Published:Updated:

`நிதி ஒதுக்கியாச்சு; சந்தோஷமா வேலையைப் பாருங்க!' - தொண்டர்களைக் குஷிப்படுத்திய அ.தி.மு.க எம்.எல்.ஏ

ஆர்.குமரேசன்
`நிதி ஒதுக்கியாச்சு; சந்தோஷமா வேலையைப் பாருங்க!' - தொண்டர்களைக் குஷிப்படுத்திய அ.தி.மு.க எம்.எல்.ஏ
`நிதி ஒதுக்கியாச்சு; சந்தோஷமா வேலையைப் பாருங்க!' - தொண்டர்களைக் குஷிப்படுத்திய அ.தி.மு.க எம்.எல்.ஏ

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிகள் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. இந்த நிலையில், 18 தொகுதிகளில் ஒன்றான நிலக்கோட்டையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இடைத்தேர்தல் நடக்குமா, நாடாளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தலும் வருமா என்று தெரியாத நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்காகத் தயாராகி வருகின்றன.

தி.மு.க சுவர்களில் சின்னம் வரைந்து பிரசாரத்தையே தொடங்கிவிட்டது. அ.தி.மு.க தொடர்ந்து செயல்வீரர் கூட்டங்களை நடத்தி வருகிறது. இன்று வத்தலகுண்டு காந்தி நகரில் வத்தலகுண்டு பேரூராட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி வடக்கு மண்டல பொறுப்பாளர் வளர்மதியும், தெற்கு மண்டல பொறுப்பாளரும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான பரமசிவம் ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், `ஒவ்வொரு 200 வாக்காளர்களுக்கும் 6 நபர்கள் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும். இந்த 6 நபர்களும் அந்த 200 நபர்கள் பட்டியலில் இடம்பெற்றவர்களாக இருக்க வேண்டும். இந்த 6 பேரும் தலா 30 முதல் 40 வாக்குகளுக்கு பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்' எனப் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர் அப்போது முன்னாள் கவுன்சிலர் நாகூர்கனி எழுந்து, `` கடந்த ஆறு வருஷமா வத்தலகுண்டு பகுதியில ரோடு போடலை. ஓ.ஏ.பி (முதியோர் ஓய்வூதியம்) வாங்கிக் கொடுக்கலை. அப்படியிருக்கும்போது, நாங்க எப்படி மக்களை சந்திச்சு ஓட்டு கேக்குறது'' என்றார். அவருக்குப் பதிலளித்த பரமசிவம், ``18 தொகுதிகளுக்கும் சிறப்பு நிதியை முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார். 67,000 பேருக்கு முதியோர் ஓய்வூதியம் கொடுப்பதற்காக பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவெல்லாம் வந்திடுச்சு. நீங்க ஓட்டுக் கேட்டு போகும்போது, தொகுதிக்குத் தேவையான வசதிகள் கிடைச்சிடும். எல்லாத்துக்கும் 'நிதி' ஒதுக்கியாச்சு. அதனால எந்தக் கவலையும் இல்லாம, சந்தோஷமா வேலையைப் பாருங்க. வார்டு பொறுப்பாளர்கள் முகவர்களை முகம் கோணாம பாத்துக்கங்க'' என்றார்.

எல்லாத்துக்கும் நிதி வரும் என்பதைக் கேட்ட பிறகு தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். 6 நபர்கள் கொண்ட குழு பார்முலாவைத்தான் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க கையாளவிருக்கிறது என்கிறார்கள் நிர்வாகிகள். வழக்கமாக 60 சதவிகிதம் தான் வாக்குப் பதிவு நடக்கும். மீதமுள்ள 40 சதவிகிதத்தினர் வாக்களிக்க வருவதில்லை. ஆனால், எங்கள் 6 பேர் கொண்ட அணியினர், அப்படி வராதவர்களையும் அழைத்து வந்து வாக்களிக்க வைப்பார்கள். இதன் மூலமாக வாக்குப் பதிவு அதிகமாவதுடன், எங்கள் வெற்றியும் எளிதாகும்'' என்கிறார்கள். 

எது எப்படியோ, நிலக்கோட்டைத் தொகுதியைப் பொறுத்தவரை இனி, தேர்தல் வரை, தொண்டர்கள் காட்டில் மழைதான்.