Election bannerElection banner
Published:Updated:

புத்தகப் பைகளிலும் ரத்தக் கறை; அழிவின் விளிம்பை நோக்கி ஏமன்! - சவுதிக்கு கடிவாளம் போடுமா அமெரிக்கா?

புத்தகப் பைகளிலும் ரத்தக் கறை; அழிவின் விளிம்பை நோக்கி ஏமன்! - சவுதிக்கு கடிவாளம் போடுமா அமெரிக்கா?
புத்தகப் பைகளிலும் ரத்தக் கறை; அழிவின் விளிம்பை நோக்கி ஏமன்! - சவுதிக்கு கடிவாளம் போடுமா அமெரிக்கா?

புத்தகப் பைகளிலும் ரத்தக் கறை; அழிவின் விளிம்பை நோக்கி ஏமன்! - சவுதிக்கு கடிவாளம் போடுமா அமெரிக்கா?

சவுதி - அமெரிக்கா இடையே இரண்டு காரணங்களால் சின்ன விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

 பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி படுகொலை விவகாரத்தில் சவுதி முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக் கூறிவருகிறது. ஜமால் கொலையில் சவுதி அரசின் தலையீடு இருக்கிறது என்று தெரிந்தால் பயங்கர விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் கூறியிருக்கிறார். இது முதல் காரணம். 

இரண்டாவது காரணம் சற்று விரிவாக..   

ஏமன் நாட்டின் சாடா மாகாணத்தில் உள்ள அல் ஃபாலா பள்ளியில் அக்டோபர் மாத தொடக்கத்திலேயே வகுப்புகள் தொடங்கிவிட்டன. ஆனால், வழக்கமான உற்சாகம் அங்கு இல்லை. பள்ளியின் வராண்டாக்களில் மாணவர்களின் சிரிப்பொலிகள் கேட்கவில்லை. பள்ளி வளாகம் முழுவதிலும் ஒருவித அமைதி கவிந்துள்ளது. சில மாணவர்களின் புத்தகப் பையில் ரத்தக் கறை படிந்துள்ளது. சில மாதங்கள் முன் நடந்த ஏவுகணைத் தாக்குதலின் சுவடுகள் அவை. (Source : Aljazeera)


 

ஏமன் என்னும் தென்மேற்கு ஆசிய நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சிப்படைக்கும் இடையே 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அதிபர் மன்சூருக்கு ஆதரவாக சவுதி அரேபியா களமிறங்கியது. ஹவுதி கிளர்ச்சிப்படைக்கு இரான் ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது.  இதனிடையே சவுதி கூட்டுப்படைக்கு அமெரிக்காவும் பக்கபலமாக செயல்பட்டு வருகிறது. சவுதி கூட்டுப்படை குறிவைப்பது கிளர்ச்சியாளர்களுக்குத்தான் என்றாலும் பலியாவது என்னவோ பொதுமக்கள்தான்.  

அன்றும் அப்படிதான்..

சாடா மாகாணம் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதி. அன்று (ஆகஸ்ட் 9)  அல் ஃபாலா பள்ளி வாகனம், வகுப்புகள் முடிந்ததும் மாணவர்களை ஏற்றிக்கொண்டு தயான் மார்க்கெட் அருகில் சென்று கொண்டிருந்தது. வாகனத்தின் ஓட்டுநர் காய்கறி வாங்குவதற்காக வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, மாணவர்களை அமைதிகாக்கும்படி கூறிவிட்டு இறங்கிச் சென்றார். நடக்கப்போகும் விபரீதத்தை அவர் அறிந்திருக்கவில்லை. பள்ளி வாகனத்தினுள் மாணவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். திடீரென ஒரு பயங்கர சத்தம். வாகனம் சிதறியது. அதிலிருந்த மாணவர்களும்தான்! சற்று நேரத்தில் அந்த தயான் மார்கெட் பகுதி முழுவதும் மரண ஓலங்கள் ஒலித்தன. ஆங்காங்கே உடல்கள் சிதறிக்கிடந்தன. சவுதி கூட்டுப்படைகள் ஏவிய அந்த ஏவுகணை 40 பள்ளிக் குழந்தைகள் உட்பட 51 பேரின் உயிரைப் பலிகொண்டது.


 

அல் ஃபாலா பள்ளி மாணவர்கள் இந்தத் துயர சம்பவத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. பள்ளி பொலிவிழந்ததற்கு இந்தக் கோர சம்பவம்தான் காரணம். இந்தத் தாக்குதலுக்கு சர்வதேச அமைப்புகள் கண்டனங்களைப் பதிவு செய்தன. முதலில் `இது ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சட்டப்படியான தாக்குதல்’ என்று விளக்கம் கொடுத்தது சவுதி தலைமையிலான கூட்டணி. பின்னர் ஐ.நா-வின் தலையீடால், ‘இது குறி தவறி நடந்த விபத்து’ என்று விளக்கம் கொடுத்தது.  இந்தச் சம்பவம் சவுதிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. மாணவர்களை பலிகொண்ட அந்த குண்டு, அமெரிக்க நிறுவனம் சப்ளை செய்தது என்னும் தகவல் வெளியாகி அமெரிக்காவுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியது. 

Pic Courtesy - ICRC Yemen
 

சவுதி தலைமையிலான கூட்டுப்படை ஏமனில் கால்பதித்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், `எங்கள் இலக்கை நெருங்கிவிட்டோம். ஹவுதி கிளர்ச்சியாளர்களின் வசமிருக்கும் ஏமன் தலைநகரை மீட்டுவிடுவோம்’ என்று சவுதி நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஆனால், ஐ.நா சபை இதை ஏற்க மறுத்து. `இந்த உள்நாட்டுப் போரை நிறுத்தவில்லை என்றால் அழிவின் விளிம்புக்கு ஏமன் சென்றுவிடும்’ என்று எச்சரித்துள்ளது. 


 

சமாதானத்தைக் கோரும் ஐ.நா.. 

ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டுப்படை நடத்திய வான்வழித்தாக்குதல்களில் இதுவரை 16,000 பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களும் இதில் அடக்கம். பள்ளி, மார்க்கெட், திருமண நிகழ்வு, மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் வான் வழித்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதம் பள்ளி வாகனம் சிதைந்து 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டது பயங்கரத்தின் உச்சம். இவை அனைத்துமே மனித உரிமை மீறல்கள்தான்.


 

ஏமனின் மக்கள் தொகை ஏறக்குறைய 28 மில்லியன். அதில் 14 மில்லியன் பேர் உள்நாட்டுப் போரால் பஞ்சத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மில்லியன் பேர் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சவுதி, அமெரிக்க, இரான். ஏமன் உள்ளிட்ட நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்கிறது ஐ.நா. ஐ.நா-வின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ட்ரம்ப் அரசு வாய்வழி ஒப்புதல் அளித்தாலும் சவுதிக்கு ஆயுதங்கள் உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து சப்ளை செய்து வருகிறது. 

ஈரானுக்கு அமெரிக்கா கெடு..

அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து நேற்று  அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மைக் பாம்பியோ வெளியிட்ட அறிக்கையில்  `ஹவுதி கிளர்ச்சிப்படை முதலில் சவுதி மீது வான்வழித்தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். அதன்பிறகுதான் சவுதி கூட்டுப்படை தாக்குதலை நிறுத்தும். நவம்பர் மாத இறுதியில் ஐ.நா-வின் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும். அதன்பிறகுதான் ஏமன் எல்லையில் உள்ள ராணுவத்தைத் திரும்பப் பெறுதல், கனரக ஆயுதங்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஐ.நா அமைதி பேச்சுக்கு அமெரிக்கா தரப்பில் கொடுக்கப்பட்ட பதில் இது. மேலும் `அமைதி பேச்சுவார்த்தைக்கு முன்னர், நவம்பர் 4-ஆம் தேதிக்குள் ஹவுதி கிளர்ச்சிப்படைக்கு ஆதரவாக செயல்படும் ஈரான் தன் ஆதரவை திரும்ப பெற வேண்டும். ஆயுதங்கள் கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்றும் அமெரிக்கா கெடு விதித்துள்ளது. 


 

 என்ன சொல்கிறது சவுதி?

`ஹவுதிப் படை செப்டம்பர் மாதம் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்துவிட்டது. இப்போது நாங்கள் போரை நிறுத்திவிட்டோம் என்றால் ஏமன் தலைநகரை தன்வசப்படுத்தியிருக்கும் கிளர்ச்சியாளர்கள் படை. நாங்கள் பின்வாங்கிவிட்டோம் என்று எண்ணிவிடுவார்கள். நாங்கள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார்தான். ஆனால், ஜமால் கஷோகிஜி விவகாரத்தில் சவுதி மீது ஏவப்பட்ட சூழ்ச்சி, பழி போன்று இந்த விவகாரத்திலும் நடந்துவிடும். அதனால் தான் நாங்கள் போரை நிறுத்த முற்படவில்லை’  என்று விளக்கம் கொடுக்கின்றனர் சவுதி அதிகாரிகள்.  


 

``ஜமால் படுகொலை விவகாரத்திலும் சரி, ஏமன் உள்நாட்டுப் போர் விவகாரத்திலும் சரி அமெரிக்காவால் மட்டுமே தீர்வு காண முடியும். ட்ரம்ப் அரசாங்கம் நடத்தும் நாடகம் முடிவுக்கு வந்தால்தான் ஏமன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முடிவும். ஜமால் படுகொலைக்கு நியாயமும் கிடைக்கும்'' என்கின்றனர் உலக அரசியலை கண்காணித்து வரும் வல்லுநர்கள்! 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு