`நாங்கள் இணைவது ஜனநாயகத்தின் கட்டாயம்!' ராகுல் - சந்திரபாபு திடீர் கூட்டணி! | Andhra Chief Minister Chandrababu Naidu meet Congress President Rahul Gandhi

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (01/11/2018)

கடைசி தொடர்பு:20:10 (01/11/2018)

`நாங்கள் இணைவது ஜனநாயகத்தின் கட்டாயம்!' ராகுல் - சந்திரபாபு திடீர் கூட்டணி!

‘பா.ஜ.க-வுக்கு எதிராக உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டைக் காப்பாற்றுவதற்காகச் செயல்பட உள்ளோம்’ என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

ராகுல்

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, இன்று காலை முதல் பா.ஜ.க-வுக்கு எதிராக உள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்தித்துவருகிறார். இன்று மாலை டெல்லியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்தார். தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி-க்கள் ஜெயதேவ் மற்றும் ரமேஷ் ஆகியோரும் உடன் இருந்தனர்.  அதன் பின், இருவரும் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். 

அதில் பேசிய ராகுல் காந்தி, “நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்பதே எங்கள் சந்திப்பின் சாராம்சம். நாங்கள் இருவரும், நடந்து முடிந்தவற்றை மறந்துவிட்டு, நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றி சிந்தித்துச் செயல்பட உள்ளோம். நாட்டின் நலன் மட்டுமே எங்களின் ஒரே குறிக்கோள்” எனப் பேசினார். 

இவரைத் தொடர்ந்து பேசிய சந்திரபாபு நாயுடு, “ நாட்டைக் காப்பாற்ற நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளோம். இது தொடர்பாகவே ராகுல் காந்தியிடம் ஆலோசனை நடத்தினேன். நாங்கள் இணைவது ஜனநாயகத்தின் கட்டாயமாக உள்ளது. பா.ஜ.க-வுக்கு எதிரான கட்சிகளை இணைத்து, பொதுவான ஒரு தளத்தை உருவாக்க இருக்கிறோம். பா.ஜ.க-வை வீழ்த்துவதே எங்களின் முக்கிய நோக்கம்” என்று தெரிவித்தார்