகளையும் அமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளரின் குடும்ப உறுப்பினர்களே எடுத்துக்கொள்கின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள பழநி வந்த அமைச்சர் சீனிவாசனிடம், `கட்சியால் எங்களுக்கு 1000 ரூபாய் வருமானத்துக்கூட வழியில்லை' எனத் தொண்டர் ஒருவர் கேட்க... அதற்குக் கோபப்பட்ட சீனிவாசன், `அதான் எலெக்‌ஷனப்ப வாங்குனீங்கனு... அப்புறமென்ன?' எனத் திட்டித் தீர்த்திருக்கிறார்.


திண்டுக்கல்லில் வைக்கப்பட்ட பேனர்மேற்படி சம்பவங்களால் அ.தி.மு.க. தொண்டர்களின் பார்வை விஸ்வநாதன் பக்கம் திரும்பியுள்ளது. மாவட்டத்தில் பரவலாக விஸ்வநாதனுக்கு ஆதரவு பெருகிவருகிறது. அதன் வெளிப்பாடாக பழநியில், அ.தி.மு.க. சார்பில் தீபாவளி வாழ்த்து பேனர் ஒன்று வைக்கப்பட்டது. `அ.இ.அ.தி.மு.க. கடைக்கோடி தொண்டர்கள்’ என்ற பெயரில் வைக்கப்பட்டுள்ள அந்த பேனரில், அமைச்சர், மாவட்டச் செயலாளர் படங்கள் இடம்பெறவில்லை. ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்., நத்தம் விஸ்வநாதனின் படங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன. இதன்மூலம் இலைமறைகாயாக இருந்த கோஷ்டிப் பூசல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பழநியில் வைக்கப்பட்ட பேனருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் சீனிவாசன் ஆதரவாளர்களால் திண்டுக்கல்லில் அதே ஸ்டைலில் தீபாவளி வாழ்த்து பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில் விஸ்வநாதன் படம் இடம்பெறவில்லை. இப்படி, இரண்டு தரப்பினரும் மல்லுக்கட்டு நடத்திவரும் நிலையில், நிலக்கோட்டை தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளர்களாக அமைச்சர் சீனிவாசன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் இருவரையும் அறிவித்துள்ளது, அ.தி.மு.க. தலைமை. தேர்தல் வந்தால் தெரியும் இவர்களுடைய நிலைமை" என்றனர், சற்றே பெருமூச்சு விட்டபடி. 

அ.தி.மு.க-வின் குடுமிப்பிடிச் சண்டை எப்போதுதான் முடியப்போகிறதோ?
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க