Published:Updated:

எம்.ஜி.ஆர் மறைந்த நாளில் திருநாவுக்கரசர் செய்ததை சொல்லட்டுமா? - எச்சரிக்கும் ஈ.வி.கே.எஸ் ஆதரவாளர்கள்!

எம்.ஜி.ஆர் மறைந்த நாளில் திருநாவுக்கரசர் செய்ததை சொல்லட்டுமா? - எச்சரிக்கும் ஈ.வி.கே.எஸ் ஆதரவாளர்கள்!
எம்.ஜி.ஆர் மறைந்த நாளில் திருநாவுக்கரசர் செய்ததை சொல்லட்டுமா? - எச்சரிக்கும் ஈ.வி.கே.எஸ் ஆதரவாளர்கள்!

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மறைந்த நாளில், திருநாவுக்கரசர் என்னென்ன காரியங்கள் செய்தார் என்ற விவரங்களை வெளியிட நேரிடும் என ஈ.வி.கே.எஸ் ஆதரவாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

கோஷ்டி மோதலுக்கு பஞ்சமில்லாத கட்சியாகவே தமிழக  காங்கிரஸ் இருந்து வருகிறது. தமிழக காங்கிரஸ் பல்வேறு குழுக்களாக சிதறுண்டு கிடக்கிறது. அந்த வகையில், தற்போதைய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசருக்கும், ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்குமான கோஷ்டி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளர்களான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ஏ.பி.சி.வி. சண்முகம், ரங்கபாஷ்யம், வி.ஆர்.சிவராமன், ஜெரோம் ஆரோக்கியராஜ், குலாம் மொகைதீன், வசந்தராஜ் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், ``ராகுல்காந்தியின் ஆணைப்படி ஏழை மக்களை வஞ்சித்த மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நினைவூட்டி, அதை கறுப்பு தினமாக அறிவித்து காங்கிரஸ் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ் மற்றும் அவரது குடும்பம் குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தது காங்கிரஸ் தொண்டனை மனவேதனை அடையச் செய்துள்ளது. சமூக நீதிக்காக புரட்சி செய்த தந்தை பெரியாரையும், சொல்லின் செல்வர் ஈ.வெ.கி சம்பத் குறித்தும் பேசுவதற்கு திருநாவுக்கரசருக்கு என்ன அருகதை இருக்கிறது. இந்தியாவிலே சமூக நீதியைக் கண்ட முதல் மாமனிதர் பெரியார். தனது கௌரவம் பாதிக்கப்பட்டபோது, தன்மானம்தான் பெரிது என எண்ணி திராவிட கொள்கைகளை துறந்து தேசிய நீரோட்டத்தில் இணைந்த சம்பத் தமிழக காங்கிரஸ் துணைத் தலைவராக - பொதுச் செயலாளராக பணியாற்றி பட்டித் தொட்டியெங்கும் தனது சொல்லாற்றலால் காங்கிரஸ் கொள்கைகளை முழங்கியவர். சுதந்திரப் போராட்ட தியாகியின் குடும்பத்தில் பிறந்து மறைந்த பல தியாகிகளை உலகம் உள்ளவரை அனைவரும் போற்றும் வண்ணம் தனது நடிப்பால் உயிரோட்டம் கொள்ளச் செய்தவர் சிவாஜிகணேசன், காங்கிரஸ் பேரியக்கமே தனது உயிர் மூச்சு என வாழ்ந்தவர்.

அவரைக் கொச்சைப்படுத்தி பேசுவதை உண்மையான எந்த காங்கிரஸ் தொண்டனும் ஏற்கமாட்டான். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் கொள்கை பிடிப்போடு வெவ்வேறு கட்சிகளில் இருப்பது தவறில்லை. ஒரே நபர் பதவி சுகத்துக்காக, விசுவாசமும், நன்றியும் இல்லாமல் பல கட்சிகளுக்கு போவதுதான் கேவலமான செயல். பதவிக்காக தன்மானத்தையும், மரியாதையையும் இழந்து தமிழக காங்கிரஸ் கட்சியின் பொம்மைத் தலைவராக வலம் வரும் திருநாவுக்கரசருக்கு அவர்களது வரலாறு தெரிய வாய்ப்பில்லை. பதவி சுகத்துக்காக பல கட்சிகளுக்கு இடம் பெயர்ந்து, இருந்த இடத்துக்கு விசுவாசமும், நன்றியும் இல்லாதவர் திருநாவுக்கரசர். இளங்கோவன் மீது இனி மேலும் இதுபோன்ற தரமற்ற விமர்சனங்களைச் செய்தால் இவர் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தபோது மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். மறைந்த இரவில் என்னென்ன காரியங்கள் செய்தார் என்ற விவரங்களை எல்லாம் வெளியிட நேரிடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.