Published:Updated:

`மோடி கருத்துக்கு உடன்பட்டாரா உர்ஜித்?’ - சர்ச்சையைக் கிளப்பிய சந்திப்பு

`மோடி கருத்துக்கு உடன்பட்டாரா உர்ஜித்?’ - சர்ச்சையைக் கிளப்பிய சந்திப்பு
`மோடி கருத்துக்கு உடன்பட்டாரா உர்ஜித்?’ - சர்ச்சையைக் கிளப்பிய சந்திப்பு

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நடந்துவரும் மோதலுக்கு நடுவில் பிரதமர் மோடியை ஆர்.பி.ஐ கவர்னர் சந்தித்து பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சமீபத்தில், ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு 3 கோரிக்கைகளை விடுத்தது. நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தனது கையிருப்புப் பணத்தில் பெரும்பகுதியை மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும் என்பது மூன்றில் ஒரு கோரிக்கையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு ரிசர்வ் வங்கி உடன்படவில்லை என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. இதனால் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இதையடுத்து கடந்த மாத இறுதியில், மும்பையில் நடந்த ‘ஏ.டி.ஷெராப் நினைவு’ நிகழ்ச்சியில் பேசிய மத்திய வங்கியின் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா இதை வெளிப்படையாகவே வெளியில் தெரிவித்தார். விராலின் பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்தது. இங்குதான் மத்திய அரசுக்கும், ஆர்பிஐ-க்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியது. இதையடுத்து ஆர்.பி.ஐ கவர்னர் உர்ஜித் படேலுக்கு மத்திய அரசு அதிகம் அழுத்தம் தருவதாகவும் இதனால், வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ள ரிசர்வ் வங்கியின் போர்டு கூட்டத்தில், படேல் ராஜினாமா செய்வார் எனக் கூறப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கடந்த வாரம் 9-ம் தேதி உர்ஜித் படேல், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்களின் சந்திப்பின்போது, மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான பிரச்னை மற்றும் இந்தியாவின் பொருளாதார நிலை ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், மத்திய அரசின் சில கோரிக்கைகளுக்கு உர்ஜித் படேல் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் நடைபெற்றுவரும் வேளையில் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.