Published:Updated:

புயலைக் கிளப்புமா நாடாளுமன்றக் கூட்டத்தொடர்?

புயலைக் கிளப்புமா நாடாளுமன்றக் கூட்டத்தொடர்?
புயலைக் கிளப்புமா நாடாளுமன்றக் கூட்டத்தொடர்?

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் (டிசம்பர்) 11-ம் தேதி கூடுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நாடாளுமன்றம் இப்போது கூடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அடுத்தாண்டு மே மாதத்துக்கு முன் நாடாளுமன்றத்துக்குப் பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, அடுத்தாண்டு இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே இப்போதைய மத்திய அரசு தாக்கல் செய்ய முடியும். மே மாதத்துக்குப் பின்னர் பதவியேற்கும் புதிய அரசுதான், அடுத்த நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்.

இந்த நிலையில், குளிர்காலக் கூட்டத்தொடரை டிசம்பர் 11-ம் தேதி முதல் வரும் ஜனவரி 8-ம் தேதிவரை 20 வேலைநாள்களுக்கு நடத்துவது என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, டிசம்பர் 11-ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது.

தற்போது தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. சத்தீஸ்கரில் முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. மற்ற மாநிலங்களில் வெவ்வேறு கட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 5 மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் 11-ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளின் தொடர்ச்சியாக, தேசிய அளவில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 
மத்தியில் ஆளும் பி.ஜே.பி-க்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ஆந்திர பிரதேச முதல்வரும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு. அண்மையில் சென்னை வந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினையும் அவர் சந்தித்து, பி.ஜே.பி-க்கு எதிராக தான் ஏற்பாடு செய்துள்ள பேரணியில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார். என்றாலும், ``காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி, கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்தால் மட்டுமே நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளால் பி.ஜே.பி-யை வீழ்த்த முடியும்" என்கிறார்கள் தீவிர அரசியலை உற்றுநோக்கி வரும் பார்வையாளர்கள்.

``அதே நேரத்தில் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளை நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாகவோ, மத்திய அரசின் மீதான மக்களின் எண்ண ஓட்டமாகவோ, நற்சான்றாகவோ எடுத்துக் கொள்ள முடியாது என்று ஆளும் தரப்பினர் சொல்லலாம். ஆனால், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பி.ஜே.பி. ஆட்சியில் உள்ள சூழலில் அந்த மாநிலங்களில் பி.ஜே.பி. தோல்வியடைந்தால், அது மாநில அரசியலில் மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்" என்கிறார்கள் அவர்கள்.

இதுபோன்ற இக்கட்டான நிலையில்தான் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்குகிறது. நாடாளுமன்றம் தொடங்கும் நாளன்றே, ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் நடைபெற்றிருப்பதாகக் கூறப்படும் ஊழல், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்து தெரிவித்து வருவது, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகள், சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம் போன்ற பல்வேறு பிரச்னைகளைக் கிளப்புவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இதற்கிடையே நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தர வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. முத்தலாக் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவது உள்ளிட்ட பல்வேறு செயல்திட்டங்களை இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்பதே மத்திய அரசின் நிலைப்பாடாக உள்ளது.

எது எப்படியாகினும், டிசம்பர் 11-ம் தேதி முதல், `நாடாளுமன்றத்தில் அமளி, முடங்கியது நாடாளுமன்றம்; இரு அவைகளிலும் கூச்சல்-குழப்பம்' போன்ற தலைப்புகளிலான செய்திகள் பத்திரிகைகளில் வெளிவருவது மட்டும் உறுதி.