Published:Updated:

திருப்போரூர் இடைத்தேர்தல் திருவிழா ஆரம்பம்... களத்தில் இறங்கிய அ.தி.மு.க!

திருப்போரூர் இடைத்தேர்தல் திருவிழா ஆரம்பம்... களத்தில் இறங்கிய அ.தி.மு.க!
திருப்போரூர் இடைத்தேர்தல் திருவிழா ஆரம்பம்... களத்தில் இறங்கிய அ.தி.மு.க!

திருப்போரூர் சட்ட மற்ற தொகுதிகளில் அரசியல் கட்சிகள் இடைத்தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தல் வேலைகளில் முதலாவதாக முந்திக் கொண்ட அ.தி.மு.க நிர்வாகிகள், திருப்போரூரில் இன்று பூத் கமிட்டிகளை அமைத்துவிட்டார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்ததன் விளைவாக, சபாநாயகர் தனபால் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து தினகரன் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏக்களும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொர்ந்தனர்.

இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியான சத்தியநாராயணன் ‘சபாநாயகரின் தகுதி நீக்கம் செல்லும்’ என உத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து, `நாங்கள் மேல்முறையீடு செய்யப் போவதில்லை' என தினகரன் அறிவித்தார். இதனால் அந்த 18 தொகுதிகளுடன் திருவாரூர், திருப்பரங்குன்றம் என மொத்தம் 20 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வர இருப்பதால் அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் வேலைகளைத் துவங்கிவிட்டன. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 2 இடங்களில் மட்டுமே அ.தி.மு.க வெற்றிபெற்றது. அதில் திருப்போரூர் தொகுதியும் அடங்கும். திருப்போரூர் எம்.எல்.ஏ கோதண்டபானி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒரே ஒரு எம்.எல்.ஏ மட்டுமே மாவட்டத்தில் இருக்கிறார்.  இதனால், திருப்போரூர் தொகுதியைக் கைப்பற்ற வேண்டும் என அ.தி.மு.க முதலாவதாக களத்தில் இறங்கி இருக்கிறது. திருப்போரூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் இன்று 75 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டன. வாலாஜாபாத் கணேசன், எஸ். ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர் குமரவேல் உள்ளிட்ட அ.தி.மு.க பிரமுகர்கள் பூத் கமிட்டி அமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு ஊராட்சி சார்பாகவும் 5 பேர் வந்தனர். பூத் வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனையும் நடைபெற்றது.

தி.மு.க தரப்பில் செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டச் செயலாளர் தா.மோ. அன்பரசன் தலைமையில் நாளை நடைபெற உள்ளது. இதில் ஆர்.எஸ். பாரதி, கே.பி.பி.சாமி, மீ.அ. வைத்தயலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க உள்ளனர். தினகரன் சார்பில் திருப்போரூர் முன்னாள் எம்.எல்.ஏ கோதண்டபாணி தலைமையில் வரும் 18ம் தேதி உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே திருப்போரூரில் திருவிழா தொடங்கிவிட்டது!.