Published:Updated:

`தேர்தல் செலவுக்கு எங்கே போவது?’ - தினகரனிடம் கொதித்த கட்சி நிர்வாகிகள்

எஸ்.மகேஷ்
`தேர்தல் செலவுக்கு எங்கே போவது?’ - தினகரனிடம் கொதித்த கட்சி நிர்வாகிகள்
`தேர்தல் செலவுக்கு எங்கே போவது?’ - தினகரனிடம் கொதித்த கட்சி நிர்வாகிகள்

`இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் செலவுக்கு என்ன செய்வது?’ என தினகரனிடம் கேள்வி எழுப்பியுள்ளனர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சிலர். 

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களில் 19 பேர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியதோடு, ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்தனர். இந்த விவகாரத்தில் கடைசி நேரத்தில் மனம் மாறினார் ஜக்கையன் எம்.எல்.ஏ. மற்ற 18 பேரையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர் தனபால். இதுதொடர்பான வழக்கில், `18 எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்கம் செல்லும்' என உத்தரவிட்டார் மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன். இந்த உத்தரவால் தினகரனின் ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ-க்களும் பதவியை இழந்தனர். இந்த `வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டோம்; தேர்தலை சந்திப்போம்' எனக் கூறிவிட்டார் தினகரன். 

இந்நிலையில், காலியாக உள்ள 18 தொகுதிகள் மற்றும் திருவாரூர், திருப்பரங்குன்றம் உட்பட 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகிறது தேர்தல் ஆணையம். ஆளுங்கட்சியான அ.தி.மு.க-வுக்கும் தேர்தல் முடிவுகள் சாதகமாக அமையுமா என்ற சூழலும் உள்ளது. `20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தால் அதன்மூலம் இந்த ஆட்சியைக் கைப்பற்றலாம்' என்ற நம்பிக்கையில் தி.மு.க உள்ளது.

இதற்கிடையில், தேர்தல் தொடர்பாக டி.டி.வி.தினகரனுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். அந்தக் கூட்டத்தில் தேர்தல் செலவு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, ஒரு முன்னாள் எம்.எல்.ஏ, `தேர்தலில் நான் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவது கடினம். கடந்தமுறை நான் போட்டியிட்டபோது கட்சித் தலைமையில் இருந்து தேர்தல் செலவுக்கு என்று ஒரு தொகை கொடுக்கப்பட்டது. அதுபோன்ற சூழல் தற்போது இல்லை. இதனால், இடைத்தேர்தலைச் சந்திப்பதைவிட மேல்முறையீடு செய்வோம்' என வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். இந்தக் கருத்தை முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சிலரும் ஆமோதித்துள்ளனர்.

இதை எதிர்பார்க்காத அ.ம.மு.க நிர்வாகிகள் சிலர், `தேர்தல் செலவுக்கான நிதியைத் திரட்டுவோம்' என்று கூறியுள்ளனர். தொடர்ந்து, நிதி திரட்டுவதற்கான பணிகளில் இறங்கியுள்ளனர். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு நிதி கிடைக்காததால் சோர்வுடன் திரும்பிவந்துள்ளனர். ஆளும்கட்சி தரப்பிலும் தேர்தல் பணிகளுக்காகக் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். `அவர்களில் பலர் தினகரனின் ஸ்லீப்பர் செல்கள்' எனத் தலைமைக்குப் புகார் சென்றுள்ளது. இதையடுத்தே, கூடுதல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.