Published:Updated:

‘பெரியாருக்குச் சாதி அடையாளமா?’ - கொந்தளிக்கும் மு.க.ஸ்டாலின்

சத்யா கோபாலன்
‘பெரியாருக்குச் சாதி அடையாளமா?’ - கொந்தளிக்கும் மு.க.ஸ்டாலின்
‘பெரியாருக்குச் சாதி அடையாளமா?’ - கொந்தளிக்கும் மு.க.ஸ்டாலின்

டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 வினாத் தாளில் பெரியார் பெயருக்கு சமூகத்தின் அடையாளம் வழங்கப்பட்டுள்ளதற்கு ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2 தேர்வு நாடு முழுவதும் நேற்று நடைபெற்று முடிந்தது. 1,199 காலிப் பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் சுமார் ஆறு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் தேர்வு எழுதினர். அந்த வினாத் தாளில் திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்? என்ற கேள்விக்கு 1) இ.வெ.ராமசாமி நாயக்கர் 2) ராஜாஜி 3) காந்திஜி 4) சி.என் அண்ணாதுரை என நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் பெரியாருக்கு இ.வெ ராமசாமி நாயக்கர் என சமூகத்தின் பெயருடன் குறிப்பிடப்பட்டதுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வு வினாத்தாளைத் தயாரித்தவர்கள் எத்தகைய சாதி வன்மம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு இ.வெ.ராமசாமி நாயக்கர், காந்திஜி, ராஜாஜி, சி.என். அண்ணாதுரை என்பதில் எது சரியான பதில் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. கேள்வியைத் தயாரித்தவர், சரிபார்த்தவர், மேற்பார்வை செய்த ஆணையத்தின் அதிகாரம் படைத்தவர்களுக்கு முதலில் ஆங்கிலம் தெரியுமா, தமிழ்நாடு தெரியுமா எனத் தெரியவில்லை. 
  
ஈரோடு வெங்கடப்ப ராமசாமி என்பதுதான் சுருக்கமாக ஈ.வெ.ரா. அதுகூடத் தெரியாமல், 'இ' என்று பிழையாகப் போட்டுள்ளார்கள். கேள்வியைத் தயாரித்தவருக்கு ஈரோடு கூட தெரிந்திருக்கவில்லை. இப்படிப்பட்ட நபர்களிடம் கேள்வி தயாரிக்கச் சொன்னால், தந்தை பெரியாருக்கு சாதிப்பட்டம் போடத்தானே செய்வார்கள்! இன்றிலிருந்து 90 ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது 1928-ம் ஆண்டிலேயே தனது பெயரில் சாதி ஒட்டியிருந்ததை நீக்கியவர் பெரியார். யாரும் சாதிப்பட்டம் போடக்கூடாது என்றவர் அவர். சாதிப்பெருமை பேசக்கூடாது என்று, சாதி மாநாடுகளிலேயே துணிச்சலாகப் பேசியவர் அவர். எப்போதும் எல்லா நிலையிலும் ஒடுக்கப்பட்டோர் பக்கமே நின்றவர். அப்படிப்பட்ட பெரியாருக்கு சாதி அடையாளம் சூட்டுவதும், அதுவும் அரசுத்தேர்வில் அடையாளப்படுத்துவதும் அயோக்கியத்தனமானது மட்டுமல்ல, தேர்வு எழுதுவோரின் மனதில் பிற்போக்குத் தனமான எண்ணத்தை விதைப்பதுமாகும். இதற்கு, காரணமானவர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும். தமிழக அரசு இந்த அடாத செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 

இதே விவகாரம் தொடர்பாக பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இனி இது போன்ற தவறு எதுவும் நடக்காது. தற்போதைய தவறுக்கு வருந்துகிறோம் என டி.என்.பி.எஸ்.சி மன்னிப்பு கேட்டுள்ளது.