வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (02/11/2018)

கடைசி தொடர்பு:21:30 (02/11/2018)

`நல்ல நெல்மணிகள் உள்ளே; பதர்கள் வெளியே!' - தினகரனை விமர்சித்த அமைச்சர் துரைக்கண்ணு

அ.தி.மு.க-வின் தஞ்சாவூர் தொகுதி இடைத்தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு, 'அறுவடைசெய்த நெல்லை காற்றில் தூத்தினால், பதர் நெல் நீங்கி நல்ல நெல்மணிகள் மட்டும் இருக்கும். அது போல, அ.தி.மு.க-வில் இருந்த பதர்கள் எல்லாம்  நீங்கிப் போய்விட்டன. நல்ல நெல்மணிகள் மட்டுமே இப்போது  நம்மிடம் இருக்கின்றன' என தினகரன் குறித்துப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அமைச்சர் துரைக்கண்ணு

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பணிகள்குறித்த அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தலைமையில் தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் துரைக்கண்ணு, வளர்மதி, எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 20 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட பிறகு  நடைபெற்ற முதல் ஆலோசனைக் கூட்டம் என்பதால், முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி பேசுகையில், 'தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும். மற்ற  19 தொகுதிகளைவிட தஞ்சை தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். நம்மிடம் இருந்த எதிரிகள் எல்லாம் நம்மை விட்டுச் சென்றுவிட்டார்கள். இதனால், நமக்கு எதிரிகளும் இல்லை, துரோகிகளும் இல்லை. நம்மிடம் இருப்பவர்கள் எல்லோரும் தங்கக்கட்டிகள்' என்றார்.வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு பேசுகையில், 'நம்மிடம் இருப்பவர்கள் எல்லோரும் நல்ல நெல்மணிகள். அறுவடை செய்த நெல்லை காற்றில் தூத்தினால், அதில் பதர் நெல் நீங்கி நல்ல நெல் மணிகள் மட்டும் இருக்கும். அது போல அ.தி.மு.க-வில் இருந்த பதர்கள் எல்லாம் போய்விட்டன. நல்ல நெல்மணிகள் மட்டுமே இப்போது  நம்மிடம் இருக்கின்றன.பதர் நெல் போனால், நாம் எப்படி கவலைப்படமாடோமோ, அதேபோல போனவர்களைப் பற்றி  கவலைப்படக் கூடாது' என்றார்.

எம்.பி வைத்திலிங்கம்

முன்னாள் அமைச்சர்  வைத்திலிங்கம் பேசியதாவது, 'இந்த தொகுதியில் எம்.எல்.ஏ-வாக இருந்த ரெங்கசாமியிடம், தினகரன் கட்சிக்கு செல்ல வேண்டாம் என்று கூறினேன். ஆனால் அவர், என்னையும் அங்கு வந்துவிடும்படிக் கூறினார்.எதிர்பாராத சில சூழ்நிலையின் காரணமாக சில அசம்பாவிதங்கள் நடக்கும், அது சரியாகிவிடும். எனவே, மாற்றுக்கட்சிக்குச் செல்ல வேண்டாம் என்று பல முறை ரெங்கசாமியிடம் கூறியும் கேட்காமல், அவர் சென்றதால்தான் தஞ்சை சட்டசபைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்துவிட்டது. தஞ்சை சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில், எதிரிகளை சுமாராக எடை போட்டுவிடக் கூடாது. கடுமையாக உழைக்க வேண்டும். ஆடம்பரம் காட்டாமல்  சாதாரணமாக உழைக்க வேண்டும். அதேநேரத்தில், எதிரிகள் நம்மைக் கண்டு அச்சம் அடையும் வகையில் உழைக்க வேண்டும். புதிதாக அமைக்கப்பட்ட  பூத் கமிட்டி உறுப்பினர்கள், எல்லா வார்டுகளுக்கும் சென்று வாக்காளர்களைச் சேர்க்க வேண்டும். வாக்காளர்களைச் சேர்ப்பது  குறிபிட்ட நாள்தான் என்று இல்லை. ஓட்டு போடுவதற்கு முதல் நாள் வரை வாக்காளரைப் பட்டியலில் சேர்க்கலாம்.

அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம்

மேலும்,  நிர்வாகிகள் வார்டுதோறும் சென்று அங்குள்ள குறைகளை மக்களிடம் கேட்டு, அதை  உடனே அமைச்சர் மற்றும் என்னைப் போன்றவர்களிடம் தெரிவிக்க வேண்டும். நாங்கள் உடனே அவற்றை  கலெக்டரிடம் தெரிவித்து, தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு நிவர்த்திசெய்து, நல்ல பெயரை நாம் வாங்கிக்கொள்ளலாம். இதன்மூலம், நாம் எளிதில் வெற்றிபெறலாம்’’ என்றார். கூட்டத்தின் முடிவில் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேசினார். `தஞ்சைத்  தொகுதியில்  போட்டியிடப்போகும் வேட்பாளர் குறித்து தலைமைதான் முடிவுசெய்யும். நான், நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளேன். எனவே, தஞ்சைத் தொகுதியில் நான் போட்டியிடுவதாகக் கூறுவது தவறான தகவல். மேலும், தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி குறித்து பேசப்படும். ஜனநாயக நாட்டில் அரசு விழாவுக்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால், கமுதியில் அ.தி.மு.க பேனர்கள் கிழிக்கப்பட்டது அராஜகம். அதை யார் கிழித்திருந்தாலும் சட்டம், தன் கடமையைச் செய்து, நடவடிக்கை எடுக்கும்'’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க