வெளியிடப்பட்ட நேரம்: 15:17 (10/11/2018)

கடைசி தொடர்பு:15:58 (10/11/2018)

தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பரபரப்பாகும் நிலக்கோட்டை தொகுதி! ஏன்?

தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பரபரப்பாகும் நிலக்கோட்டை தொகுதி! ஏன்?

குதி நீக்கம் செய்யப்பட்ட நிலக்கோட்டை தொகுதி உட்பட 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரலாம் என்ற எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுடன்தான் இடைத்தேர்தல் வரும் என்று தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினும், அ.ம.மு.க-வைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வனும் பேசி வருகிறார்கள். இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பணியை இப்போதே தொடங்கிவிட்டது தி.மு.க.

நிலக்கோட்டை தொகுதியைப் பொறுத்தவரை, அ.தி.மு.க-வுக்கான வாக்கு வங்கி பலமாக இருக்கும் தொகுதியாகும். ஜெயலலிதா இறந்த பிறகு இந்த வாக்குவங்கியில் பெரிய ஒட்டை விழுந்திருக்கிறது என்றே சொல்லலாம். காரணம் கோஷ்டிப் பூசல். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஓர் அணியாகவும், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஓர் அணியாகவும் பிரிந்து இருக்கிறார்கள். இந்த நிலையில், இவர்கள் இருவரையும் நிலக்கோட்டை தொகுதி பொறுப்பாளர்களாக அ.தி.மு.க அறிவித்திருப்பது தொண்டர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது. நிலக்கோட்டையில் இருந்து எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கத்துரை, தொகுதிக்காக எந்த வளர்ச்சிப் பணியும் செய்யவில்லை. இதனால் தொகுதிக்குள் அவர் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது. அதே நேரத்தில், திண்டுக்கல் தொகுதியின் எம்.பி. உதயகுமார் நிலக்கோட்டையைச் சேர்ந்தவர்தான். அவரும் உள்ளூருக்குச் சொல்லிக்கொள்ளும்படியான திட்டங்களைக் கொண்டு வரவில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. ``நாங்க அ.தி.மு.கவுக்குத்தானே ஓட்டுப்போட்டோம். அவரு அணி மாறினதுக்கு நாங்க என்ன செய்வோம்? அதுக்காக எங்க தொகுதிக்கு எதுவும் செய்யாம ஒதுக்கி வெச்சது எந்த வகையில நியாயம்?" என ஆளும்கட்சி மீது பாய்கிறார்கள் தொகுதிவாசிகள். ஒட்டுமொத்தமாக அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க இரண்டு கட்சிகளுக்கும் எதிரான மனநிலை தொகுதியில் பரவிக்கிடக்கும் சூழலை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது தி.மு.க.

நிலக்கோட்டை ஆலோசனைக் கூட்டம்

தி.மு.க-வுக்கும் இந்தத் தொகுதியில் கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. கடந்த சட்டசமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தங்கத்துரைக்கும், இரண்டாம் இடத்தைப் பிடித்த தி.மு.க. வேட்பாளர் அன்பழகனுக்குமான வித்தியாசம் 14,446 வாக்குகள்தான். ஜெயலலிதா இருந்தபோதே, குறைவான வித்தியாசத்தில்தான் அ.தி.மு.க வெற்றி பெற்றது. தற்போது, அ.தி.மு.க பிளவுபட்டுக் கிடக்கிறது. அ.தி.மு.க வாக்குகளைத் தினகரன் தரப்பும், ஆளும்கட்சியும் பிரித்துக்கொள்ளும் பட்சத்தில், தி.மு.க எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில், தி.மு.க தொண்டர்கள் இருக்கிறார்கள். 

இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் வத்தலகுண்டில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க தேர்தல் பொறுப்பாளர் வெள்ளக்கோவில் சாமிநாதன், ``இது நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆலோசனைக்கூட்டம் என்றாலும், இந்தத் தொகுதி இடைத்தேர்தலை எந்த நேரத்திலும் சந்திக்கவுள்ள தொகுதி. எனவே, அதற்காகவும் உடனடியாகத் தயாராக வேண்டும். இந்தத் தொகுதியில் தி.மு.க வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. எனவே, அனைவரும், உற்சாகத்துடன் களப்பணியாற்றுங்கள்" என்றவர், ``இன்று இரவே பணிகளைத் தொடங்குங்கள். தொகுதி முழுவதும் சின்னம் வரைவதற்காக சுவர்களை ரிசர்வ் செய்யுங்கள்’’ என்றார். கூட்டத்தில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், மேற்கு மாவட்டச் செயலாளர் சக்கரபாணி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தி.மு.க தேர்தல் பணியை தொடங்கிய நிலையில், அ.தி.மு.க-வும் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. தினகரன் தலைமையில், உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது. இதனால் நிலக்கோட்டை தொகுதி பரபரப்பாக காணப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க