முதல்வர் எடப்பாடிக்கு தொடர்வெற்றியா?! காரணங்கள் என்ன? | Series of victory for Edappadi Palanisamy! What are the reasons behind them?

வெளியிடப்பட்ட நேரம்: 09:34 (05/11/2018)

கடைசி தொடர்பு:10:24 (05/11/2018)

முதல்வர் எடப்பாடிக்கு தொடர்வெற்றியா?! காரணங்கள் என்ன?

``முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ஷ்டம் இருப்பது உண்மைதான். அப்படித்தான் சொல்ல வேண்டியுள்ளது."

முதல்வர் எடப்பாடிக்கு தொடர்வெற்றியா?! காரணங்கள் என்ன?

டப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு, நெடுஞ்சாலைத் துறை டெண்டர் விவகார வழக்கு, அ.தி.மு.க.பொதுச் செயலாளர் நியமனம் குறித்த வழக்கு என அடுத்தடுத்து மூன்று வழக்குகளிலும் வெற்றிபெற்று, தமிழக அரசியல் களத்திலும், தன் சொந்தக் கட்சியிலும் மற்ற தலைவர்களை எல்லாம் ஆச்சர்யத்தில் வாய்பிளக்க வைத்திருக்கிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

``முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை" எனக் கூறி, அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 19 பேர் தமிழக முன்னாள் பொறுப்பு ஆளுநரான வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதி அளித்த தீர்ப்பில், தகுதிநீக்கம் செல்லும் என்று உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பானது, தமிழக அரசைக் கவிழாமல் காப்பாற்றி இருப்பதுடன், எடப்பாடி பழனிசாமிக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. தன் ஆட்சிக்கு வரவிருந்த ஆபத்திலிருந்து இதன்மூலம் எடப்பாடி தப்பி விட்டார். 

எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்

இதேபோல் தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் விடப்பட்ட ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்திருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. இதுகுறித்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த வழக்கில் எடப்பாடி தரப்பிலும், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பிலும் `சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை' என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ. விசாரணைக்குத் தடைவிதித்து உத்தரவிட்டது. தான் சார்ந்த துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று உத்தரவு வந்திருப்பதும் எடப்பாடிக்குக் கிடைத்த வெற்றியே. இதிலும் அவர் தப்பிவிட்டார்.

அதேபோல், ``அ.தி.மு.க. சட்டதிட்ட விதிகளின்படி, பொதுச் செயலாளருக்கு மட்டும்தான் முழு அதிகாரம் உண்டு. அந்தப் பதவியை யாரும் நீக்க முடியாது. எனவே, தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்துசெய்துவிட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்த வேண்டும்" என்று நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி. பழனிசாமி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதற்குப் பதிலளிக்கும்படி, அந்த மனுவைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிவைத்தது நீதிமன்றம். இந்த விவகாரத்தில், ``அ.தி.மு.க. சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பிறகே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எனவே, தற்போது அதை ரத்துசெய்துவிட்டு, `பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்த வேண்டும்' என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. அத்துடன், எந்தவோர் அரசியல் கட்சியின் உள்விவகாரத்திலும் தலையிடுவது தேர்தல் ஆணையத்தின் வேலையல்ல. அதனால், மேற்படி மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. 

எடப்பாடி பழனிசாமி - மு.க.ஸ்டாலின்

இந்த உத்தரவுகள் அனைத்துமே முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், அவரின் அமைச்சரவைக்கும் தற்போதைக்கு எந்தவோர் ஆபத்தும் இல்லை என்பதையே வெளிக்காட்டுவதாக உள்ளன. மேலும் எடப்பாடியை குறிவைத்துத் தொடரப்பட்ட வழக்குகள் எல்லாம், அவருக்குச் சாதகமாகவே முடிந்துள்ளன. அனைத்து வழக்குகளிலும் எடப்பாடி வெற்றிபெற்றிருப்பதால், அவரின் ஆதரவாளர்களும் அ.தி.மு.க.-வினரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 

இதுகுறித்து, அ.தி.மு.க-வில் பெயர் கூறவிரும்பாத மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ``முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ஷ்டம் இருப்பது உண்மைதான். அப்படித்தான் சொல்ல வேண்டியுள்ளது. தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முதல்வருக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டாலும், அவர் மீது வசைமாறி பொழிந்தாலும், மக்களிடம் அவருக்குத் தொடர்ந்து செல்வாக்கு இருந்து வருகிறது. முதல்வரும் தனக்கு உள்ள நல்ல பெயரைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைத்துக் கொடுத்த நல்லாட்சியைத் தமிழகத்தில் சிறப்பாக நிறைவேற்றி வருகிறார். தன் அமைச்சரவையில் உள்ள சகாக்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வருவதாலேயே முதல்வருக்குக் கட்சியினர் மத்தியிலும் நல்லபெயர் நீடிக்கிறது. அதிருப்தியாளர்களாக இருந்தவர்களையும் அனுசரித்துச் செல்கிறார். இதனால்தான் எதிர்க்கட்சியினர் எடப்பாடி மீது பொறாமை கொள்கின்றனர். அவரைப்பற்றி பலவாறாகப் பேசுவதுடன், தேவையில்லாமல் அவதூறு வழக்குகளைப் போட்டு வருகின்றனர். ஆனால், அவருக்கு எதிராகப் போடப்படும் வழக்குகள், எடப்பாடியின் செல்வாக்கை உயர்த்துவதாகவே அமைந்து விடுவதால், எதிர்க்கட்சியினர் ஏமாற்றமடைந்து வருகிறார்கள்" என்றனர். 

இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரிடம் பேசினோம். ``அ.தி.மு.க-வில் தற்போது இருப்பவர்கள் அனைவரும் பதவிக்காகவே முதல்வரை ஆதரிப்பது போன்று பாசாங்கு செய்து கொண்டிருக்கிறார்கள். 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் டி.டி.வி. தினகரனையே ஆதரிக்கிறார்கள். அ.தி.மு.க. என்ற ஒரு கட்சியே தற்போது இல்லை என்ற நிலையில், ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். புராணம் பாடுபவர்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. தேர்தல் நேரத்தில் தெரியும் யாருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்று. தற்போதுள்ள நிலைமை விரைவில் மாறும். எடப்பாடிக்கு இப்போது சில வழக்குகளில் கிடைத்துள்ள வெற்றி தற்காலிகமானதுதான். ஆட்சியும், அதிகாரமும் அவர்கள் பக்கம் இருக்கும்போது ஏன் ஜெயிக்கமாட்டார்கள்? ஆனால், உண்மையைச் சொல்லப்போனால் அவர்கள் ஆட்சியைத் தக்கவைப்பதற்காகத்தான், இதுபோன்ற அரசியல் நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியில் ஊழல் நடப்பது உண்மை. அதை, உலகுக்கு விரைவில் தெரிவிப்போம். தவறு செய்தவர்கள், தண்டனையிலிருந்து தப்ப முடியாது" என்றனர்.

எடப்பாடி தலைமையிலான ஆட்சி இன்னும் இரண்டு ஆண்டுகள் தொடருமா...? பொறுத்திருந்து பார்ப்போம்...!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்