Published:Updated:

14 நாள்கள்

14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
14 நாள்கள்

பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்

14 நாள்கள்

பெண்கள் உலகம்நிவேதிதா லூயிஸ்

Published:Updated:
14 நாள்கள்
பிரீமியம் ஸ்டோரி
14 நாள்கள்

டந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...

பூனைக்கு மணி கட்டிய புதுமைப் பெண்!

ர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்திலிருந்து பெங்களூருக்கு விதிமுறை மீறி தரப்பட்ட பணியிட மாற்ற உத்தரவை நீக்கக் கோரி கடந்த ஐந்து மாதங்களாகக் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் போராடி வந்தார் ரோகிணி சிந்தூரி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இட மாற்றம் வருவது வாடிக்கைதான் என்றாலும், ரோகிணி அதை சட்டப்படி எதிர்கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  ``தெரிந்த அதிகாரிகள் பலர், இந்த விஷப்பரீட்சை வேண்டாம் என்றுதான் என்னை எச்சரித்தனர். அது ஏன் என்று இத்தனை போராட்டத்துக்குப் பின்னரே எனக்குப் புரிகிறது. அரசை யாரும் எதிர்ப்பதில்லை. நாம் செய்யும் எந்த வேலையிலும் பேசுவதிலும் அரசு தவறு கண்டுபிடிக்க முடியும். ஆனால், அரசுடன் நீங்கள் இணக்கமாகப் போய்விட்டால் எந்தத் தொந்தரவும் இருப்பதில்லை” என்கிறார் ரோகிணி.

14 நாள்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தன் 25 ஆண்டுக்கால பணியில் 45 முறை பணிமாற்றம் செய்யப்பட்ட அஷோக் கேம்கா ஐ.ஏ.எஸ் பற்றி நினைவுகூரும் ரோகிணி, ``பூனைக்கு யாராவது மணி கட்டித்தானே ஆக வேண்டும்?’’ என்கிறார். ``சட்டப்படி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இடமாற்றம் என்று இருப்பதை நம் உரிமையாகக் கையில் எடுத்தால், ஆட்சியில் இருப்பவர்கள் நம்மைப் பந்தாட மாட்டார்கள்” என்றும் கூறுகிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரான மஞ்சுவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இவர் இறங்கியதே இடமாற்றத்துக்குக் காரணம் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அரசு பங்களாவை தேர்தல் நேர கட்சிப் பணிக்கு அமைச்சர் மஞ்சு உபயோகித்ததால், அதற்குப் பூட்டு போட்டார் ரோகிணி. இதனால், சித்தராமையா அரசால் ஏழே மாதங்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். எது எப்படியோ, மீண்டும் ஹாசனிலேயே டெபுடி கமிஷனராகப் பணியேற்று வலம்வருகிறார் ரோகிணி.

அடிச்சு ஆடுங்க அம்மணி... சட்டம் நம் கையில்!

``அரசியல் என்னைக் கொன்றுவிடும்!’’

மெரிக்காவில் பிரபல டாக் ஷோ நடத்தும் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான ஓப்ரா வின்ஃப்ரே,  `வோக்’ என்கிற ஆங்கிலப் பத்திரிகைக்கு சமீபத்தில் பேட்டி அளித்திருந்தார். அதில், “அரசியலில் பொய்கள், முதுகில் குத்துவது என்று கேவலமான விஷயங்கள் இருக்கின்றன. அந்தக் குப்பையில் என்னால் நீடிக்க முடியாது. அரசியல் என்னைக் கொன்றுவிடும்” என்று கூறியிருக்கிறார். கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற கோல்டன் குளோப் விருதுகள் விழாவில் அவர் ஆற்றிய அசத்தலான உரையைக் கேட்ட ஊடகங்கள், வரும் 2020-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் ஓப்ரா போட்டியிடப் போவதாக யூகத்தை முன்வைத்தன. அவை அத்தனையையும் உடைத்து நொறுக்கியிருக்கிறார் ஓப்ரா.

14 நாள்கள்

அரசியல் நிலைப்பாடு எடுக்கவில்லை என்றாலும், `மீ டூ’,  `டைம் இஸ் அப்’, பாலியல் வன்முறைக்கு எதிரான இயக்கங்கள் என்று சமூகப் பணியைச் சத்தமின்றி செய்து வருகிறார். `மாற்றம் நிச்சயம் வரும்' என்று தான் நம்புவதாகக் கூறும் ஓப்ரா, “இது இருண்ட காலம் என்று கூறுபவர்கள் அதிகம். ஆனால், நான் அதை அவ்வாறு பார்க்காமல், இப்போதாவது விழிக்கத் தொடங்கிவிட்டோமே என்று நினைத்துப் பார்க்கிறேன்” என்கிறார்.

ஹ்ம்ம்ம்… நம்ம எப்போ விழிக்க ஆரம்பிக்கிறது?!

வாலிபால் வல்லபி!

19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் இந்திய கைப்பந்து அணியின் தலைவியாக, தமிழக மாணவி ஷாலினி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் பி.கே.ஆர் மகளிர் கலைக்கல்லூரி மாணவியான எஸ்.ஷாலினி, சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்த விவசாயியின் மகள். புனேவில் நடந்த ஆசிய அளவிலான மகளிர் கைப்பந்து தேர்வுப் போட்டிகளில் விளையாடி வந்தார். இப்போட்டிகளில் விளையாடியவர்களில் 12 பேர், 19 வயதுக்குட்பட்ட இந்திய கைப்பந்து அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டனர். அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் ஷாலினி. பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே தன் தந்தை தன்னைக் கைப்பந்து விளையாட்டில் சேர்த்துவிட்டதாகக் கூறும் இவர், அப்பாவின் நண்பரான பயிற்சியாளர் சேகரால்தான் விளையாட்டின் மீது அப்பாவுக்கு ஆர்வம்வந்தது என்று கூறுகிறார்.

14 நாள்கள்

அப்பாவின் ஆர்வத்துக்காக முதலில் விளையாடத் தொடங்கியவருக்கு, தானாகவே கைப்பந்து ஜுரம் தொற்றிக்கொண்டது. கல்லூரியில் சேர்ந்த பிறகு பயிற்சியாளர் மாற, புதிய நுட்பங்களைக் கற்றுக்கொண்டார். கோழிக்கோட்டில் நடைபெற்ற இந்திய அணிக்கான தேர்வில் கலந்துகொண்டு தேர்வான 24 பேரில் இவரும் ஒருவர். `கைப்பந்து போட்டிகளில் சிறப்பாக விளையாடி நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே என்் அடுத்த இலக்கு' என்று கூறும் ஷாலினியைப் பாராட்டி ஏடிஜிபி ஷைலேந்திரபாபு தன் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். கிராமத்துப் பின்னணியில் இருந்து சிறு விவசாயியின் மகள் இந்த நிலையை அடைந்திருப்பதை சமூக வலைதளங்களில் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

சபாஷ்... ஷாலினி!

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர்!

மிழகத்தின் பரமக்குடியைச் சேர்ந்த திருநங்கை சத்யஸ்ரீ ஷர்மிளா. சேலம் சட்டக்கல்லூரியில் 2007-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்திருந்தார். “சிறுவயதிலேயே நான் திருநங்கை என்பதை உணர்ந்துகொண்டேன். திருநங்கைகளின் வாழ்க்கை முறை, அவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து அதிகம் தேடி அறிந்தேன். என் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற சட்டம் படித்தேன். பின்னாளில் எனக்கும் என் போன்றோருக்கும் இது உதவும் என்பதும் நான் சட்டம் படிக்க ஒரு காரணம்” என்று கூறும் இவர், பார் கவுன்சிலில் தன்னைத் திருநங்கை என்று பதிவுசெய்ய விரும்பியதாகத் தெரிவித்தார். 2014-ம் ஆண்டு ‘நால்சா’ தீர்ப்புக்குப் பிறகே இந்தியாவில் மூன்றாம் பாலினருக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது என்று கூறும் சத்யஸ்ரீ, புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்ய சட்டம் பயின்ற 11 ஆண்டுகள் கழித்து விண்ணப்பித் தது கண்டு வழக்கறிஞர்கள் அதிர்ச்சி அடைந்ததைக் குறிப்பிடுகிறார்.

14 நாள்கள்

திருநங்கைகளுக்கு இன்னமும் சமுதாய அங்கீகாரம் இல்லை என்று வருந்தும் சத்யஸ்ரீ, ``நிற்கக்கூட இடமில்லாத ரயிலிலும் எங்களுக்கு அருகே உள்ள இருக்கைகள் காலியாகவே இருக்கும்’’ என்று வருந்துகிறார், ``மூன்றாவது நபருக்கு இது ஒரு சிறிய விஷயமாகத் தெரியலாம், என்னைப் பொறுத்தவரை  இது ஒரு பெரிய உளவியல் சிக்கல். அந்த வலி எனக்குத்தான் தெரியும்’’ என்கிறார். ``கிடைத் திருக்கும் அங்கீகாரத்தைக்கொண்டு, என் உழைப்பு மற்றும் அனுபவங்களை வைத்து திருநங்கைகளைப் பாதிக்கும் பிரச்னைகளைக் களைய முனைவேன்’’ என்று தன்னம்பிக்கை யுடன் கூறுகிறார் இவர்.

பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் திருநங்கைகளும்தான்!