`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்! | actor vijay sarkar movie at admk ex ministerr k.p.munusamy

வெளியிடப்பட்ட நேரம்: 02:06 (13/11/2018)

கடைசி தொடர்பு:07:30 (13/11/2018)

`நடிகர் விஜய் பலிகடா ஆகிவிட்டார்' - கே.பி.முனுசாமி சொல்லும் லாஜிக்!

கடந்த ஒராண்டுகளாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களும் குற்றாலத்திலும், ரிசார்ட்டிலும் இருந்துவிட்டு, தற்போது உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது தேர்தலுக்காக தினகரன் நடத்தும் நாடகம் தான். அ.ம.மு.க என்பது ஒரு கட்சியே கிடையாது. `சர்கார்' படத்தைத் தயாரித்தவர் மாறன் சகோதரர்கள். ஸ்டாலினை திருப்திப்படுத்தவே இதுபோன்ற படத்தை தயாரித்துள்ளனர். இதில் விஜய் பலிகடா ஆகி விட்டார் என தஞ்சாவூரில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். 

 

தஞ்சாவூரில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பிஎ.ஸ் கலந்துகொள்வார் என பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர் வரவில்லை. அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பல்வேறு நல்ல திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடைந்துள்ளது. தற்போது முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் ஜெயலலிதாவின் வழியில் நின்று பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். இதனால் 20 தொகுதிகளிலும் அதிகளவில் வாக்குகள் பெற்று அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும். கடந்த ஒராண்டுகளாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களும் குற்றாலத்திலும், ரிசார்ட்டிலும் இருந்து விட்டு, தற்போது உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது தேர்தலுக்காக தினகரன் நடத்தும் நாடகம் தான். மேலும் அ.ம.மு.க என்பது ஒரு கட்சியே கிடையாது.

தினகரன் அ.தி.மு.க-விலிருந்து வெளியேற்றப்பட்டவர். அவருக்கும் அ.தி.மு.கவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு சேர்க்கப்பட்ட உறுப்பினர்களில் சசிகலா பெயர் இல்லை. உறுப்பினராக இல்லாமலும், கட்சியிலும் இல்லாமல் இருப்பவர் எப்படி பொதுச் செயலாளராக முடியும். ஆர்.கே.நகரில் மக்கள் ஏமாந்ததால் தினகரன் டோக்கன் கொடுத்தார். ஆனால், தற்போது 20 தொகுதிகளிலும் அ.ம.மு.க-வினர் டெபாசிட் இழப்பார்கள். சந்திரபாபு  நாயுடு ஸ்டாலின் சந்தித்துக்கொண்டது அவர்களின் தேவைக்காக தான். ஸ்டாலினுக்கு வேறு வழி இல்லை அதனால்தான் எல்லோரையும் சந்திக்கிறார். அ.தி.மு.க வலுவான இயக்கமாக உள்ளது. அதனால் நாங்கள் யாரையும் சந்திக்கவேண்டிய அவசியம் இல்லை. 

ஏ.ஆர்.முருகதாஸ் கதையைத் திருடியதாக வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தது. கதை திருடியவர், சுய சிந்தனை இல்லாத அவர், அரசு சமூகத்தில் ஏற்றதாழ்வு இருக்கக் கூடாது என பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டு வருகிறது என்பது தெரியாமல் படம் எடுத்துள்ளார். `சர்கார்' படத்தை தயாரித்தவர் மாறன் சகோதரர்கள். இவர்கள் ஸ்டாலினை திருப்திப்படுத்தவே இதுபோன்ற படத்தைத் தயாரித்துள்ளனர். இதில் விஜய் பலிகடா ஆகி விட்டார். கருணாநிதி உயிருடன் இருந்திருந்தால் அவர்களுக்குப் பதவிகள் கிடைத்திருக்கும். ஆனால், அவர் உயிருடன் இல்லை. தற்போது ஸ்டாலின்தான் எல்லாம் என்பதால், அவரைத் திருப்தி படுத்தினால் பதவி கிடைக்கும் என்பதற்காகத் தான் இப்படி ஒருப் படத்தை எடுத்துள்ளனர்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close