வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (09/11/2018)

கடைசி தொடர்பு:17:10 (09/11/2018)

`விஜய் கொடும்பாவி கொளுத்தாதீங்க!’ - நிர்வாகிகளுக்கு உத்தரவிட்ட அ.தி.மு.க எம்.பி

தஞ்சாவூரில் `சர்கார்’ படத்துக்கு எதிராக அ.தி.மு.க-வினர் இன்று  நடிகர் விஜய்யின் கொடும்பாவி எரித்து போராட்டம் நடத்துவதாக இருந்தனர். ஆனால், விரைவில் தஞ்சாவூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வர இருப்பதால் கொடும்பாவி எரித்து விஜய் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளானால் தேர்தல் சமயத்தில் பாதிப்பை உண்டாக்கும். அதனால் ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்தினால் போதும். கொடும்பாவி எரிக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க எம்.பி-யுமான வைத்திலிங்கம் நிர்வாகிகளுக்கு உத்தரவிட படத்துக்கு எதிராகக் கோஷம் மட்டும் போட்டுவிட்டு ஆதங்கத்தோடு கலைந்து சென்றனர்.

அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் `சர்கார்’ படத்தில் வரும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்காக அனுமதியின்றி பேனர் வைத்ததாகக் கூறி விஜய் ரசிகர்கள் மீதும் போலீஸார் வழக்கு பதிந்து வருகின்றனர். இந்த நிலையில் சர்கார் படத்துக்கு எதிராகத் தஞ்சாவூர் சாந்தி திரையரங்கம் முன்பு அ.தி.மு.க-வினர் இன்று நடிகர் விஜய்யின் கொடும்பாவி எரித்து போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். இதற்காக காலையில் அ.தி.மு.க-வினர் தியேட்டர் முன்பு திரண்டனர். பெருமளவில் குவிக்கப்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். நிர்வாகி ஒருவர் கார் ஒன்றில் விஜய் போட்டோவுடன் தயார் செய்யப்பட்ட கொடும்பாவி பொம்மை எடுத்து வந்திருந்தார். இதனால் சர்கார் படம் ஓடும் தியேட்டர்களில் சினிமா காட்சி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் முக்கிய நிர்வாகிகள் வந்தவுடன் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. அப்போது, சர்கார் படத்தில் வரும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். இல்லையென்றால் நீக்கும் வரை போராட்டம் நடத்துவோம் எனக் கோஷம் போட்டுவிட்டு பின்னர் கலைந்து சென்றனர். ஆனால், காரில் எடுத்துவரப்பட்ட விஜய் கொடும்பாவியை எரிக்காமலேயே எடுத்துச் சென்றனர்.

தியேட்டர் முன்பு திரண்ட அ.தி.மு.க.வினர்

இது குறித்து அ.தி.மு.க-வினர் சிலரிடம் பேசினோம். ``விரைவில் 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரவிருக்கிறது. இதில் தஞ்சாவூர் தொகுதியும் ஒன்று. சர்கார் பிரச்னை தொடர்பாகப் போராட்டங்கள் நடைபெற்று வந்தாலும் தேர்தல் சமயத்தில் விஜய் ரசிகர்களின் ஓட்டு என்பது ரொம்பவே முக்கியம். விஜய் ரசிகர்கள் பலர் அ.தி.மு.க-வில் இருக்கிறார்கள். மக்கள் இயக்கமாக மாற்றப்பட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் தஞ்சாவூரில் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறார்கள். இதனால் தேர்தல் வரவிருக்கும் இந்த நேரத்தில் விஜய் கொடும்பாவி கொளுத்தி அவர் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம். கொடும்பாவி கொளுத்தினால் தேர்தல் சமயத்தில் அவை பெரும் பாதிப்பை உண்டாக்கும். இதனால் ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்தினால்போதும். கொடும்பாவி எரிக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்  நிர்வாகிகள் மூலம் தெரியப்படுத்தினார். இதனால் நாங்கள் கொடும்பாவி எரிக்கவில்லை. ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்தினோம்'' என்றனர்.

போலீஸாரும் பிரச்னை பெரிதாகாமல் ஆர்ப்பாட்டத்தோடு மட்டும் முடிந்ததே எனப் பெருமூச்சு விட்டனர். மேலும் சிலர் ஜெயலலிதாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர், வளர்க்கப்பட்டவர் வைத்திலிங்கம். அவரே ஓட்டுக்காக இப்படி பெயரளவுக்கு மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த சொன்னது வேதனையாக இருக்கிறது என ஆதங்கப்பட்டனர் நிர்வாகிகள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க