Published:Updated:

கரைவேட்டி கட்டவில்லை; அ.தி.மு.க ஆண்டுவிழாவில் பட்டு வேட்டி, சட்டையில் கலக்கிய அமைச்சர் நடராஜன்

சி.ய.ஆனந்தகுமார்
கரைவேட்டி கட்டவில்லை; அ.தி.மு.க ஆண்டுவிழாவில் பட்டு வேட்டி, சட்டையில் கலக்கிய அமைச்சர் நடராஜன்
கரைவேட்டி கட்டவில்லை; அ.தி.மு.க ஆண்டுவிழாவில் பட்டு வேட்டி, சட்டையில் கலக்கிய அமைச்சர் நடராஜன்

``முதல்வர் ஆகிவிடலாம் என்கிற கனவில் ஸ்டாலின் இருக்கிறார். அது வெறும் கனவாகவே இருக்கும்'' என அ.தி.மு.க அமைச்சர் ஒருவர் கட்சி நிகழ்ச்சிக்குப் பட்டு வேட்டி சட்டையுடன் வந்து கலகலப்பாக பேசிக் கிண்டல் செய்தது திருச்சியில் நடந்தது.

அ.தி.மு.க-வின் 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோயிலுக்கு முன்பாக நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜ்குமார், முன்னாள் தலைவர் ஞானசேகரன் ஆகியோர் சகிதமாகமாக திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.பி.குமார், கட்சியின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி, அமைச்சர்கள் வளர்மதி, வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். மேடையில் நலிந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டன.

கடந்த சில தினங்களாக அரசு சார்பில் லண்டனுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருந்த சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இந்த விழாவுக்காக லண்டனில் இருந்து விமானம் மூலம் சென்னை வழியாகத் திருச்சிக்கு வந்தவர், நேராகப் பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார். அப்படி வந்த அமைச்சர் அ.தி.மு.க.-வின் கட்சி கரை வேட்டி இல்லாமல் பட்டு வேட்டி சட்டையுடன் இருந்தார். மேடையில் பேசிய எம்.பி குமார் உள்ளிட்ட பலரும், ``அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள சுற்றுலாத்துறை போன்று தமிழகத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பட்டு வேட்டி சட்டையுடன் கிளம்பி வந்திருக்கிறார்'' என 'பஞ்ச்' வைத்துப் பேசினார்கள்.

இறுதியாக மைக் பிடித்த அமைச்சர் நடராஜன், ``எம்.ஜி.ஆர் சாமானிய மக்களின் முன்னேற்றத்துக்காக இந்த மாபெரும் இயக்கத்தை உருவாக்கினார். இந்த இயக்கத்தில் கட்சியின் கடைக்கோடி தொண்டன் கூட உயர் பதவிக்கு வரமுடியும். அந்த அ.தி.மு.க-வின் சாதாரண தொண்டனாக விவசாயியாக இருந்த எடப்பாடி பழனிசாமியால் தமிழ்நாட்டின் முதல்வராகவும், தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமத்தில் டீக்கடை வைத்திருந்த  ஓ.பன்னீர் செல்வத்தால் துணை முதல்வராக முடிகிறதென்றால் அது அ.தி.மு.க-வில் மட்டுமே சாத்தியம். ஆனால், தி.மு.க-வில் அப்படி இல்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதி உயிரோடு இருந்தவரை அவரின் மகனான ஸ்டாலினால் கட்சியின் தலைவராகக்கூட வர முடியவில்லை. அதுமட்டுமல்லாமல், தி.மு.க-வின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலின், விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல் வரவிருக்கிறது எனத் தொடர்ந்து பேசி வருகிறார். கூடவே அப்படித் தேர்தல் வந்தால் தி.மு.க.தான் ஆட்சி அமைக்கும். தான் முதல்வர் ஆகிவிடலாம் என்கிற கனவில் இருக்கிறார். அது வெறும் கனவாகவே இருக்கும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சட்டமன்றத்தில் எனக்குப் பின்னாளும் இந்தப் பேரியக்கம் நிலைத்து நிற்கும் என்றார். அப்படிப்பட்ட இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது" என்று முடித்தார்.