Published:Updated:

``கோட்டையும் காடுதான்...ஏன் தெரியுமா?" - கமல்ஹாசன் புது விளக்கம்!

``கோட்டையும் காடுதான்...ஏன் தெரியுமா?" - கமல்ஹாசன் புது விளக்கம்!
``கோட்டையும் காடுதான்...ஏன் தெரியுமா?" - கமல்ஹாசன் புது விளக்கம்!

``கோட்டையும் காடுதான்...ஏன் தெரியுமா?" - கமல்ஹாசன் புது விளக்கம்!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், தமிழகம் முழுவதும் மாவட்டம்வாரியாகச் சுற்றுப்பயணம் செய்து, மக்களைச் சந்தித்து, தான் கட்சி ஆரம்பித்ததன் நோக்கம், தன்னுடைய கட்சியின் கொள்கைகள் என்ன என்பன போன்றவற்றை விளக்கிப் பேசி வருகிறார்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த இரு தினங்களுக்கு முன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உரையாற்றியதுடன், தர்மபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் பேசினார். நல்லம்பள்ளியில் திறந்தவேனில் நின்றபடியே பேசிய கமல்ஹாசன், நல்லம்பள்ளி என்ற பெயரில்தான் பள்ளி இருக்கின்றதே தவிர, இங்குள்ள குழந்தைகள் படிப்பதற்கு பள்ளிக்கூடம் இல்லை. ஆனால், டாஸ்மாக் கடைகள் அதிகம் இருக்கின்றன. சந்துக்குச் சந்து சாராயக் கடைகள் இருக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலையை உங்களின் துணையுடன் மாற்றவேண்டும் என்றுதான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். 
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொகுதியான பாலக்கோட்டில், மர்மக் காய்ச்சலால் 200-க்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். ஆனால், ஏன் என்று கேட்கக்கூட நாதியில்லை. அதனால், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மருத்துவ முகாம் அமைக்கவுள்ளோம். நமக்கான மாற்றத்தை நாமே செய்தால்தான் உண்டு" என்றார்.

தர்மபுரி பொதுக்கூட்டத்தில் இரவு 8 மணிக்கு மைக் பிடித்த கமல்ஹாசன், ``இந்தமாவட்டத்துக்கு வருகை தந்தபோது எனக்கு நான் சிறுவனாக இருந்தபோது சண்முகம் அண்ணாச்சியின் நாடக கம்பெனியில் நடிப்பைக் கற்றுக் கொண்டிருந்த நினைவுகள் நிழலாடின. அப்போது என்னுடைய ஆசான், சுப்பிரமணி சிவா போன்று வேடம் அணிந்து வந்தது என் நினைவுகளில் ஆழமாகப் பதிந்தது. தியாகி சுப்பிரமணிய சிவாவின் மணிமண்டபத்துக்குச் சென்று பார்வையிட்டேன். அந்தப் பழைய நினைவுகள் எல்லாம் திரும்பி வந்தன. 

தற்போது, தர்மபுரி மாவட்டத்தில் அரசின் அசட்டையினால் இளைஞர்களுக்குப் போதுமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. இதனால் இங்குள்ளவர்கள், வெளியூர்களுக்கு வேலைதேடிச் செல்கின்றனர். மாவட்டத்தில் 32 சதவிகிதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளனர் என்பது வருந்தத்தக்க செய்தியாகும். `இந்தப் பகுதியில் ஃபுளோரைடு கலந்த தண்ணீர் வருகிறது' என்று 20 வருடங்களாகப் படித்து வருகிறோம். ஆனால், ஃபுளோரைடு பாதிப்பைப் போக்க முழுமையான நடவடிக்கையை இந்த அரசாங்கம் எடுக்கவில்லை. இதையெல்லாம் மக்கள் நீதி மய்யம் மாற்றி அமைக்கும். இங்கே சாதிக் கலவரங்கள் அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். சாதிக்கலவரங்கள் இல்லாத ஊர்களில் அரசியல்வாதிகள் புதிதாக ஏற்படுத்தி விடுகிறார்கள். அதுபோன்ற அரசியல்வாதிகள் இருக்கும்வரை, அமைதியான ஊர்களில்கூட சச்சரவுகள் ஏற்படும். 

நாட்டு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும். எனக்குத் தோன்றும் நல்ல திட்டங்களை நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து உருவாக்குவோம். அந்த மாற்றம் உங்கள் காதுகளை எட்டும். காரணம், நான் பிரியாணி கொடுத்து கூட்டத்தைக் கூட்டவில்லை. என் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் வந்துள்ளீர்கள். தமிழகத்தில் உள்ள அரசாங்கம் செயலற்றுக் கிடக்கின்றது. அரசாங்கம் செயலற்று இருந்தால், அது கோட்டையாக இருந்தாலும் காடுதான். 

தயவுசெய்து உங்களிடம் நான் கேட்பது எல்லாம் ஒன்றுதான். காசுக்காக உங்களின் வாக்குகளை விற்றுவிடாதீர்கள். காரணம், ரத்தம் சிந்தி வாங்கிய சுதந்திரத்தை காசுக்காக விற்கக் கூடாது. உங்களுக்குக் கொடுக்கும் சில ஆயிரம் ரூபாயை அவர்கள் எங்கே இருந்து தருகின்றார்கள். அந்தப் பணம் என்ன அவர்களின் தாத்தா சொத்தா? உங்கள் பையிலிருந்து ஆயிரம் கோடிகளை எடுத்துக்கொண்டு சில ஆயிரங்களைக் கொடுத்துவிட்டு, பல கோடி ரூபாயைச் சுருட்டிக் கொள்கிறார்கள். இது என் நாடு, இது என்னுடைய மண் என்ற உணர்வு அனைவருக்கும் வர வேண்டாமா? இதை மாசுபடுத்த அனுமதிக்கலாமா? சாய்வு நாற்காலியில் ஓய்வு எடுக்க வேண்டிய நான், உங்களுக்காகப் போராட வந்திருக்கின்றேன். இனி எஞ்சியிருக்கும் என் வாழ்க்கை உங்களுக்காகத்தான் என்று பல வருடங்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டேன். மக்கள் நீதி மய்யத்தின் எண்ணமும் நோக்கமும் மக்களின் நலன் சார்ந்தே இருக்கும். அதற்காக மாற்றம் விரைவில் வரும்" எனப் பேசி முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு